Wednesday, March 11, 2009

வல்லோனே ! ரஹ்மானே !

வல்லோனே ! ரஹ்மானே !
எம். முஹம்மது ஆஸாத் – இராஜமுந்திரி

இறைவா ! ஒரு நொடியும் உனை
மறவா இதயம் வேண்டும்
ஒரு போதும் உன் கட்டளையை
மீறாத வாழ்வு வேண்டும்

உலகை விரும்பாத மனம் வேண்டும்
மறுமையே குறிக்கோளாய் வாழ வேண்டும்
கோபமும், காமமும் அகல வேண்டும்
அனைவரையும் உயர்வாக மதிக்க வேண்டும்

இருப்பதில் இன்பமாக வாழவேண்டும்
பொறுமை, அமைதி, சாந்தி,
சமாதானம் என்னில் நிறைய வேண்டும்
முகத்திற்கு முன்னால் புகழும் மனிதனிடம்

பாதுகாப்பை நீ தர வேண்டும்
குறைகளை எடுத்துச் சொல்லும் – நல்ல
நண்பன் அருகில் வேண்டும்
உனக்கு அடிபணிவதில் எனக்கு

பெரும் இன்பம் கிடைக்க வேண்டும்
முன்னால் செய்த பாவங்கள் அனைத்திற்கும்
முழுமையான மன்னிப்பை நீ தர வேண்டும்
பாவமில்லாத பரிசுத்தமான வாழ்வே இனி வேண்டும்

அனைவருக்கும் உதாரணமாய் என்
வாழ்வு அமைய வேண்டும்

இறக்கும் போது கலிமவை நான்
மொழிய வேண்டும் – மறுமையில்

இனிய பரிசாக இன்பம் நிறைந்த – சொர்க்கத்தை
நீ எனக்கு தந்தருள் புரிய வேண்டும் .

நன்றி : குர் ஆனின் குரல் - பிப்ரவரி 2009

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாரதி விருது: மார்ச் 30 கடைசி

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாரதி விருது: மார்ச் 30 கடைசி


கோவை, மார்ச் 10: கலை, இலக்கியம், விளையாட்டு போட்டிகளில் சிறப்பாக பணியாற்றிய பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு யுவஸ்ரீ கலா பாரதி விருது வழங்கப்படவுள்ளது.

இவ் விருது பெற விரும்புவோர் மார்ச் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து பாரதி யுவ கேந்திரா அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஒவ்வொரு மாவட்டங்களிலும் இசை, படிப்பு, ஓவியம், விளையாட்டு, சமூகப்பணி, பரத நாட்டியம், பேச்சு, கவிதை, சமூகப்பணி உள்பட அந்தந்த துறைகளில் சிறந்து விளங்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு யுவஸ்ரீ கலா பாரதி விருது, விவேகானந்தர் விருது ஆகியவை ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

பாரதி யுவ கேந்திரா அறக்கட்டளை சார்பில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. விருது வழங்கும் நிகழ்ச்சி அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும்.

விழாவில் மதுரை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர், ஆர்ஷ வித்யா பீடம் சுவாமி ததேவானந்த சரஸ்வதி, கருமாத்தூர் விவேகானந்த சேவாஸ்ரம் தலைவர் சுவாமி ஸதா சிவானந்தா, வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரமம் சுவாமி சைதன்யானந்தா, சுவாமி கருணானந்தா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இசை, ஓவியம், விளையாட்டு போன்றவற்றில் சிறப்பாக விளங்கும் மாணவ, மாணவிகள் தங்களது சுயகுறிப்பு மற்றும் பரிசு சான்றிதழ் நகல்களை நெல்லை பாலு, நிறுவனர் பாரதி யுவ கேந்திரா, ஜி52, சாந்தி சதன் குடியிருப்பு, கோச்சடை, மதுரை-625016 என்ற முகவரிக்கு மார்ச் 30-ம் தேதிக்குள் அனுப்பலாம் எனத் தெரிவித்துள்ளார்.

தொலைபேசி எண்கள்:9443930815, 9442630815.