Sunday, August 22, 2010

அண்ணலாரின் அழகிய பூமியில் நோன்பின் மாண்பு

அண்ணலாரின் அழகிய பூமியில் நோன்பின் மாண்பு
மௌலானா தளபதி ஏ. ஷஃபீகுர் ரஹ்மான்

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

முப்பத்தி எட்டு ஆண்டுகளாக மாண்புமிகு மதீனாவிலும் புனிதமிகு மக்காவிலும் நோன்பின் மாண்பை அனுபவித்து மகிழ்ந்த இனிய நிகழ்வுகளை தங்களிடையே பகிர்ந்துக்கொள்வதில் மகிழ்வெய்துகிறேன் .

உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டிருக்கிறது .நீங்கள் வல்ல அல்லாஹுத்த ஆலாவின் கட்டளையை ஏற்று வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களின் அழகிய முன்மாதிரியை பேணிப் பின்பற்றி அல்லாஹுத்த ஆலாவின் அருள் புத்துக் குலுங்கும் புனித ரமலானின் பிறை தெரிந்த செய்தி சவூதி அரசால் அறிவிக்கப்பட்டதும் ஒவ்வொரு வரும் தங்களின் பெற்றோர்கள் பிள்ளைகள் சகோதர சகோதரிகள் குடும்பத்தினர்கள் நண்பர்கள் ஆகியோரை தேடிச்சென்றும் தொலைபேசி மூலமும் அஹ்லன் வஸஹ்லன் ரமலான் முபாரக் என்று வாழ்த்தை தெரிவித்து மகிழ்வார்கள் .மாண்புமிகு மஸ்ஜிதுன் நபவி எனும் பெருமானார் அவர்களின் மஸ்ஜிதில் தொழச்செல்லும் லட்சக்கணக்கான தீனோர்களும் ஒருவரை ஒருவர் சந்தித்து தங்களின் ரமலான் முபாரக் இனிய வாழ்த்துச் செய்தியை தெரிவித்து பூரிப்படைவார்கள்.

நம் உயிருக்குயிரான - உயிரினும் மேலான நபிகள் பெருமானார் ரசூலே கரீம்( ஸல் ) அவர்கள் எங்கு பிறந்தார்களோ - வணங்கினார்களோ எந்த இடத்தில நோன்பு கடமையாக்கப்பட்ட வஹீ அருளப்பட்டதோ அந்த இடத்தில் நபிகள் பெருமானார் ரசூலே கறீம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றார்களோ, இஃதிகாப் இருந்தார்களோ - கியம்லைல் தொழுகை தொழுதார்களோ தொழவைத்தார்களோ அந்த இடத்தில் நோன்புப் பெற்றிருக்கும் மாண்பை சொல்லவா வேண்டும்?

வள்ளல் நபிகள் பெருமானார் அவர்கள் தொழுத -தொழவைத்த புனித மஸ்ஜிதுன் நபவியில் இன்றும் நோன்பு திறக்கும் காட்சி அற்புதமானது லட்சக்கணக்கான மக்கள் நோன்பு திறக்கும் இடத்தில் இன்னமும் அந்த அமைதியை பார்க்கிறோம் நோன்பு திறக்கும் நேரத்தில் புனித ரவ்லா ஷரீபில் சென்றால் ஒவ்வொருவர்களும் மற்ற சகோதரர்களை உபசரித்து மகிழும் காட்சி கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் கல்புக்கு மகிழ்ச்சியாகவும் இருக்கிறது .

மக்கா முகர்ரமாவிலுள்ள அருள்மிகு புனித ஹரம் ஷரீபிலும் மதீனா முனவ்வராவிலுள்ள புனித மஸ்ஜித் நபவியிலும் நோன்பின் மாண்பு அழகாகவும் அற்புதமாகவும் இருக்கிறது .நோன்பின் மாண்பை மக்காவிலும் ,மதீனாவிலும் அனுபவித்து இன்புற்று மகிழ்ந்திட உலகெங்குமிருந்தும் இறை நேசர்களின் கூட்டம் உம்ராவுக்காக அணி அணியாக வந்துக்கொண்டிருக்கிறது பார்க்கும் இடம் எல்லாம் தீனோர்களின் கூட்டம் தான் மக்கா முகர்ரமாவில் புனித மிகு ஹரம் ஷரீபில் ஒரு கூட்டம் தொழுது மகிழ்ந்து கொண்டிருக்கும் மற்றொரு கூட்டம் தவாஃபு செய்து மகிழ்ந்துக்கொண்டிருக்கும்,மேலும் திருக்குர்ஆன் ஷரீப் ஓதிக்கொண்டும் ,இயலாதவர்கள் கஃபத்துல்லாஹ்வை பார்த்து மகிழ்ந்துக்கொண்டும் இருப்பார்கள் இத்தகைய இனிய காட்சிகளை எல்லாம் பார்க்கும் நம் நெஞ்சம் மகிழ்கிறது .அருள்மிகு புனித ரமலானில் உம்ராவை நிறைவேற்றி தவாஃபு நிறைவு செய்திடவும் .வள்ளல் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் புனிதமிகு ரவ்லா ஷரீபில் சலாம் சொல்லி மகிழ்ந்திடவும் சுவனத்தின் சோலை வளமான ரவ்லா ஷரீபில் தொழுது மகிழ்ந்திடவும் நம் அனைவருக்கும் கருணையுள்ள ரஹ்மான் அருள் புரிவானாக ! ஆமின் .


plz visit us http://www.moulanathalabathy.blogspot.com/