தமிழக அரசே உலமாக்கள் நல வாரியம் அமைத்திடுக !
சேமுமு
சங்கைக்குரிய மார்க்க அறிஞர்களாகப் போற்றப்பெறும் உலமாப் பெருந்தகையினர் பெருமானார் ( ஸல் ) அவர்களுடைய வாரிசுகளாகக் கருதப்பெற்று மரியாதைக்கும் மதிப்பிற்குரியவர்களாகக் கண்ணியப்படுத்தப்படுவதற்குரியவர்களாவர். இந்தியத் திருநாட்டின் சரித்திரத்திலும் எவராலும் மறைத்துவிடவோ அல்லது மறுத்து விடவோ இயலாத பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பெற்ற பக்கங்களைச் சங்கைக்குரிய உலமாப் பெருந்தகையினர் பெற்றிலங்குகிரார்கள்.
இரத்தப்புரட்சிகளினாலும், சட்டச் சம்பிரதாயங்களினாலும், சர்வாதிகார ஆட்சி அதிகாரத்தினாலும் பெற்றுத்தரமுடியாத மிக உயரிய அந்தஸ்தை ஒரு மனிதனுக்குச் சமுதாய வாழ்வில் பெற்றுத்தரக்கூடிய மார்க்கம் இஸ்லாமாக இருப்பதால் அடிமைப்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, கொடுமைகளுக்குள்ளாக்கப்பட்ட மக்களுக்கெல்லாம் மிகப்பெரிய விடுதலை இயக்கமாக இஸ்லாம் திகழ்கிறது. அதனால்தான் அவ்வழிவந்த சங்கைக்குரிய உலமாப் பெருமக்கள் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு அடிப்படை அமைத்துத் தந்த ஆதாரபுருஷர்களாக விளங்கினார்கள்.
மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தங்கள் சுவாசங்களை முதன்முதல் இந்த மண்ணில் தியாகம் செய்தவர்கள் இஸ்லாமியர்கள். அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் வழியமைத்துத் தந்து தாங்களும் அவ்வழியிலே பயணித்தவர்கள் உலமாப் பெருந்தகைகள்; 1857 - 58 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சுதந்திரப்போரில் பல இந்து மன்னர்களெல்லாம் போராட்ட இயக்கதினின்றும் ஒதுங்கிக்கொண்ட நேரத்திலும் இஸ்லாமியர்கள் பெருமிதத்தோடும் பெரும் எண்ணிக்கையிலும் ஈடுபட்ட அந்த அற்புத நாட்களை எவர் மறக்க முடியும் ? 27000 இஸ்லாமியர்கள் முதல் சுதந்திரப்போரில் இம்மண்ணகம் விடுதலை பெறப் புன்னகையோடு மரணத்தைத் தழுவியதை எவர்தம் மறந்திடவியலும் ? அந்த மாபெரும் புரட்சியின் நாயகராகத் திகழ்ந்த மௌலானா மௌலவி செய்யித் அஹ்மத்துல்லாஹ் அவர்களைப் புறக்கணித்து ஒரு விடுதலை வரலாறு எழுதிடத்தான் முடியுமா ? சென்னையில் பிறந்து உத்திரப்பிரதேசத்தில் வளர்ந்த அந்த உலமாச் சிங்கத்தின் முன்னே ஆங்கிலேய நரிகள் அஞ்சி ஊழையிட்ட வரலாறு நடுநிலைவாதிகளின் மனக்கண்ணிலும் என்றும் மறையாது நிற்கும். மௌலானா மௌலவி ஜஃபிர் ஹஜ்ரத் அவர்கள் ‘ஹுப்புல் வத்தனி மினல் ஈமான்' என்ற நாயக வாக்கை மெய்ப்பித்துச் செய்த உயிர்த்தியாகம் எத்தகைய சிறப்புடையது !
மாவீரன் நேதாஜியின் துணையாகவும், பாதுகாப்பாகவும் இருந்த இஸ்லாமியர்கள் எண்ணற்றோர்; அந்தப் பாயும் சிங்கப் படையில் மௌலானா மௌலவி கலீலுர் ரஹ்மான் போன்ற உலமாப் பெருந்தகைகள் இருக்கவே செய்தனர்.
மாநாட்டில் 29-12-1929 அன்று லாகூரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் இந்தியாவிற்குப் பூரண் சுதந்திரம் வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே ‘பூரண சுதந்திரமே எங்கள் பிறப்புரிமை' என்று கொள்கை முழக்கமிட்டவர்கள் அறிவார்ந்த உலமாப் பெருந்தகைகள். டொமினிக் அந்தஸ்து போதுமெனக் காங்கிரஸ் தீர்மானித்தபோது ‘அந்த அஸ்தஸ்து தேவையில்லை; பரிபூரண சுதந்திரமே எங்கள் உயிரின் ஊற்று ‘ என்றனர் உலமாப் பெருமக்கள்; மௌலானா மௌலவி மொஹானி ஹஜ்ரத் பூரண் சுயராஜ்யத்தைக் கேட்டு 1921 ல் அலஹாபாத் காங்கிரஸ் மாநாட்டில் முழங்கியதை இன்றைய சந்ததியினர் மறந்துவிடக்கூடாது. அதற்கும் முன்னதாக அதே முழக்கத்தை முன்நிறுத்திச் சென்ற மௌலானா மௌலவி மஜ்ஹருல் ஹஜ்ரத்தைத் தான் மறந்திடல் கூடுமோ ?
காந்தியடிகளுக்கு ஒத்துழையாமை இயக்க உணர்வை உருவாக்கி விட்டவர்களே அறிவார்ந்த ஆலிம் பெருமக்கள் தாம் எனபதை வரலாற்றை நுணுகி ஆய்வோர் உணர்ந்து மகிழ்வர். ஒத்துழையாமை இயக்கம் உச்சகட்டத்திலிருந்தபோது தமிழகத்தில் மௌலானா மௌலவி ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி ( சிராஜுல் மில்லத் ஆ.கா.அப்துஸ்ஸமத் சாஹிப் தந்தை ), 1880 களில் திருச்சியில் மௌலானா மௌலவி கலீலுர் ரஹ்மான் போன்றவர்கள் ஆற்றிய அரும்பணிகள் பெரும் சிறப்புடையவனாகும்.
இந்தியத் திருநாட்டின் அடிமை விலங்கை அகற்றுவதற்கு முதுகெலும்பாக இருந்து வீரத்தையும், தீரத்தையும் ஊட்டிய சங்கைக்குரிய மார்க்க அறிஞர்கள்தாம் இப்போதும் இந்தத் தாய்த்திருநாட்டில் ஒற்றுமைசெழிக்கவும் நல்லிணக்கம் தழைக்கவும் அரும்பாடுபட்டு வருகிறார்கள். மனிதர்களைப் புனிதர்களாக்கும் புனிதப் பணியில் தங்களை அர்ப்பணித்துச் செயல்பட்டு வருகிறார்கள். சாந்தியும் சமாதானமும் சகோதரத்துவமும், மனித நேயமும் நாளூம் வளரச் சேவையாற்றி வருகிறார்கள். இந்திய மண்ணின் மேம்பாட்டிற்காக ஒல்லும் வகையெல்லாம் உறுதுணை புரிந்து வருகிறார்கள்.
குறிப்பாகத் தமிழக மண்ணில் அமைதி தவழ ஆலிம் பெருந்தகையினர் ஆவலோடு உரிய பணியாற்றி வருகிறார்கள். வன்முறைக்கோ, தீவிரவாதத்திற்கோ, வெடிகுண்டு கலாச்சாரத்திற்கோ இஸ்லாத்தில் எள்முனையளவுகூட இடமில்லை என்பதைச் சத்திய வார்த்தைகளாக முழங்கி மக்கள் எவரும் ஆபத்தான சூழலுக்கு அடியெடுத்து வைக்காது கவனத்துடன் காத்துக் கடமையாற்றி வருகின்றனர். மனிதர்களைப் பண்படுத்தவும் பக்குவப்படுத்தவும் இம்மை மறுமை இரண்டிலும் செம்மையாக வாழ வகைப்படுத்தவும் அவர்கள் ஆற்றிவரும் அருஞ்சேவையை அளவிட்டுக் குறைத்து விடமுடியாது. ஆனால் அத்தகையவர்கள் பொருளாதாரத்தில் எத்தகைய சூழலில் உழன்று வருகிறார்கள் என்று எண்ணும்போது குருதிக் கண்ணீரே கொப்பளிக்கிறது.
இந்த மண்ணின் விடுதலைக்கு இன்னுயிரையும் தந்த அறிவார்ந்த மார்க்க அறிஞர்களின் வழியே வந்த இன்றைய உலமாப் பெருந்தகையினர் இருக்க ஒரு வீடு இல்லாமல் அடுததவர்கள் மனமிரங்கி தந்த ஓட்டு வீடுகளில் வாடகை தந்தும், பெறுகிற ஊதியத்தில் ஒருபங்காக ஒட்டுக்குடித்தனம் செய்துகொண்டும் அல்லாடுகிற அவதி நிலையை அன்புகூர்ந்து அரசு சிந்திந்துப் பார்க்க வேண்டும்.
வறுமையிலும் செழுமையான உள்ளத்தோடு வாழ்ந்து வருகிற அந்த அறிஞர் பெருமக்களும் இந்த நாட்டின் குடிமக்கள் தாம்; அவர்கள் வாழ்வாதாரம் மேம்பாடு காணச் செய்ய வேண்டிய பொறுப்பும் நாடாளும் நல்லரசுக்கு உண்டு என்பதை இந்தத் தருணத்தில் நினைவுபடுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம். விவசாயத் துறையிலும், நெசவுத்துறையிலும் அல்லாடும் தோழர்களின் துயரங்களைப் போக்கக் கை கொடுக்கும் அரசு ஆன்மீகத் துறையில் அறிவுப் பணியாற்றும் இந்தத் தோழர்கள் விஷயத்திலும் உதவ முன்வர வேண்டும்.
மதிப்பிற்குரிய மார்க்க அறிஞர்கள் தம் குழந்தைகளின் கல்விக்காக எத்தகைய துயரத்தையும் துன்பத்தையும் தாங்கொணா வேதனையையும் அனுபவித்து வருகிறார்களென்ற புள்ளிவிவரத்தை மட்டும் அரசு எடுத்துப் பார்த்தால் போதும் உடனடியாக உதவவேண்டிய உண்மைச் சமுதாயம் இதுதான் என உணரும்.
கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க அவர்கள் பட்டுவரும் சிரமம் சொல்லி மாளாது. பொறியியல் கல்லூரிகளில் எப்படியாவது சேர்த்துவிட வேண்டுமென்று அவர்கள் தவிப்பதும் பாடுபட்டுச் சேர்த்த பின்னர் தொடர்ந்து கட்டணம் கட்டமுடியாமல் துடிப்பதும் எதார்த்த நடப்பாகும். கலை அறிவியல் கல்லூரிகளில் கூடச் சுயநிதிப் பட்டப்படிப்புக் கல்வியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க முடியாமல் அவர்கள் திணறுவதும் காணச் சகிக்க முடியாததாகவே இருந்து வருகிறது. வியாபாரமாகிப் போய்விட்ட கல்வித்துறையில் அன்றாட வாழ்வுக்கே அல்லாடும் நிலையிலுள்ள அவர்கள் படும் துன்பம் பல்வாகும்.
தொடரும் ...............
நன்றி : இனிய திசைகள் பிப்ரவரி 2008