Thursday, March 5, 2009

இஸ்லாமிக்கூகுள்.காம்

http://www.islamicgoogle.com/

லெப்பைநல வாரியம் அமைக்க பாக்கர் அலி கோரிக்கை

லெப்பைநல வாரியம் அமைக்க பாக்கர் அலி கோரிக்கை

சென்னை, மார்ச் 3: லெப்பை நல வாரியம் ஒன்றை உருவாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழக தர்ஹாக்கள் ஒருங்கிணைப்புக் கமிட்டியின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.எஸ். பாக்கர் அலி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதம்:

தர்ஹாக்களில் அடக்கமாகி அருள்பாலித்து வரும் இறைநேயர்களுக்குப் பணிவிடை செய்து கொண்டம், அங்கு செல்லும் யாத்திரிகர்களுக்கு பாத்திஹா ஓதி சேவை செய்து கொண்டும் இருக்கிறவர்கள் லெப்பைமார்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

இப்படி சுமார் 30 லட்சம் பேர் வறுமையில் வாழ்கிறார்கள். பொருளாதார நிலையிலும், கல்வியிலும் பின்தங்கி உள்ளனர்.

இவர்களுக்கு லெப்பைமார்கள் நல வாரியம் என்று தனியாக அமைத்து துயர்நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக உலேமாக்கள் நல வாரியம் உருவாக்கியுள்ளதற்கு நன்றி தெரிவிக்கிறோம்.

சிறுபான்மை சமூகத்தினரின் நல்வாழ்வுக்கு நிறைய முயற்சிகளை மேற்கொண்டு வரும் நீங்கள் இந்தக் கோரிக்கையையும் நிறைவேற்றித் தர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஹஜ் புனிதப் பயணம் விண்ணப்பங்கள் வரவேற்பு

ஹஜ் புனிதப் பயணம் விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை, மார்ச் 3: இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புவோரிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தப் பயணத்துக்கான விண்ணப்பங்கள், புதிய எண். 13, (பழைய எண். 7), மகாத்மா காந்தி சாலை, (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸி டவர், மூன்றாம் தளத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடம் இருந்து மார்ச் 5-ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பயணி ஒருவருக்கு ரூ. 200-ஐ பரிசீலனைக் கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழுவுக்கான நடப்பு கணக்கு எண். 30683623887-ல் செலுத்தி அதற்கான வங்கி ரசீதின் நகலை தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவுக்கு அளிக்க வேண்டும்.

பரிசீலனைக் கட்டணம் திருப்பி அளிக்கப்பட மாட்டாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் மார்ச் 31.

குலுக்கலில் தெரிவு செய்யப்பட்டோர், பின்னர் அந்நியச் செலாவணி, விமானக் கட்டணம் மற்றும் பிற கட்டணங்களுக்கான 30 சதவீத தொகையுடன், முழுமையான விண்ணப்பப் படிவத்தை சமர்பிக்க வேண்டும். மீதமுள்ள 70 சதவீதம் தொகையை வரும் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

சர்வதேச பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே, ஹஜ் விசா வழங்கப்படும் என சவூதி அரசு அறிவித்துள்ளது. எனவே, ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோர் சர்வதேச பாஸ்போர்ட் பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சென்னை பல்கலை.யில் இஸ்லாமிய இலக்கிய அறக்கட்டளை

சென்னை பல்கலை.யில் இஸ்லாமிய இலக்கிய அறக்கட்டளை

சென்னை, மார்ச் 3: சென்னைப் பல்கலைக்கழகத்தில் எஸ்.எம்.சையது சலாஹுதீன் பெயரில் இஸ்லாமிய இலக்கிய அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ் இலக்கியத் துறையில் இஸ்லாமிய தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாடு குறித்து ஆண்டுதோறும் சொற்பொழிவு நடத்துவதற்காக, இ.டி.ஏ. குழுமங்களின் நிர்வாக இயக்குநரான சலாஹுதீன் பெயரில் இந்த அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அறக்கட்டளைக்கான நிதி ஒரு லட்சம் ரூபாயை இஸ்லாமிய இலக்கிய கழக நெறியாளர் கவிக்கோ அப்துல் ரகுமான், தலைவர் அமீர் அலி, பொதுச் செயலர் எஸ்.எம்.இதாயத்துல்லா ஆகியோர் துணைவேந்தர் ராமச்சந்திரனிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினர்.

இந்த அறக்கட்டளையின் முதல் சொற்பொழிவு ஏப்ரல் மாதக் கடைசியில் நடக்கிறது.

ஸ்ரீ ராம் இலக்கிய கழகத்தின் `அறம்' விருது விரும்புவோர் தகுதியுடன் விண்ணப்பிக்கலாம்

ஸ்ரீ ராம் இலக்கிய கழகத்தின் `அறம்' விருது விரும்புவோர் தகுதியுடன் விண்ணப்பிக்கலாம்

மதுரை,மார்ச்.6

இந்தியாவின் தொழில் நிறுவமான ஸ்ரீ ராம் குழுமத்தின் அங்கமாகிய ஸ்ரீராம் இலக்கியக் கழகம், திருக்குறளில் கூறப்பெறும் கருத்துக்களை வாழ்க்கையில் கடைப்பிடித்து, மானுட சமுதாயத்திற்குப் பயன் அளிக்கும் வகையில் வாழ்ந்து வருவோரில் ஒருவரைத் தெரிவித்து அவருக்கு `அறம்' விருது மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பரிசுகளைத் தொடர்ந்து ஆறாம் முறையாக இந்த ஆண்டும் வழங்கவுள்ளது. தகுதியுடையவரை ஆர்வலர்கள் பரிந்துரைக்கலாம்.


`அறம்' விருதுக்குரிவரைத் தேர்வு செய்ய முன்னாள் துணைவேந்தர் முனைவர், ஒளவை நடராசன் தலைவராகவும், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஜி.ரங்காராவ், ஏ.எம். சுவாமிநாதன் ஆகியோர் உறுப்பினர்களாகவும், ஸ்ரீராம் குழுமத்தின் இயக்குநர் ஆர்.கண்ணன் ஒருங்கிணைப்பாளராகவும் கொண்ட ஒரு ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவ்விருதிற்குரியவரைத் தேர்ந்தெடுக்கக் குறைந்த நிலைத் தகுதிகள் வருமாறு; பலருக்கும் முன்னுதாரணமாகத் திகழும் வகையில் அவர் சமூக மேம்பாட்டிற்கு பெரிய பங்கை ஆற்றியிருக்க வேண்டும். தமிழராகவோ (அ) தமிழ்நாட்டில் வசிப்பவராகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை.

ஆனால் இந்தியராக, இந்தியாவில் வசிப்பவராக இருந்தல் அவசியம். வயது வரம்பு எதுவுமில்லை. ஆனால் தற்போது நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பவராக இருக்க வேண்டும். விருதுக்குரியவராகத் தெரிவு செய்யப்படுபவர் தனி மனிதராகவோ அல்லது ஒரு அமைப்பின் நிறுவனராகவோ இருக்கலாம். விருதிற்குரியவராகப் பரிந்துரை செய்யப்படுபவர் தாமாக விண்ணப்பிக்க முடியாது. அவரை நன்கு தெரிந்த ஒருவர் பரிந்துரைக்க வேண்டும்.

விருதுக்குரியவராகத் தெரிவு செய்யப்படுபவருக்கு ஒரு லட்ச ரூபாய் ரொக்கத்தொகையும் `அறம்' விருதும் மகத்தானதொரு விழாவில் சிறப்பு விருந்தினர் ஒருவர் மூலம் வழங்கப்படும். தங்களுக்குத் தெரிந்தவர்கள் எவரேனும் இவ்விருதிற்குத் தகுதியானவராக இருப்பதாகக் கருதினால் அவவைப் பற்றிய தன்விவரக் குறிப்பையும், அவர் ஆற்றிய கடமைகள், தொண்டுகள் முதலியவற்றைப் பற்றியும் வெள்ளைத் தாளில் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் எழுதி, ஸ்ரீராம் இலக்கியக் கழகம், ஐந்தாவது தளம், 149, கிரீம்ஸ் சாலை, சென்னை _ 600006 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் மார்ச் 31,2009 ஆகும்.

திருவிதாங்கோடு முஸ்லிம் கல்லூரியில் மார்ச் 13-ல் உணவு திருவிழா

திருவிதாங்கோடு முஸ்லிம் கல்லூரியில் மார்ச் 13-ல் உணவு திருவிழா


நாகர்கோவில், மார்ச் 4: திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரியில் 3 நாள் உணவு திருவிழா இம் மாதம் 13-ம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து, கல்லூரித் தாளாளர் மற்றும் செயலர் எச். முகம்மது அலி நாகர்கோவிலில் புதன்கிழமை அளித்த பேட்டி:

இக் கல்லூரி ஹோட்டல் மேலாண்மை மற்றும் உணவியல் துறை நடத்தும் இந்த அறுசுவை உணவு திருவிழாவை அமைச்சர் என். சுரேஷ்ராஜன் தொடக்கிவைக்கிறார்.

இதையொட்டி, 100 ஸ்டால்கள் அமைக்கப்படுகின்றன. பண்டைய கால உணவு வகைகளில் இருந்து பலவகையான வடஇந்திய, தென்னிந்திய மற்றும் பண்பாட்டு உணவு வகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.

திருவிழாவையொட்டி பலவித கலை நிகழ்ச்சிகளும், மாயாஜால நிகழ்ச்சிகளையும் கண்டு களிக்கலாம் என்றார் அவர்.