Thursday, July 17, 2008

துணை ஜனாதிபதியுடன் பேராசிரியர் சந்திப்பு!

துணை ஜனாதிபதியுடன் பேராசிரியர் சந்திப்பு!

சிறுபான்மை சமூகத்தின் முதல் கவனம் கல்வி, சமூக நலத்திட்டங்களில்தான் இருக்க வேண்டும் என தம்மை சந்தித்த பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. தலைமையிலான குழுவினரிடம் இந்தியக் குடியரசு துணைத் தலைவர் அன்ஸாரி கேட்டுக் கொண்டார்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி., தமிழ்நாடு சிறுபான்மையினர் நிதி மேம்பாட்டுக் கழக தலைவர் சேவியர் அருள்ராஜ், தென்னக ரயில்வே சென்னை கூடுதல் மேலாளர் சுல்தான் முசாதிக், மஜ்லிஸே முஸாவராத் தலைவர் டாக்டர் சத்தார், திருச்சி எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரி தலைவர் அப்துல் ஹக், பொருளாளர் நல்லாசிரியர் அப்துல் முத்தலிப், சித்திக் அஹமது, சென்னை பார்த்தியா மேல்நிலைப்பள்ளி தாளாளர் நஸீமா பேகம், தென்சென்னை மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர் கே.பி.இஸ்மத் பாஷா ஆகியோர் நேற்று (ஜூலை 14) மாலை இந்திய குடியரசு துணைத்தலைவர் அன்ஸாரியை புதுடெல்லியில் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.

சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை:
நீதிபதி சச்சார் குழு பரிந்துரையின் அடிப்படையில் சிறுபான்மை மாணவர்களுக்கு தற்போது கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், இந்த உதவிகள் அனைத்தும் மாணவர்களின் மதிப்பெண் தகுதி அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன. இதனால் கல்வியில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின ஏழை மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை கிடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண் அடிப்படையில் கல்வி உதவித் தொகை வழங்கியது போல், சிறுபான்மையின மக்களுக்கும், குறைந்தபட்ச மதிப்பெண் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கினால் கிராமப்புறங்களை சார்ந்த பின்தங்கியுள்ள ஏழை மாணவர்களும் பயன்பெறுவர் என இக்குழுவினர் குறிப்பிட்டனர்.

குஜராத், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் இத்தகைய கல்வி உதவித் தொகை வழங்கப்படுவதே இல்லை. சச்சார் குழு பரிந்துரையின் அடிப்படையில் வழங்கப்படும் மத்திய அரசின் மானியங்கள் கூட திருப்பி அனுப்பப்படுகின்றன என்ற அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. இதில் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டனர்.

வக்ஃப் அபிவிருத்தி:
மேலும், வக்ஃப், செய்யப்பட்டுள்ள சொத்துக்களின் ஆக்கிரமிப்புக்கள் செய்திருப்பவர்களை அகற்றுவதோடு அந்த சொத்துக்களை அபிவிருத்தி செய்வதற்கு தனி திட்டங்கள் செயல்படுத்த வலியுறுத்தினர்.

குழுவினரின் கோரிக்கைகளை கேட்டறிந்து குடியரசு துணைத் தலைவர் மத்திய - மாநில அரசுகள் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்படும் என்றார்.

சிறுபான்மையினருக்கு இன்று ஏராளமான திட்டங்கள் தீட்டப்படுகின்றன. அரசு அமைத்த குழுக்களின் பரிந்துரையில் நிறைய பலன் கிட்டியுள்ளது. ஆனால் இவைகள் மக்களுக்குப் போய் சேரவேண்டும். அரசு திட்டங்கள் பத்திரிகை விளம்பரத்தால் முழுமையாக மக்களை போய் சென்றடையாது.

ஜமாஅத் அமைப்புகள், பள்ளிவாசல் ஜும்ஆ மேடை, பொது நல அமைப்புகள் மூலம் தனி பிரச்சாரம் செய்யப்பட்டு இந்த நல்ல பலன்கள் உரியவர்களை சென்றடைய வாய்ப்பு ஏற்படுத்தித் தர சிறுபான்மை அமைப்புக்கள் முன்வர வேண்டும்.

கவ்வியில் முதல் கவனம் வேண்டும்:
இன்றைய காலகட்டத்தில் சிறுபான்மையினரின் முழு முதல் கவனமும் கல்வி, சமூக நலத் திட்டங்களில்தான் இருக்க வேண்டும் என வலியுறுத்திய குடியரசு துணைத் தலைவர், சிறுபான்மையினர் அனைவரும் கல்வி கற்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும். மேற்கு வங்கத்தில் முஸ்லிம்கள் நடத்தும் ஒரு கல்வி நிறுவனத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினேன்.

ஆனால், அதில் ஒரு முஸ்லிம் மாணவர் கூட இல்லை. இதுபற்றி விசாரித்தபோது அந்த கல்வி நிறுவனத்தின் தரம் அறிந்து அனைவருமே அதில் சேர்ந்துள்ளனர் என தெரிய வந்தது. திறமையாக கல்வி நிறுவனம் நடத்துகின்றவர்கள் தங்கள் சமுதாயத்தில் திறமை மிக்க மாணவர்களை உருவாக்கவும் முன்வர வேண்டும்.

இவ்வாறு தம்மை சந்தித்த குழுவினரிடம் குடியரசு துணைத்தலைவர், அன்ஸாரி கேட்டுக் கொண்டார்.

www.muslimleaguetn.com