இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் நடத்தும் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய 2 ஆவது மாநாடு
இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் தனது மற்றுமொரு இலக்கிய மாநாட்டை இவ்வருடம் ஜூலை மாதத்தில் கொழும்பில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
1999 இல் ஆரம்பிக்கப்பட்ட இவ்வமைப்பு தனது பத்தாவது நிறைவு விழாவையும் இம்மாநாட்டுடன் சேர்த்துக் கொண்டாடவிருக்கிறது. கடந்த 2002 ஆம் ஆண்டு அரச அனுசரணையுடன் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டை நடத்திய இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் 2008 ஆம் ஆண்டில் புலவர்மணி ஆ. மு. ஷரிபுத்தின் நூற்றாண்டு விழாவையும் வெற்றிகரமாக நடத்தி முடித்தது. 2007 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக்கும் இவ்வருடம் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் நடத்திய ஒரு நாள் காப்பியக் கருத்தரங்குக்கும் ஒத்தாசையாக செயற்பட்டது.
தற்போது தமிழகத்தின் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் ஒரு சகோதர இயக்கமாகவும் இயங்கும் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் இவ்வருடம் இலக்கிய மாநாட்டை உள்ளூர்ப் புரவலர்களின் ஆதரவுடன் இரண்டு தினங்களுக்கு நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது.
கடந்த காலங்களில் இந்தியாவிலும் இலங்கையிலும் இடம்பெற்ற மாநாடுகள் இஸ்லாமிய பழந்தமிழ் இலக்கியங்கள் பற்றி விரிவாகப் பேசியதுடன் அழியும் நிலையிலிருந்த பல முன்னோரிலக்கியங்களையும் மீள் பதிப்புச் செய்து சமூகத்தின் பயன்பாட்டுக்கும் இருப்புக்கும் ஆதாரமாகச் செயற்பட்டுள்ளன. தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாடு 1960 க்கும் பின்னரான இலங்கையின் முஸ்லிம் படைப்பாளிகளைப் பற்றியும் அவர்களது படைப்புக்கள் பற்றியும் பேசுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
முதல் நாள் சம்பிரதாயபூர்வமாக மாநாடு தொடக்கி வைக்கப்படுவதுடன் உள்நாட்டு, வெளிநாட்டு அறிஞர்களதும் பிரமுகர்களதும் உரைகளும் இடம்பெறும். இரண்டாம் நாள் ஆய்வரங்கில் வளவாளர்கள் தமது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிப்பார்கள். அதனைத் தொடர்ந்து இசையரங்கும் பாராட்டு அரங்கும் இடம்பெறும். இதில் இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் தீர்மானித்துள்ள அறிஞர் பெருமக்களும் சிரேஷ்ட ஊடகவியலாளர்களும் கௌரவிக்கப்படுவார்கள். இம்மாநாட்டின் கவியரங்கில் இலங்கைக் கவிஞர்கள் பங்கு கொள்வார்கள். இறுதி நிகழ்வு சிறப்புரைகளுடனும் நாடகத்துடனும் நிறைவு செய்யப்படும்.
இம்மாநாட்டுக்கு இந்தியா, மலேஷியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்தும் பேராளர்கள் பலர் வருகை தரவுள்ளனர். இலங்கைப் பேராளர்களாக இலக்கியவாதிகள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் முந்நூறு பேரை மாத்திரமே பதிவு செய்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையர்களான யாரும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் என்ற போதும் இலக்கியவாதிகளும் இலக்கிய ஆர்வலர்களும் முன்னுரிமை பெறுவார்கள்.
இதுபற்றிய விபரங்கள் விரைவில் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படவுள்ளன.
மாநாடு பற்றிய மேலதிக விபரங்களை பின்வரும் தொலைபேசி இலக்கங்களில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும். டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் - 011 2730378 - 077 2721244, அஷ்ரஃப் சிஹாப்தீன் - 0777 303 818, டாக்டர் தாஸிம் அகமது - 011 2438801 - 077 966 4063 மாநாட்டில் இடம் பெற வேண்டிய விடயங்கள் குறித்த முன்மொழிவுகளை யாரும் எழுத்து மூலம் தெரிவிக்க முடியும்.
அனுப்ப வேண்டிய முகவரி
President, Sri Lanka Islamic Iiterary research forum, 16 School Avenue, Off Station Road, Dehiwala.