Friday, January 25, 2008

அஜ்மானில் முப்பெரும் விழாவில் அரபியரைக் கவர்ந்த தமிழக கரகாட்டம்

அஜ்மானில் முப்பெரும் விழாவில் அரபியரைக் கவர்ந்த தமிழக கரகாட்டம்

அஜ்மான் அமீரக தமிழர்கள் அமைப்பு மற்றும் ஷார்ஜா தமிழ்நாடு பண்பாட்டுக் கழகம் 25.01.2008 வெள்ளிக்கிழமை அஜ்மான் ஜுவல் பேலஸில் நடத்திய பக்ரீத், கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் ஆகிய முப்பெரும் விழாவில் தேசிய விருது பெற்ற ரமேஷின் கரகாட்டத்தை சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த அரபியரைக் கவர்ந்திருந்தது.

துவக்கமாக அஜ்மான் அமீரக தமிழர்கள் அமைப்பின் மூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஷேக் காலித் பின் சயீத் அல் நுயமி, முஹம்மது அப்துல்லாஹ் அல்வான், சுல்தான் அப்துல்லாஹ் ராஷித் அல் மத்ரூஸி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னை உலக நட்புறவுக் கழகத்தின் சார்பில் 'சாதனையாளர்' விருது இலக்கியத்திற்காக கவிஞர் பா. இராமலிங்கம், மருத்துவ சேவைக்காக குடந்தை அன்பு மருத்துவமனை நிறுவனர் சாக்கோட்டை க. அன்பழகன், கல்விப் பணிக்காக நவநீதகிருஷ்ணன், சிவ் ஸ்டார் பவன் கோவிந்தராஜன், அண்டா டிராவல்ஸ் மேலாளர் பொதக்குடி ஜெய்னுலாபுதீன், சென்னை டாக்டர் பி. தங்கராஜ், டாக்டர் சுந்தரம், பாபு தாமஸ் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது.

விழாவில் வாழ்த்துரை வழங்கிய குடந்தை அன்பு மருத்துவமனை நிறுவனர் க. அன்பழகன் தமிழகத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்தியாவின் உயர்வுக்கு அண்ணியச் செலவாணி மூலம் முக்கியப் பங்காற்றி வருவது வெளிநாடு வாழ் இந்தியர்களே என்றார்.

ஈடிஏ ஸ்கை எக்ஸ்பிரஸ் இயக்குநர் சென்னை சங்கமத்தில் இருப்பது போன்ற உணர்வை இவ்விழா ஏற்படுதியதாக குறிப்பிட்டார். தமிழர்களின் உயர்வுக்கு காரணமாக இருந்து வரும் அஜ்மான் ஷேக்கைப் பாராட்டினார். இதய நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தனராஜ் மற்றும் சிறுநீரக கோளாறு ஏற்பட்டு உயிரிழந்தவர்களுக்கு அஜ்மான் மூர்த்தியுடன் இணைந்து அவர்களது குடும்பத்திற்கு உதவித்தொகையை வழங்கினார்.

அஜ்மான் இந்திய சங்க பொதுச்செயலாளர் அஹ்மத் கான், மன்னார்குடி சமூக சேவகர் கே. மலர்வேந்தன் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.

பேராசிரியர் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி குழுவினரின் நாட்டுப்புறப்பாடல் இசை நிகழ்ச்சி மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை ஆர்ப்பரிக்க வைப்பதாய் அமைந்திருந்தது.

குழந்தைகளின் கலை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்டதாய் முப்பெரும் விழா இருந்தது.விழா சிறப்புற நடைபெற அஜ்மான் மூர்த்தி தலைமையிலான குழுவினர் சிறப்புடன் செயல்பட்டனர்.

நிகழ்ச்சியினை சங்கமம் தொலைக்காட்சியின் இயக்குநர் கலையன்பன் தொகுத்து வழங்கினார்.

தேசிய விருது பெற்ற ரமேஷின் கரகாட்டம்



விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள்