Saturday, April 18, 2009

குழந்தைகளுக்கான இலவச இயங்குதளம்

குழந்தைகளுக்கான இலவச இயங்குதளம்
Posted: 13 Apr 2009 02:27 AM PDT

நம் வீட்டுக்கணினிகளில் நமது குழந்தைகளை விளையாட அனுமதிக்கலமா?

ரகசியத் தகவல்கள் அடங்கிய கோப்புகள், ஆவணங்கள் எல்லாவற்றையும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் இயங்குதளத்தில் குறிப்பாக விண்டோஸ், லினக்ஸ் போன்றவற்றில் பதிந்திருப்போம்.

இதே கணினியை குழந்தைகள் விளையாடுவதற்கு அனுமதித்தால் அவர்களது குறும்புத்தனத்தால் நமது கோப்புகளுக்கு ஏதேனும் ஆபத்து நிகழலாம்.

அவர்களது திறமையை வளர்ப்பதற்காகவும், அச்சமின்றி பாதுகாப்பு உணர்வுடன் கணினியை குழந்தைகள் வசம் ஒப்படைத்துவிட்டு நிம்மதியுடன் இருக்க என்ன வழி?

மழலைகளுக்காகவே ஒரு இலவச இயங்குதளம் வெளியிடப்பட்டுள்ளது. அதன் பெயர் Qimo

Qimo மென்பொருள் மிக இலகுவானது. சிடி, பென் டிரைவ் இவற்றில் Qimo வை ஏற்றி பிறகு கணினியில் நிறுவிப் பயன்படுத்தலாம்.

மிகக் குறைந்த திறன் கொண்ட கணினியிலும் நல்ல முறையில் இயங்க வல்லது( 400 MHz மைக்ரோப்ராசசர், 256 MB நினைவகம், 6GB வன்வட்டு )

வழக்கமான கணினித் திரையில் இயங்குதளத்தில் கண் முன் தெரியும் ஐகான்கள் எல்லாவற்றையும் விட இந்த Qimo வில் அளவில் பெரிய ஐகான்களாகத் தெரியும்.

TuxPaint, eToys, Gcompris ஆகிய பயன்பாடுகளை உள்ளடக்கியது.

பழைய மடிக்கணினிகள், ஒன்றுக்கும் உதவாது எனத் தூக்கிப்போடும் நிலையில் உள்ள பழைய கணினிகளில் இந்த Qimo வை நிறுவினால் அவற்றை இன்னும் பல காலம் பயன்படுத்தலாம்.

3 வயது குழந்தைகளும் பயன்படுத்தும் வண்ணம் மிக எளிமையான முகப்பையும்,நிறைய கணினி விளையாட்டுகளையும் உடைய இயங்குதளம் இது. இந்த மென்பொருளைத் தரவிறக்கம் செய்தால் 700 MB அளவுள்ள ஒரு ISO கோப்பாகக் கிடைக்கும்.

அதை ஒரு சிடி / டிவிடியில் எரிக்க வேண்டும். பின்பு அந்த சிடி / டிவிடி வழியாகக் கணினியை பூட் செய்து Qimo வை நிறுவலாம்.

ISO கோப்பினை சிடி / டிவிடியில் ஏற்றுவதற்கு ISO Recorder மென்பொருள் உதவும்.

உங்கள் ரகசியக் கோப்பு, ஆவணங்களை தனி இயங்குதளத்திலும், குழந்தைகளுக்கான பயிற்சிகளை, விளையாட்டுகளை இந்த Qimo விலும் என தனியாகப் பிரித்துவிட்டால் எந்தப் பிரச்சினையும் நிகழாது.

மேலும் பழைய கணினிகள் வீட்டில் பயன்படுத்தாது இருப்பின் அதில் இந்த Qimoவை நிறுவி அதை சிறுவர்களிடம் தைரியமாகக் கொடுத்துவிட்டு நீங்கள் உங்கள் வேலையைக் கவனிக்கலாம்.

சுட்டி : http://www.qimo4kids.com/

கலைச்சொற்கள் :

வீட்டுக்கணினி : Home PC
மடிக்கணினி : Laptop
கோப்புகள் - Files
ஆவணங்கள் - Documents
இயங்குதளம் - Operating System
நிறுவுதல் - Installation
ஐகான் - Icon
பயன்பாடுகள் - Software Applications
ISO - An ISO image is an archive file (a.k.a. disk image) of an optical disc using a conventional ISO (International Organization for Standardization
தரவிறக்கம் - Download
சிடியில் எரித்தல் - CD Burning
பூட் - Boot - Startup
நினைவகம் - memory (RAM)
வன்வட்டு - Hard disk
மைக்ரோப்ராசசர் - Micro Processor
பென் டிரைவ் - Pen Drive


தமிழ்மணத்தில் நட்சத்திரமாக உங்கள் தமிழ்நெஞ்சம்
Posted: 13 Apr 2009 02:34 PM PDT

வலையுலக வாசக நண்பர்களுக்கும், வலைப்பதிவர்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

இந்த இனிய நேரத்தில் தமிழ்மணம் நட்சத்திரப் பதிவராகி உள்ளேன்.

முன்னர் ஆங்கிலத்தில் தட்டச்சு கற்றிருந்தேன். தமிழில் தட்டெழுதத் தெரியாமல் இருந்தேன்.. அந்த நேரத்தில் தமிழில் தட்டெழுதக் கற்றுக் கொடுத்தவர் அருமை நண்பர் திரு. மஞ்சூர் ராசா அவர்கள். இந்த நேரத்தில் அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

அவர் கற்றுக்கொடுத்த ஒருங்குறியில் (Unicode) தமிழ் பற்றிய அறிவே எனக்குள் வலைப்பதியும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.

முத்தமிழ் குழுமத்திலும், முத்தமிழ்மன்றம், மற்றும் தமிழ்மன்றம் Forum களிலும் அவ்வப்போது எழுதினேன்.

நண்பர். திரு. பிகேபி அவர்களது வலைப்பதிவைப் படிக்கும் வாசகனாக இருந்தேன். அவ்வப்போது எனக்குக் கிடைக்கும், இணையத்தில் நான் கண்ட மென்புத்தகங்களை அவருக்குப் பின்னூட்டமிட்டேன். அவரும் அவற்றை அவரது பதிவுகளில் இடுவார்.எனக்குள் இருந்த ஆர்வத்தை அரங்கேற்றும் நாளும் வந்தது. 2007ம் ஆண்டின் டிசம்பர் திங்களில் தமிழ்2000 என வலைப்பதிவில் எழுத ஆரம்பித்தேன்.

04/12/2007 அன்று தமிழ்மணத்தில் உறுப்பினராகச் சேர்ந்தேன். மிகக் குறுகிய காலத்தில் நட்சத்திரப்பதிவர் தகுதி கிடைத்தது குறித்து மகிழ்வடைகிறேன்.

ஆரம்பத்தில் எதை எழுதுவது? எப்படி எழுதுவது? - வலைப்பதிவின் இலக்கணம் என்ன? என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆங்கிலத்தில் வெளியான சுயமுன்னேற்ற நூல்களில் இருக்கும் சிறுசிறு குட்டிக் கதைகளை எனது நடையில் மொழிபெயர்த்து வலையேற்றினேன்.

அதற்கெல்லாம் எந்த அளவு வரவேற்பு கிடைத்தது என்பதெல்லாம் இன்னும் நினைவில் உள்ளது. தொழில்நுட்பம் சம்பந்தமான ஆங்கில வலைப்பூக்கள், தளங்களில் கருத்தைச் செலுத்தி அவற்றில் பிடித்த கட்டுரைகளை எனது நடையில் தமிழில் எழுத ஆரம்பித்தேன்.

நல்ல வரவேற்பு கிடைத்தது. அவ்வப்போது மின்னஞ்சலில் நண்பர்கள் அனுப்பும் ஆங்கிலச் சிறுகதைகளை அப்படியே மொழிபெயர்த்து வலையேற்றினேன்.

மென்பொருள் முகவரி தரும் தமிழ்நெஞ்சம் என 4tamilmedia.com தளத்தில் அறிமுகம் செய்திருந்தார்கள். அதன் பிறகு தொழில்நுட்பப் பதிவுகளை எழுதுவதில் அதிக அக்கரை காட்ட ஆரம்பித்தேன். எனது பாதையை சீர் செய்து வழியமைத்துக் கொடுத்ததில் 4tamilmedia.com செய்த உதவி மறுக்க இயலாது.

சிலகாலம் தொடர்ந்த பிறகு http://www.tamilkurinji.com தளத்தினரிடம் இருந்து ஒரு பின்னூட்டம். தமிழ்குறிஞ்சி தளத்தினராலும் அறிமுகம் செய்யப்பட்டேன். எனக்கு உற்சாகம் அளித்த இவர்களை மறக்க இயலாது.


எளிய தமிழில் SQL என தரவுத்தளம் சார்ந்த தொடரை எழுதிக் கொண்டிருக்கிறேன். அதைப் பற்றி திரு. செந்தழல் ரவி அவர்கள் வேலைவாய்ப்பு கல்வி வலையிதழ் பதிவில் அறிமுகம் செய்தார். திரு. செந்தழல் ரவி அவர்களுக்கு நன்றி.


ஒரு ஆனந்த அதிர்ச்சியாக ஆனந்தவிகடனின் இளமைவிகடன் தளத்தில் எனது 3 பதிவுகளை நல்ல பதிவாக அங்கீகரித்திருந்தார்கள்.

அவை :

சுவரில் வரையப்பட்ட ஓவியங்கள் - அசாதாரணம்

எவ்விதமான கோப்புகளையும் திறந்து பார்ப்பதற்கு - இயக்குவதற்கு

டூப்ளிகேட் பிரியர் விகடனாருக்கு நன்றி

இப்படி இருக்கும்போது கடந்த மாதம் நண்பர் திரு. பிகேபி. அவர்கள் தனது
ஐந்து ஆண்டுகள் பதிவில் எனது தமிழ்நெஞ்சம் தளத்தைப் பற்றி எழுதி எனக்கு மீண்டும் மீண்டும் உற்சாகம் கொடுத்தார். அதன் பிறகு எனது தளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அவருக்கு எனது நன்றி.

இப்போது தமிழ்மணத்தில் நட்சத்திரப்பதிவர் அங்கீகாரம். தமிழ்மணம் திரட்டிக்கு நன்றி.

பல்வேறு நண்பர்களும் தங்களது வலைப்பூவில் எனது தமிழ்நெஞ்சம் தளத்திற்கான blog feed ஐ இணைத்து திரட்டி வருகிறீர்கள். எனது தளத்திற்கான பார்வையாளர் பற்றிய புள்ளி விவரங்களில் அவற்றை அறிகிறேன். அனைவருக்கும் எனது நன்றிகள்.