காலம் கடந்து...
உள்ளூரில் விலைப் போவாததால்
வெளி நாட்டில் நான்!
வெள்ளை முடியும் பல் இழிக்க
கலர்ச் சாயம் தேடியது கண்கள்
கறுப்புச் சாயத்தை தவிர்த்து!
முதுமையென
முத்திரையிட்டால்
முடியாது இனி வளைகுடாவில் குப்பைக் கொட்ட!
நரைத்த ரோமங்கள்
விதைத்த நினைவுகளால்
விடுப்புக் கேட்டு விரைந்தேன்
விமான நிலையத்திற்கு!
சிறகுகளோடு பறந்த விமானத்தில்
சிறகுகளே இல்லாமல் நானும் பறந்தேன்!
தொட்டுப் பார்க்க என் மழலை;
முத்தமிட என் மனைவி;
கட்டியணைக்க என் தாய் - எனக்
கட்டாத கோட்டையுடன்
கனவுகளில் நான்!!
முடிந்துவிட்டது எல்லாம் ;
எரிகிற வைக்கோலாய்
முடிந்து விட்டது எல்லாம் உள்ளுக்குள்ளே!
பாசங்களுக்கு பதில் சொல்லாமலே
பயணித்துவிட்டேன்
என் இறுதி இலக்கிற்கு!!
இருக்கின்ற காலத்தை
இழந்துவிட்டேன் கடல் கடந்து;
எல்லாம் முடிந்து உணர்ந்து பயனென்ன
காலம் கடந்து!!!
- யாசர் அரஃபாத்
--