நூல் : முஸ்லிம் லீக் நூற்றாண்டு வரலாறு ( 1906 முதல் 2006 )
ஆசிரியர் : எழுத்தரசு ஏ.எம். ஹனீப்
பக்கங்கள் : 552
விலை : ரூ.125
வெளியிட்டோர் :
முஸ்லிம் லீக் பதிப்பகம்
தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
தலைமை நிலையம்
36 மரைக்காயர் லெப்பை தெரு
மண்ணடி
சென்னை 600 001
போன் : 2521 8786
www.muslimleaguetn.com
info@muslimleaguetn.com
பதிப்புரை
அருளாளன் அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
முஸ்லிம் லீக் நூற்றாண்டு வரலாறு முதல் பாகம் இதோ உங்கள் கரங்களில்
அறிவியல் சாதனைகள் பெருகிவரும் இக்கால கட்டத்தில் வரலாற்றுச் செய்திகள் அருகி
விடக்கூடாது.
வரலாறு அதை எழுதுகின்றவரின் நோக்கத்தைப் பொறுத்தே அமைகின்றது. அதனால் தான்
பல வரலாற்றுச் செய்திகளால் உலகம் பல பிரச்சினைகளைச் சந்திக்கிறது.
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்ற வரலாற்றுப் புரட்டுக்கு நாம் இன்றைக்கும் பதில்
சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
இந்திய முஸ்லிம்களின் வரலாறு இந்த தேசத்தோடு இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று.
ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட முஸ்லிம்களின் ஆட்சி இந்திய தேசத்திற்கு
வழங்கப்பட்ட அருட்கொடை
மதத்தைப் பரப்புவது அம்மன்னர்களின் நோக்கமாக இல்லாமல் இருந்தால் தான் இத்தனை
ஆண்டுகால ஆட்சி நடைபெற்றும் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக உள்ளனர்.
வரலாற்றை எழுத முற்பட்டவர்கள் வகுப்புவாதக் கண்ணோட்டத்தில் சிதைத்ததால் அதனைப்
படிக்கின்றவர்களின் பார்வையும் விகாரமாகிப் போனது.
இந்த தேசம்,பிரச்சனைகளைச் சந்திப்பதற்கு இதுதான் பிரதான காரணம்.தப்புப் பிரச்சாரங்களை
தகுதிமிக்கப் பாடங்களாக ஆரம்பப்பள்ளி முதல் கொண்டு சர்வகலாசாலைகள் வரை கற்றுக்
கொடுக்கின்ற காரணத்தால் பிஞ்சு உள்ளங்களில் நஞ்சு விதைக்கப்படுகிறது.
தேசப் பிரிவினை என்பது இந்திய வரலாற்றின் ஒரு அத்தியாயம்.அந்த அத்தியாயம்
முஸ்லிம்லீகால் வரையப்பட்டது அல்ல.
இந்தியாவில் முஸ்லிம் லீக் உருவாக்கப்படுவதற்கு எத்தனையோ காரணங்கள்
இருந்தன.
1906இல் அகில இந்திய முஸ்லிம் லீக் ஆரம்பிக்கப்பட்டபோது பிரிவினை வாடை எங்கும்
வீசவில்லை.
இந்திய சுதந்திரத்தின்போதும் அதன் பின்பும் பிரிவினைக் குற்றச்சாட்டு முஸ்லிம்கள்மீதும்,
முஸ்லிம் லீக் மீதும் திணிக்கப்பட்டது.
இந்தப் பிரச்சாரத்தில் முன்னணியில் இருந்தவர்களே பின்னர்,தங்கள் நிலைபாட்டை
மாற்றிக் கொண்டுவிட்டனர்.
ஆர்.எஸ்.எஸ்.சின் ஆங்கிலப் பத்திரிகையான "ஆர்கனைசர்" ஆசிரியராக இருந்த கே.ஆர்
மல்கானி இந்தியப் பிரிவினைக்கு முஸ்லிம்களோ,இந்துக்களோ காரணமல்ல.அதை
உருவாக்கியதும்,வளர்த்ததும்,செயல்படுத்திக் கொடுத்ததும் ஆங்கிலேயர்கள்தான் என 1988 இல்
பகிரங்கப்படுத்தினார்.
இதற்குக் காரணம் இல்லாமலில்லை.காங்கிரஸ் தலைவராயிருந்த சுதந்திரப் போராட்ட
வீரர் மவ்லானா அபுல் கலாம் ஆஜாத் 1958 இல் எழுதி வெளியிட்ட இந்திய விடுதலை வெற்றி
( India wins freedom ) என்ற நூலின் முப்பது பக்கங்கள் முப்பது ஆண்டுகள்
கழித்தே வெளியிடப்பட வேண்டும் என்ற நிபந்தனையில் ஆவணக் காப்பகங்களால் பாதுகாக்கப்
பட்டிருந்தன.
1988 செப்டம்பர் 29 ல் வெளியிடப்பட்ட அந்த முப்பது பக்கங்களும்,இருட்டடிப்புச்
செய்யப்பட்ட பல உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தன.இதனால் ஏற்பட்ட
விளைவுதான் அது.
இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு எழுத்து வடிவம் கொடுத்த மவுண்ட் பேட்டன் பிரபுவின்
ஆலோசகர் வி.பி.மேனன்,தான் எழுதி வெளியிட்ட "இந்திய அதிகார மாற்றம்( Transfer of Power in India ) என்ற நூலில்" 1937 பொதுத் தேர்தலில் ஐக்கிய (உ.பி)மாகாணத்தில் அமைச்சரவை அமைக்கும் விஷயத்தில் முஸ்லிம் லீக் தர முன் வந்த ஆதரவை காங்கிரஸ் ஏற்றிருந்தால் வரலாறு மாறியிருக்கும் என குறிப்பிட்டுள்ளதே உண்மை.
வரலாறு தெரியாதவர்கள்தான் இந்தியப் பிரிவினைக்கு முஸ்லிம் லீக் காரணம் என
சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
வரலாறு தெரிந்தவர்களும்,ஜின்னாவின் முஸ்லிம் லீக் பாகிஸ்தான் பிரிவினைக்காக
உருவானது என வம்பளந்து கொண்டிருக்கின்றனர்.
1904 ல் காங்கிரஸில் சேர்ந்த முஹம்மதலி ஜின்னா காலமெல்லாம் இந்து முஸ்லிம்
ஒற்றுமைக்கு பாடுபட்டார். இந்து முஸ்லிம் ஒற்றுமையின் தூதர் ஜின்னா என்று சரோஜினி
நாயுடு வர்ணித்தார் 1935 ல்தான் முஸ்லிம் லீகின் நிரந்தரத் தலைவராக ஜின்னா. சாஹிப்
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1946 மே 16ல் வெளியிடப்பட்ட "அமைச்சரவை தூதுக்குழு திட்டத்தை ஏற்று 1940 மார்ச்
23ஆம் தேதியில் "லாகூர் தீர்மானத்தையே கைவிட முடிவு செய்தது முஸ்லிம் லீக்.
பிளவுபடாத நல்ல சூல்நிலை ஏற்படப் போகிறது என நாடே மகிழ்ச்சியில் திளைத்தபோது
1946 ஜூன் 10ல் ஜவஹர்லால் நேரு பம்பாயில் அளித்த பேட்டி . அந்த மகிழ்ச்சியை
நாசமாக்கியது.
இப்படிப்பட்ட வரலாற்று உண்மைகளெல்லாம் உலகுக்கு சொல்லப்படாத காரணத்தால் தான்
அபாண்டம் இந்திய முஸ்லிம்களின் தலைமீது சுமத்தப்பட்டது.
அந்த சுமையை போக்கும் முயற்சியாகவே முஸ்லிம் லீக் நூற்றாண்டு வரலாறு
அத்தியாயத்தை அந்நூல் அலசுகிறது.
எண்பது வயதை தாண்டிய எழுத்தரசு ஏ.எம். ஹனீப் 65 ஆண்டுகளுக்கும் மேலாக
எழுத்துலகில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றவர்.முஸ்லிம் லீகின் வரலாறாகவே அவர் வாழ்ந்து
வருகின்றவர்.
550 பக்கங்கள் அவர் எழுதியிருக்கும் இந்த வரலாற்றுப் பொக்கிஷம் ஒவ்வொருவரிடமும்
இருக்க வேண்டிய அவசியமான ஆவணம்.
விலை மதிப்பற்ற இந்நூலுக்கு நீங்கள் தருகின்ற ஆதரவைப் பொறுத்தே முஸ்லிம் லீக்
நூற்றாண்டு வரலாற்றின் இரண்டாம் பாகம் சுதந்திர இந்தியாவில் முஸ்லிம் லீகின் பெருமையை
பேசக்கூடிய அரிய நூலாக வெளிவர ஏதுவாகும்.
தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் முஸ்லிம் லீக் பதிப்பகம் இதனை
வெளியிடுவதில் பெருமையடைகிறது.
ஒரு மாபெரும் வரலாறு பதிக்கப்படுவதில் அந்த வரலாறு புதுப்பிக்கப்படுகிறது.
இதை உருவாக்க அரும்பாடுபட்ட எழுத்தரசு ஏ.எம் ஹனீப் சமுதாயத்தின் நன்றிக்குரியவர்.
நேற்றைய வரலாறு!
இன்றைய உண்மை!
நாளைய நம்பிக்கை!
நன்றியுடன்
முஸ்லிம் லீக் பதிப்பகம்
www.imandubai.org
www.mudukulathur.com