முஸ்லிம்களுக்கு ஊடகங்களைப் பயன்படுத்தத் தெரியவில்லை
பிறப்புரிமை, கைதியின் கதை ஆகிய ஆவணப் படங்களை இயக்கி, தமிழக முஸ்லிம்களின் கவனத்தை ஈர்த்தவர் ஆளூர் ஷாநவாஸ். இளம் ஆவணப்பட இயக்குனரான அவர், தற்போது காயிதே மில்லத் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படமாக எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். முஸ்லிம்களின் பிரச்சனைகளை, வரலாறுகளை, சேவைகளை பொது சமூக மத்தியில் எடுத்துச் செல்ல ஆவணப்படங்கள் தான் மிகச் சரியான ஆயுதம் எனச் சொல்லும் ஷாநவாஸ் உடன் ஒரு நேர்காணல்.
பல்வேறு விசயங்களை மையப்படுத்தி மேலும் சில புதிய ஆவணப்படங்களை இயக்கும் பணியில் ஈடுபட்டுள்ளீர்கள். ஆவணப்படம் என்பது என்ன?
Documentary என்பதை ஆவணம் என்ற பாரம்பரியமான தமிழ்ச் சொல் குறிக்கும். அதனால் Documentary Film என்ற பதத்தை ஆவணப்படம் என்று நல்ல தமிழில் இன்று அழைக்கின்றோம். இதற்கு முன் இச்சொல்லை தகவல் படம், விவரணப் படம், செய்திப் படம் என்றெல்லாம் கூட அழைத்தார்கள். ஆனால் காலப்போக்கில் ஆவணப்படம் என்ற பெயர் சூட்டப்பட்டு அதுவே பொருத்தமானதாய் ஏற்றுக் கொள்ளப்பட்டு நிலைத்திருக்கிறது.
ஆவணப்படங்களால் என்ன மாதிரியான பயன்பாடுகள் விளையும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
கதை தழுவாமல் யதார்த்தத்தை பிரதிபலிப்பவைகளே ஆவணப்படம் என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மக்களின் அன்றாட வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டுவதன் மூலம் ஆவணப்படங்கள் பார்வையாளர்களை ஈர்க்கிறது.
உதாரணத்திற்கு, பாரன்ஹீட் 9/11 என்ற ஆவணப்படத்தை எடுத்துக் கொள்ளலாம். அமெரிக்கத் திரையுலக வரலாற்றில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த ஆவணப்படத்தை மைக்கேல் மூர் [http://www.michaelmoore.com] என்பவர் இயக்கி இருந்தார். செப்டம்பர் 11 இல் அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப் பட்ட நிகழ்வை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த அந்தப் படம் அமெரிக்க ஆட்சியாளர்களைத் தோலுரித்துக் காட்டியது.
ஊடகங்கள் அனைத்தும் அமெரிக்காவின் கைக்கூலிகளாகவும், ஊது குழலாகவும் மாறியிருந்த நிலையில், இந்த ஆவணப்படம் மட்டுமே உண்மையின் பக்கம் நின்று உரத்து முழங்கியது.
உலகம் முழுவதும் ஜனநாயகத்தையும், அமைதியையும் ஏற்படுத்த பாடுபடுவதாகக் கூறிக் கொள்ளும் தங்கள் ஆட்சியாளர்கள், உண்மையில் எப்படிப்பட்ட பயங்கரவாதிகள் என்பதை அமெரிக்க மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது இந்தப்படம் தான்.
கேன்ஸ் திரைப்பட விழாவில், 2004 ஆம் ஆண்டின் சிறந்த ஆவணப்படமாகத் தேர்வு செய்யப்பட்டு 'பாம்டி' விருதை இப்படம் பெற்றது. உலகம் முழுவதும் திரையிட்ட இடங்களில் எல்லாம் கோடிக்கணக்கில் வசூலையும், மிகப்பெரும் மாற்றத்தையும் ஏற்படுத்திக் காட்டியது இந்த ஆவணப்படம்.
வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், இணையதளம், பத்திரிகைகள் என்று சக்தி வாய்ந்த ஊடகங்கள் பல இருக்கும்போது ஆவணப்படம் என்ற ஒன்று தனியாக எதற்கு?
'சினிமா மிகச் சிறந்த மக்கள் தொடர்பு சாதனம் தான். ஆனால் அது நம் கைகளில் இல்லையே' என்று ரஷ்யப் புரட்சிக்கு முன்னரே வருத்தப்பட்டுக் கூறினார் லெனின். அவரது கனவை ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர், ரஷ்ய இயக்குனர்கள் ஆவணப்படங்களின் மூலமே நனவாக்கினர்.
'அதிவேகமாக ஓடிக்கொண்டிருக்கும் பெரிய ஊடக நிறுவனங்களால் புறக்கணிக்கப்படுவதாகக் கருதும் அனைத்து வகைப் போராளிகளும் தற்போது தாங்களே ஊடகங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்' என்று, இந்திய அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் விரியுரையாளராகப் பணியாற்றிய ரவி சுந்தரம் 'இந்தியா டுடே' யில் எழுதி இருந்தார். அவரது இந்தக் கூற்றைத்தான் நாங்கள் இப்போது செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.
இன்று உலக அளவில் இஸ்லாம் பயங்கரவாத மார்க்கமாகப் பார்க்கப்படுகிறது. முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். இதற்கு முக்கிய காரணமே ஊடகங்கள்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. முஸ்லிம்களைத் தவறாக சித்தரிப்பதில் வேகம் காட்டும் இதே ஊடகங்கள், முஸ்லிம்கள் தரப்பு நியாயத்தை மட்டும் வேண்டுமென்றே புறக்கணிக்கின்றன. இத்தகைய சூழலில் நமக்கான ஆயுதத்தை நாம்தான் கையில் எடுக்க வேண்டும். சுற்றிலும் எதிரிகள் நின்று தாக்கும் போது திருப்பித் தாக்குகின்ற அளவுக்கு வலிமை பெறாவிட்டாலும், குறைந்த பட்சம் தம்மைத் தற்காத்துக் கொள்கிற அளவுக்காவது முஸ்லிம்கள் தயாராக வேண்டாமா?
சினிமா, பத்திரிகை, தொலைக்காட்சிகள் என்று சொல்லப்படுகின்ற சக்திவாய்ந்த ஊடகங்கள் அனைத்தும் இன்று முஸ்லிம்களுக்கு எதிராகவே இயங்குகின்றன. இந்நிலையில் முஸ்லிம்கள் தம்மை தற்காத்துக்கொள்ள வேண்டுமெனில் அந்த சக்திவாய்ந்த ஊடகங்களுக்கு நிகராக முஸ்லிம்களும் ஊடகங்களைத் தொடங்க வேண்டும். ஆனால் இன்றைய தமிழ் முஸ்லிம் சூழலில் அது சாத்திய மற்றதாகவே தெரிகிறது.
சாத்தியப்படாது என்று எப்படிச் சொல்கிறீர்கள்?
'நமக்கென்று ஒரு நாளிதழ்' என்ற முழக்கத்துடன் முஸ்லிம்கள் பலர் சிலமுறை கூடி, பல முறை பிரிந்த நிகழ்வுகள்தான் இங்கே நிறைய நடந்திருக்கிறது.
தொலைக்காட்சிகளில் slot எடுத்து அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என்று தனித் தனியே நிகழ்ச்சி வழங்குவதற்காக தொடங்கப்பட்ட, தமிழ் முஸ்லிம் ஊடக நிறுவனங்கள் பல, அந்த அரைமணி நேர நிகழ்ச்சிகளைக் கூட நேர்த்தியாகத் தர முடியாமல் இழுத்து மூடப்பட்ட நிகழ்வுகள்தான் ஏராளம்.
முஸ்லிம்களால், ஒரு பொதுத் தன்மையுடன் நடத்தப்பட்டு, வெகுமக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற 'வளைகுடாச் செய்திகள்' என்னும் நிகழ்ச்சி சுவடு தெரியாமல் அழிந்துவிட்டது. அந்த அரைமணி நேர நிகழ்ச்சியைக் கூட தொடர்ந்து நடத்த முடியாமல் திவாலானவர்கள் இன்று தனியே ஒரு தொலைக்காட்சி என்ற அளவுக்குத் துணிந்திருக்கிறார்கள். இது பற்றியெல்லாம் முஸ்லிம் சமூகப் புரவலர்கள் சிந்திப்பதே இல்லை.
மீடியாக்களின் பிதாமகனாகவும், வெகுமக்களின் சுவாசமாகவும் விளங்குகின்ற சினிமாவைப் பற்றி இன்னுமே முஸ்லிம்களுக்குச் சரியான புரிதல் ஏற்படவில்லை. சினிமா 'ஹராம்' [விலக்கப்பட்டது] என்ற அறியாமையிலேயே இன்றும் மூழ்கி இருக்கிறது முஸ்லிம் சமூகம்.
இப்படி சக்திவாய்ந்த ஊடகங்கள் அனைத்தும் பல்வேறு காரணங்களால் முஸ்லிம்களை விட்டும் தூரமாக இருக்கின்றன. இத்தகைய அபாயகரமான சூழ்நிலையில் முஸ்லிம்களுக்கான ஒரே ஆயுதமாக, மாற்று ஊடகம் என்று அழைக்கப்படுகின்ற எளிய ஊடகமான ஆவணப்படம் மட்டுமே இருக்கிறது.
தற்போது சில தமிழ் தொலைக்காட்சிகளில் வழங்கப்பட்டு வரும் முஸ்லிம் நிகழ்ச்சிகளில் இருந்து நீங்கள் எடுக்கின்ற ஆவணப்படங்கள் எப்படி வேறுபடுகின்றன?
தொலைக்காட்சியை 'ஹராம்' என்று சொல்லிவந்த முஸ்லிம் சமூகம், அந்த தொலைக்காட்சியின் வீச்சையும் பயனையும் புரிந்து கொண்டு அதைப் பயன்படுத்தத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரியதே என்றாலும், அது ஒரு குறிப்பிட்ட எல்லையோடு நின்று விட்டதுதான் அதிர்ச்சியும் கவலையும் அளிக்கிறது.
இன்றைய முஸ்லிம் நிகழ்ச்சிகளில் பெரும்பாலானவை முஸ்லிம் அமைப்புகளால் வழங்கப் படுகின்றன. அமைப்புகள் தங்களின் கொள்கைகளையும், செயல் திட்டங்களையும் முஸ்லிம்களிடம் எடுத்துச் செல்வதற்கு இந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்திக் கொள்கின்றன. எப்படி இங்கே ஒவ்வொரு அமைப்புக்கும் ஒவ்வொரு பத்திரிகை இருக்கின்றதோ, அதைப் போலவே தொலைக்காட்சி நிகழ்சிகளும் இருக்கின்றன. சில சமயங்களில் இது ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளும் களமாகவும் மாறிவிடுகிறது. முஸ்லிம் பத்திரிகைகளின் மூலம் சண்டை இட்டுக்கொண்டால் அது முஸ்லிம்களோடு நின்று விடும். ஆனால் அதுவே தொலைக் காட்சி நிகழ்ச்சி வரை நீளுகின்றபோது எல்லா சமூக மக்களும் அதைப் பார்த்து முகம் சுழிக்கின்ற அவலம் ஏற்பட்டு விடுகிறது. கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலின் போது ஜெயலலிதாவை சந்தித்தது தொடர்பாக, இரண்டு முஸ்லிம் அறிஞர்கள் தொலைக்காட்சியில் சொற்போர் நடத்தியதைப் பார்த்து எல்லோரும் ரசித்துச் சிரித்தார்கள்.
மேலும், தற்போது வழங்கப்பட்டு வரும் முஸ்லிம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆன்மீகத்தோடு மட்டுமே நின்று விடுகின்றன. முஸ்லிம்களின் கலை, இலக்கியம், பண்பாடுகள் குறித்தோ, அரசியல் அரங்கில் முஸ்லிம்கள் தோழமை சக்திகளுடன் இணைந்து நிற்பதற்கான வழிகள் பற்றியோ பேசுகிற எந்த நிகழ்ச்சியும் இங்கு இல்லை.
முஸ்லிம்களுக்கு ஊடகப் பயன்பாடு குறித்த தெளிவான புரிதல் இல்லை என்கிறீர்களா?
ஆமாம், visual media என்றழைக்கப்படும் காட்சி ஊடகத்தைப் பற்றி முஸ்லிம்களுக்கு சரியானப் புரிதல் இல்லை என்பதுதான் யதார்த்தமான உண்மை. தற்போது முஸ்லிம் நிறுவனங்களால் வழங்கப்பட்டு வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடக்கம் முதல் முடிவு வரை ஒருவர் மட்டுமே பேசிக்கொண்டு இருக்கிறார்.
visual media என்றால் அது அசைவுகளைத் தொடர்வதாக இருக்க வேண்டும். நொடிக்கு நொடி காட்சிகள் மாறிக் கொண்டே இருக்க வேண்டும். நவீன தொழில் நுட்ப யுத்திகளைக் கையாண்டு, அதற்கேற்ப நிகழ்சிகளைத் தயாரித்து மக்களை ஈர்க்கும் வகையில் ஒளிபரப்ப வேண்டும். ஆனால் இங்கே அப்படி எதுவுமே நடப்பதில்லை. எல்லா மட்டத்திலும் சிந்தனை வறட்சியே நிலவுகின்றது. நிகழ்ச்சி முழுவதும் ஒருவருடைய பேச்சை மட்டுமே ஒளிபரப்புவதென்றால் அதற்கு வானொலி போதுமே; தொலைக்காட்சி எதற்கு?
தமிழகத்தில் முஸ்லிம்களால் நடத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மேற்குறிப்பிட்ட தேக்க நிலைக்குள் சிக்கியுள்ளதால் அவை அந்தந்த வட்டாரத்தோடு நின்று விடுகின்றன. வெகு மக்களை ஈர்ப்பதில்லை.
இப்படிப்பட்ட நிகழ்சிகளை வழங்கி பொருளாதாரத்தையும், பொன்னான நேரத்தையும் வீணாக்குவதை விட,வெகு மக்களை ஈர்க்கும் வல்லமை கொண்ட மாற்று ஊடகத்தைக் கையில் எடுக்கலாம். அப்படி எடுத்தால் இலக்கை அடைய முடியும் என்பதற்கு எனது படங்களே சாட்சி.
உங்களின் படங்களைப் பற்றி கூறுங்கள்?
மாற்று ஊடகத்தின் மூலம் முஸ்லிம்களின் அவலங்களை மக்கள் மயப்படுத்த வேண்டும் என்ற சிந்தனையோடு நாங்கள் களமிறங்கிய நேரத்தில், தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீடு குறித்த குரல் வியாபித்திருந்தது. எல்லா முஸ்லிம் அமைப்புகளும், கட்சிகளும், பத்திரிக்கைகளும், நிறுவனங்களும் முஸ்லிம் இட ஒதுக்கீடு குறித்தே விவாதித்துக் கொண்டிருந்தன. 1995 இல் தமுமுக தொடங்கப்பட்ட பின்னர் அரசியல் ரீதியாக அழுத்தம் பெற்ற அந்தக் கோரிக்கை முஸ்லிம்களிடம் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் வேலூரில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் 'இட ஒதுக்கீடு' குறித்து உரையாற்றி விட்டு மேடையிலிருந்து கீழிறங்கி வந்த முஸ்லிம் இயக்கத் தலைவர் ஒருவரிடம் முஸ்லிம் பெரியவர் ஒருவர் வந்து, 'பாய் கேட்கிறதைத்தான் கேட்கிறீங்க, கொஞ்சம் நல்ல இடமாப் பார்த்து கேளுங்க பாய்' என்று கூறியுள்ளார். அந்தப் பெரியவரின் அறியாமையைக் கண்டு வேதனையடைந்த தலைவர், இத்தனைப் போராட்டங்களை நடத்தியப் பின்னரும் இட ஒதுக்கீடு குறித்து இந்தச் சமுதாயத்திற்கு சரியான விழிப்புணர்வு ஏற்படவில்லையே என்று எம்மிடம் வருந்தினார்.
அப்போதுதான், முஸ்லிம் இட ஒதுக்கீடு குறித்த தெளிவான புரிதலை ஏற்படுத்தும் வகையில் ஒரு ஆவணப்படம் தயாரித்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. மறு நிமிடமே அதற்கான ஆயத்தப் பணிகளில் இறங்கினோம். 2006 சட்ட மன்றத் தேர்தல் முடிந்து, கலைஞர் ஆட்சிப் பொறுப்பேற்ற அந்த மாதத்திலேயே, அரசுக்கு அழுத்தம் தரும் வகையில், முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த 'பிறப்புரிமை' என்ற ஆவணப்படத்தை வெளியிட்டோம்.
அனைத்து வெகுஜனப் பத்திரிக்கைகளும் படத்தைப் பற்றிய விமர்சனத்தை வெளியிட்டன. அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் ஆவணப்படத்தை சென்றடையச் செய்தோம். தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் படம் திரையிடப்பட்டது. பல்வேறு திரைப்பட விழாக்களில் பிறப்புரிமை பங்கேற்றது.
நிழல் திரைப்பட இயக்கத்தின் பாராட்டையும், பரிசையும் பெற்றது. வெளிநாடுகளில் உள்ள எமது அன்பர்கள் குறுந்தகடுகள் மூலமாகவும், இணைய தளம் மூலமாகவும் படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டுரை வாசித்தனர். எங்களின் முதல் முயற்சியே இந்த அளவுக்கு பேசப்படும் என்று துளியளவு கூட நினைக்கவில்லை. அந்த வெற்றி தந்த உற்சாகமும், பெருமிதமும் உடனேயே இரண்டாவது ஆவணப் படத்திற்கான விதையைத் தூவியது.
இரண்டாவது ஆவணப்படம் எதைப் பற்றி எடுக்கப் பட்டது?
பிறப்புரிமை ஆவணப்படத்திற்கான நிழல் இயக்கத்தின் விருதளிப்பு விழா திருப்பூரில் நடைபெற்றது. அதற்காக கோவை சென்றிருந்த போது, அங்கு குண்டுவெடிப்பு வழக்கில் விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அப்துல் நாசர் மதானியையும், இதர முஸ்லிம் சிறைவாசிகளையும் சந்தித்தேன்.
சிறையில் நடந்த அந்தச் சந்திப்பு உள்ளத்தை உலுக்கியது. குற்றம் புரியாமல் விசாரணைக் கைதியாக வதைபடும் அந்த அப்பாவிகளின் அவல நிலையை உரத்து முழங்கும் வகையில், 'கைதியின் கதை' என்ற ஆவணப்படத்தை இயக்கினோம். காவல் துறையின் கடும் நெருக்கடிக்கு மத்தியில் அந்தப்படம் வெளி வந்தது.
பிறப்புரிமை ஆவணப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை விட அதிகமான வரவேற்பை கைதியின் கதை பெற்றது. பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஆவணப்படம் சென்றடைந்தது. தமிழ்ச் சூழலில், மதானி என்றாலே தீண்டத்தகாத தீவிரவாதி என்பது போன்று வரையப்பட்டிருந்த மாயச் சித்திரத்தை அடித்து நொறுக்கி, மதானி பற்றிய உண்மை நிலையை கைதியின் கதை ஆவணப்படம் விதைத்தது.
பிறப்புரிமை, கைதியின் கதை என்ற எமது இரண்டு ஆவணப்படங்களும் முன்னெடுத்த இரண்டு கோரிக்கைகளும் இறுதியில் வெற்றியும் பெற்றன. முஸ்லிம் இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேறியது; மதானியும் குற்றமற்றவராக விடுதலை செய்யப்பட்டார்.
இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விசயம் என்னவெனில், தொலைக்காட்சிகளில் வழங்கப்படும் முஸ்லிம் நிகழ்ச்சிகளின் மூலம் காலங்காலமாக இட ஒதுக்கீடு பற்றியும், சிறை வாசிகளின் விடுதலை பற்றியும் விவாதிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் அதற்கு எந்தப் பத்திரிகையும் விமர்சனம் எழுதியதில்லை. அரசியல் தலைவர்களை அந்த நிகழ்ச்சிகள் ஈர்த்ததில்லை. ஆவணப்படம் அத்தகைய நிலையையே தலைகீழாக மாற்றி வெற்றி தேடித் தந்தது.
கமர்ஷியல் திரைப்படங்கள் மாதிரி ஆவணப்படங்கள் மக்களைச் சென்று சீக்கிரம் 'ரீச்' ஆகிறதில்லையே. ஆவணப்படங்களை மக்கள் மத்தியில் எப்படி எடுத்துச் செல்வது?
ஆவணப்படங்கள் மக்களைச் சென்று அடைவதில்லை என்று சொல்வதே தவறு என்று நினைக்கிறேன். மேலும் எல்லோரும் நினைத்துக்கொண்டு இருப்பது போல் ஆவணப்படங்களை எடுத்துக் கொண்டு நாம் ஊர் ஊராக அலைய வேண்டியதில்லை. படம் வெளிவந்த மறு நிமிடத்திலிருந்து தன்னெழுச்சியாய் அது மக்களை சென்றடைந்து விடும். உலகம் முழுவதும் நடைபெறுகின்ற திரைப்பட விழாக்களில் ஆவணப்படங்கள் பங்கேற்பது சிறப்புக்குரிய அம்சமாகும். கேன்ஸ், பெர்லின், சைப்ரஸ், நியூ ஜெர்ஸி, லண்டன், பாரிஸ், மெல்பெர்ன், டொராண்டோ, இலங்கை, மும்பை, கேரளா என்று நடைபெறும் உலகத் திரைப்பட விழாக்களில் ஆவணப்படங்கள் பங்கு பெறவும், பரிசு பெறவும் நிறைய வாய்ப்புகள் உண்டு.
தமிழ்நாட்டில் நிழல் திரைப்பட இயக்கம் பெரிய அளவில் இயங்கி வருகிறது. மேலும் பல திரைப்பட இயக்கங்களும் இருக்கின்றன. தமிழ்நாடு குறும்பட ஆவணப்பட படைப்பாளிகள் சங்கம் முக்கியமான அமைப்பாக இயங்குகின்றது. இந்த அமைப்புகளின் மூலம் ஆவணப்படங்கள் மக்களை சென்றடைகின்றன. மேலும் வெகுஜன ஊடகங்கள் ஆவணப்படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து விமர்சனம் எழுதத் தொடங்கி இருப்பதால், மாற்று ஊடகத்திற்கான வாசல் விசாலமாகி உள்ளது என்றே கூற வேண்டும்.
ஏற்கனவே வெளிவந்து வெற்றி பெற்றுள்ள ஆவணப்படங்கள் பற்றி கூற முடியுமா?
ஒன்றா, இரண்டா ஓராயிரம் படங்கள் இருக்கின்றன. அமெரிக்க ஆட்சியாளர்களைத் தோலுரித்துக் காட்டிய 'பாரன்ஹீட் 9 /11 ' பற்றி முன்னரே குறிப்பிட்டோம். நம் நாட்டிலும் அதிர்வலைகளை ஏற்படுத்திய படங்கள் பல உள்ளன. மும்பையைச் சேர்ந்த 'ஆனந்த் பட்வர்தன்' [http://www.patwardhan.com] என்ற பிரபல இயக்குநர் இயக்கிய ஆவணப்படங்கள் புரட்சி விதைகளைத் தூவிய படங்களாகும்.
பாபர் மஸ்ஜித் இருந்த இடத்தை ராமஜென்ம பூமியாக மாற்றுவதற்கு இந்துத்துவ சக்திகள் மேற்கொண்ட பயங்கரவாதங்களை 'ராம் கி நாம்' [ராமனின் பெயரால்] என்ற தமது ஆவணப்படத்தின் மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டியவர் ஆனந்த் பட்டவர்தன்.
அதே போல் குஜராத்தில் நடைபெற்ற இனப்படுகொலைகளை மக்கள் மத்தியில் படம் பிடித்துக் காட்டிய 'Final Solution ' மற்றும் 'கோத்ரா தக்' ஆகிய ஆவணப்படங்கள் குறிப்பிடத்தக்கவை.
தமிழ்நாட்டிலும் ஏராளமான ஆவணப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. நூற்றுக்கணக்கான படைப்பாளிகள் உருவாகி இருக்கிறார்கள். ஆனால் இங்கே முஸ்லிம்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசுகின்ற ஆவணப்படங்களும் இல்லை; இயக்குனர்களும் இல்லை என்பது தான் வருந்தத்தக்க விசயம்.
காந்தியைப் பற்றியும், பகத்சிங்கைப் பற்றியும் இன்னும் பல தலைவர்களைப் பற்றியும் தலைமுறைக்கு நினைவூட்டுகின்ற வகையில் ஆவணப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழில் முத்திரை பதித்த படைப்பாளிகளான ஜெயகாந்தன், அசோகமித்ரன், தி. க. சிவசங்கரன், இந்திரா பார்த்தசாரதி, இளையராஜா என்று பட்டியலிட முடியாத அளவுக்கு பலரைப் பற்றியும் ஆவணப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
பேரறிஞர் அண்ணாவைப் பற்றி ஆவணப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. பெரியாரைப் பற்றியும் காமராஜரைப் பற்றியும் திரைப்படங்களே எடுக்கப்பட்டு விட்டன. ஆனால் இந்திய முஸ்லிம்களின் மகத்தான தலைவரும், ஆட்சி மொழி தமிழே என்று அரசியல் நிர்ணய சபையில் முதல் குரல் எழுப்பியவருமான கண்ணியத் தமிழர் காயிதே மில்லத் பற்றி இங்கே எந்தப் பதிவும் இல்லை.
தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளாக விளங்கும் கவிக்கோ அப்துல் ரகுமானைப் பற்றியோ, போராளிக் கவிஞர் இன்குலாப் பற்றியோ, சாகித்ய அகாடமி விருதை வென்ற நாவலாசிரியர் தோப்பில் மீரானைப் பற்றியோ இங்கே யாரும் படமெடுக்கவில்லை. எடுப்பதற்கான அறிகுறியும் தென்படவில்லை.
முஸ்லிம்களின் பிரச்சனைகளைப் பற்றியும், முஸ்லிம்களின் அளப்பெரிய பங்களிப்புகளைப் பற்றியும் இங்கே முஸ்லிம்கள் தான் பேசியாக வேண்டும் என்ற நிலை இருக்கிறது. அதனால் தான் காயிதே மில்லத் இறந்து 40 ஆண்டுகள் கடந்த நிலையில், 28 வயதே உடைய ஒரு முஸ்லிமாகிய நான் அவரைப் பற்றி படமெடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலை மாற வேண்டும். முஸ்லிம்களுக்காக மற்றவர்களும், மற்றவர்களுக்காக முஸ்லிம்களும் பேசுகின்ற நிலை மலர வேண்டும்.
***
நன்றி : சமநிலைச் சமுதாயம் மற்றும் கீற்று இணையதளம்