Sunday, July 5, 2009

இரவு எட்டே முக்காலுக்கு மஃரிப் தொழுகை...! - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

இரவு எட்டே முக்காலுக்கு ம்ஃரிப் தொழுகை...! - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வெள்ளிகிழமை மாலை நியூ யோர்க்கிலிருந்து விமானத்தில் சின்சினாட்டி புறப்பட்டேன். அந்த நள்ளிரவில்
வேந்தன் ஐயா எனக்காக விமான நிலையத்தில் காத்திருந்தார். மறுநாள் காலை அவரே பத்து மணி நேரம்
காரை ஓட்டி நயாகரா நீர் வீழ்ச்சிக்கு என்னை அழைத்துச் சென்றார். நயாகரா மறக்க முடியாத அனுபவம்.
அதைவிட வேந்தன் ஐயாவின் அன்பு.

மறுநாள் இரவு சின்சினாட்டி திரும்பி, திங்கள் முற்பகல் இந்தியானாபொலிஸ் வரை வந்து என் உறவினர்
ஃபைசல் வசிக்கும் ஸ்ப்ரிங்ஃபீல்டுக்கு பேருந்து ஏற்றி விட்டார். இரவு எட்டரை மணிக்கு அங்கு சென்றடைந்தேன். வரவெற்ற ஃபைசல் போகும் வழியில்தான் பள்ளி தொழுதுவிட்டுப் போய் விடலாம் என்றார்.

விசாலமான் ஒரு வளாகத்தில் அழகான பள்ளி. புதியவர்கள் யாரும் எளிதில் உள் நுழைந்து விட முடியாது.
குறிப்பிட்ட ச்ங்கேத எண்ணை அழுத்தினால்தான் கதவே திறக்கும். ஃபைசல் அங்கு உறுப்பினர். ஆகவே
எந்தச்சிரமமும் எனக்கு இருக்கவில்லை.

உள்ளெ நுழைந்தபோது தொழுகை ஆரம்பமாகவிருந்தது. இரவுத் தொழுகைக்கான சங்கல்பத்தைச் செய்து
கொண்டு தொழ ஆரம்பித்தேன். பிறகுதான் அது சாயுங்காலத் தொழுகை என்று தெரிய வந்தது. ஆக, மீண்டும்
ஒரு முறை சாயுங்காலத் தொழுகை, இரவுத் தொழுகை, பள்ளிக்கான காணிக்கைத் தொழுகை ஆகியவற்றை
நிறைவேற்றி முடித்தேன்.

அந்தப் பள்ளியில் அதிகாலைத் தொழுகை, மதியத் தொழுகை, மாலைத் தொழுகை எல்லாம் நம்மூர்
போலவே உரிய காலங்களில் நடைபெறுகின்றன. சாயுங்காலத் தொழுகை மட்டும், சூரியன் 8.40 க்கு
அஸ்தமிப்பதால் 8.45 க்கு நடைபெறுகிறது. இரவுத் தொழுகை பத்துமணிக்குப் பிறகு நடைபெறுகிறது.

ஃபைசல் வீட்டுக்கும் பள்ளிக்கும் ஐந்து மைல்கள்.(அமெரிக்காவில் இன்னும் மைல் கணக்குத்தான்...!)
பக்கத்து வீட்டில் ஹைதராபாதைச் செர்ந்த நண்பர் இம்ரான். இருவரும் மாலை அலுவல் முடிந்து வீடு
வருகிறார்கள். பிறகு இருவரும் சேர்ந்தே காரில் பள்ளி செல்கிறார்கள். சாயுங்காலத் தொழுகைக்குப்பிறகு
கடைகளுக்குச் சென்று தேவைப்பட்ட சாமான்களை வாங்கி விட்டு இரவுத் தொழுகையையும் முடித்து
விட்டு வீடு வருவதை வழமையாகக் கொண்டிருக்கிறார்கள்.

பெண்களுக்கெனெ தனிப்பகுதி இருப்பதால் பலர் குடும்பத்துடனேயே வருகிறார்கள். நேரத்தைக் கணக்குப்
பார்த்து ஓடிக்கொண்டே இருக்கும் அந்த மக்களுக்கு இந்த ஒன்று கூடலும் சந்திப்பும் ஒரு மிகப் பெரிய
ஆறுதல். அத்துடன் தொழுகையும் நிறைவேறி விடுகிறது.

__._,_.___