திருக்குறள் - ஒரு அறிமுகம்
தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள்.
இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங் களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல்.
இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். இவருடைய இயற்பெயர் என்ன என்பதுவும் மேற்கொண்ட விபரங்களும் சரிவரத்தெரியவில்லை. இவரைப்பற்றிச் செவிவழிமரபாகச் சில செய்திகள் விளங்குகின்றன. ஆனால் அறுதியான வரலாறு கிடையாது. அந்தச் செய்திகளின் வாயிலாகப்பெறும் தகவல்களின்படி, இவர் வள்ளுவ மரபைச்சேர்ந்தவர் என்றும், மயிலாப்பூரில் வசித்தவர் என்றும் தெரிகிறது; இவருடைய மனைவியார் வாசுகி அம்மையார்.கற்பியலுக்கு மிகச்சிறந்த இலக்கணமாக விளங்கியவர். வள்ளுவர் தாம் எழுதிய முப்பால் நூலை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு அரங்கேற்றியதாகவும் அச்செய்திகள் வாயிலாக அறிகிறோம்.
திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர் என்றும் சில சிறப்புப்பெயர்களால் அழைப்பர்.
பிற்காலத்தில் திருவள்ளுவர் பெயரால் வேறு சிலநூல்களை வேறு சிலர் இயற்றியுள்ளனர். அவை சித்தர் இலக்கியத்தைச் சேர்ந்தவை.
திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. கிருஸ்துவ சகாப்தத்தின் முன் பகுதியைச் சேர்ந்ததாகப் பலர் கருதுவர்.
பழந்தமிழ் நூல்களில் நான்கு பெரும் பகுப்புக்கள் உள்ளன.
1.எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவை அடங்கிய பதினென்மேல்கணக்கு
2.பதினென்கீழ்க்கணக்கு
3.ஐம்பெருங்காப்பியங்கள்
4.ஐஞ்சிறு காப்பியங்கள்
ஆகியவை அவை.
அவற்றில் பதினென்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு இந்நூல் விளங்குகின்றது.
"அறம், பொருள், இன்பம்", ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய ஆகிய இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்துபாடல்களைத் தன்னுள் அடக்கியது.
இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆகிய அக்காலத்திய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான்.
குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.
"பாயிரம்" என்னும் பகுதியுடன் முதலில் "அறத்துப்பால்" வருகிறது. அதிலும் முதலில் காணப்படுவது , "கடவுள் வாழ்த்து" என்னும் அதிகாரம். தொடர்ந்து, "வான் சிறப்பு", "நீத்தார் பெருமை", "அறன் வலியுறுத்தல்", ஆகிய அதிகாரங்கள்.
அடுத்துவரும் "இல்லறவியல்" என்னும் இயலில் 25 அதிகாரங்கள்; அடுத்துள்ள துறவறவியலில் 13 அதிகாரங்களுடன் முதற்பாலாகிய அறத்துப்பால் பகுதி முடிவுறுகிறது.
அடுத்து வரும் "பொருட்பாலி"ல் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களும் உள்ளன.
கடைசிப்பாலாகிய "இன்பத்துப்பால்" அல்லது "காமத்துப்பாலி"ல் இரண்டு இயல்கள்; களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களும் உள்ளன. ஆகமொத்தம் 7 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள்.
திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் வள்ளுவர் பாடியுள்ளார். ஆனால் இவற்றில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.
"அகரம் முதல வெழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு...."
என்று தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய "அ" வில் ஆரம்பித்து, 1330 ஆம் குறளாகிய,
"ஊடுதல் காமத்திற்கின்பம்; அதற்கின்பம்,
கூடி முயங்கப்பெறின்"
என்று தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய "ன்" னுடன் முடித்திருக்கிறார்.
வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை.
பழங்காலத்தில் இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் தற்சமயம் சிறப்பாகக் கருதப் படுவது திருக்குறள் முனுசாமியின் உரை.
தனிமனிதனுக்கு உரிமையானது இன்பவாழ்வு; அதற்குத் துணையாக உள்ளது பொருளியல் வாழ்வு; அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு. மனதே எல்லாவற்றிற்கும் ஆதார நிலைக்கலன்; மனத்துக்கண் மாசிலன் ஆதலே அனைத்து அறம்; அறத்தால் வருவதே இன்பம். அறவழியில் நின்று பொருள் ஈட்டி, அதனைக்கொண்டு இன்பவாழ்வு வாழ வேண்டும். அவ்வாறு உலகமாந்தரும் இன்பமுறச் செய்யவேண்டும். பொருளியலாகிய பொதுவாழ்வுக்கும் இன்ப இயலாகிய தனிவாழ்வுக்கும் அடிப்படை அறம்தான் என்பது திருக்குறளின் மொத்தமான நோக்கு.
உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
"மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"
http://www.thirukkural.com/
http://ta.wikisource.org/wiki/திருக்குறள்