Saturday, June 6, 2009

ஐஐடி படிக்க என்ன செய்ய வேண்டும்?

ஐஐடி படிக்க என்ன செய்ய வேண்டும்?




ஐஐடி பற்றிய அறிமுகம் தேவையில்லை. உலகத் தரம் வாய்ந்த கல்விக் கூடம். இங்கே படித்த மாணவர்களில் பலர், உலகின் பல பெரிய நிறுவனங்களின் பெரிய பதவிகளில் இருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இங்கே படித்த மாணவர்களில் 90% மாணவர்கள், வெளிநாட்டிற்கு மேல்படிப்பிற்க்காகவும், பெரிய நிறுவனங்களில் பணிபுரியவும் செல்கின்றனர். இத்தகைய பெருமையுடைய கல்விக்கூடத்தில் பயில போட்டி இருப்பதில் வியப்பு இல்லை.

ஐஐடி, JEE எனப்படும் நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்களை சேர்க்கின்றது.

சுமார் 2000 இடங்களுக்கு, ஆண்டுதோறும் 1,50,000 மேற்பட்ட மாணவர்கள் நுழைவுத்தேர்வு எழுதுகிறார்கள். நுழைவுத்தேர்வுக்கான், ஆயத்த பணிகளை 90% மாணவர்கள் ஒன்பதாம் வகுப்பிலேயே ஆரம்பித்து விடுகின்றனர்.

சமீபத்தில், ஐஐடி (இந்திய தொழிட்நுட்ப கல்லூரி) கூட்டமைப்பு, மாணவர் சேர்க்கை விதிகளில் சில மாற்றங்களைச் செய்துள்ளது.

இந்த ஆண்டில் இருந்து, இரண்டு முறைகளுக்கு மேல் நுழைவுத்தேர்வு எழுத மாணவர்களுக்கு அனுமதி கிடையாது. குறைந்தது, 65% சராசரி மதிப்பெண்களாவது 12-ம் வகுப்பில் பெற்று இருக்க வேண்டும். இப்படி சில...

இதற்கு, மாணவர்களிடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காரணம். மாணவர்களுக்கு எப்படியும் ஐஐடி-ல் அனுமதி பெற்று விட வேண்டும் என்ற வேட்கை தான். சிலர் 2-4 ஆண்டுகள் முயற்சி செய்து ஐஐடி அனுமதி பெறுவதும் உண்டு.

மாணவர்களின் இந்த விடாமுயற்சி பாராட்டப்பட வேண்டியது தான். ஆனால், ஐஐடி-ஐப் பொருத்தவரை, சில விசயங்களை ஒப்புக் கொள்ள முடியவில்லை.

1. படித்து முடித்ததும் ஐஐடி மாணவர்கள் மேற்கொள்ளும் பணி.

2. பெற்றோர்களின் உந்துதல்.

ஐஐடி மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்

1946 ல், சர்க்கார் கமிட்டியின் பரிந்துரையின்படி, அப்போதைய பிரதமர் நேரு அவர்களால், நான்கு மண்டலங்களில் (முதலில் காரக்பூரில் கிழக்கு மண்டலத்தில், பின்னர் பம்பாய், சென்னை, கான்பூர்,டெல்லி ஆகிய இடங்களில்) ஐஐடி ஆரம்பிக்கப்பட்டது.

"ஐஐடி தொழில்நுட்ப வல்லுனர்களை உருவாக்குவது மட்டுமல்லாமல், இந்தியாவின் வளர்ச்சிக்கு அதனுடைய (அதன் மாணவர்களின்) ஆராய்ச்சியின் வாயிலாக உறுதுணையாக இருக்க வேண்டும்; இந்தியா தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெறவும் ஐஐடி பாடுபடவேண்டும். சிறந்த அறிவியலார்களையும், கல்வியாளர்களையும் உருவாக்க வேண்டும்" என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

ஆனால், என்ன நடந்து கொண்டு இருக்கிறது? இங்கு படிக்கும் (பெரும்பாலான) மாணவர்களுக்கு, நாட்டுக்கு சேவை புரியும் எண்ணத்தை விட, நாடு கடந்து செல்ல வேண்டும் என்ற வேட்கை மிக அதிகமாக உள்ளது. 95% மாண்வர்கள், தங்களுடைய படிப்பு முடிந்ததும், வெளிநாட்டிற்க்குச் செல்கின்றனர்; எதற்கு? 90% பேர் மேல்படிப்பிற்கென சொன்னாலும், படிப்பு முடிந்ததும் பெரும்பாலானோர் திரும்பி வருவதில்லை. மேல்படிப்பிற்குச் செல்வதில் தவறே இல்லை. ஆனால் திரும்பி வராமல் அங்கேயே இருப்பது தான் தவறு. இப்படியே சுமார், 80000 பேர் அங்கேயே தங்கி விட்டனர். இது இந்த நாட்டிற்கு மிகபெரிய இழப்பு.

இந்தியாவில், அங்கு கிடைப்பது போல் வருமானம் / வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை தான். ஆனால், அதையே காரணம் காட்டி தங்கள் செயலுக்கு நியாயம் கற்பித்தல் சரியாக இருக்காது.

தங்கள் பொருளாதாரத்தை உயர்த்த, அங்கே பணி புரியட்டும்.

ஆனால், ஐஐடி-ல் சேர்வதற்கும், வெளிநாடு சென்று படிப்பதற்கும், அங்கு பணிபுரிவதற்கும், அந்த நாட்டு குடியுரிமை பெறுவதற்கும் காட்டும் ஆர்வத்தை இந்தியா திரும்புவதற்கும் காட்டினால் நலம்.

இந்தியா இழந்து கொண்டிருப்பது சாதாரண நபர்கள் அல்ல. நாட்டின் தலைசிறந்த அறிவியாலர்களை. ஆனால் அவர்கள் அந்த நாட்டில் தங்களுடைய அடையாளத்தை இழப்பதற்கு (இந்திய குடியுரிமை) அவர்கள் வருத்தப்படுவதாகத் தெரியவில்லை. அங்கு இருக்கும் அனைவரும் தங்களின் பொருளாதாரத்தை நன்கு உயர்த்தி, அந்த நாட்டின் பொருளாதாரம், அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவும் வழி வகுத்துள்ளனர்.

ஆனால் அவர்களின் தரம் உயர வழி வகுத்த நாடு உயரவும் அவர்கள் பாடு படவேண்டும். அவர்கள் தங்களின் உறவினர்களுக்கு அனுப்பும் பணமும், 10-20 வருடங்கள் கழித்து சில நிறுவனங்களுக்கு அவர்கள் வழங்கும் நன்கொடையும், நாடு அவர்களுக்கு செய்த உதவிக்கு ஈடாகாது. பல கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு கல்லூரி படிப்பு இன்னும் எட்டாக் கனியாகவே உள்ளது. பல லட்சக்கணக்கான பேருக்கு கிடைக்காத அரிய வாய்ப்பு, சிறந்த கல்வி, மற்றும் வசதி அவர்களுக்கு கிடைக்கின்றது என்பதனையும் அவர்கள் மறந்து விடக் கூடாது.

அவர்கள் சொல்லலாம்; எங்களின் திறமையினால் தான் நாங்கள் இந்த நிலைக்கு உயர்ந்து இருக்கிறோம் என்று; மறுக்க முடியாது. ஆனால் அவர்களை இவ்வாறாக உயர்த்த, இந்த சமுதாயம் (கெட்ட / நல்ல விசயங்கள்), நமது கல்விமுறை, போட்டி, நமது நாட்டின் அரசியல் சீர்கேடு முதலானவைகளும் முக்கியகாரணிகள்.

அதே நேரத்தில், மக்களின் கோடிக்கணக்கான வரிப் பணமானது, இந்த கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு செலவிடப்படுகின்றது. இவர்கள் அயல்நாட்டிற்கு சென்று சம்பாதிப்பதற்காகவும், அந்த நாடுகள் வளர்ச்சி பெறவும் மட்டும் இந்தப் பணம் செலவிடப்படவில்லை. பணத்தை விட அவர்களின் சேவை இங்கு தேவை என்பதை அவர்கள் நினைவு கொள்தல் வேண்டும்.

இந்த ஜனநாயக நாட்டில் (?), யாரையுமே இங்கு தான் வாழ வேண்டும் என வலியுறுத்த முடியாது. அவர்கள் கூறும், அரசியல் சீரழிவு, ஊழல், லஞ்சம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப வசதியின்மை போன்றப் பல பிரச்சினைகள் இருக்கலாம். அதற்காக, இந்த நாட்டை விட்டு செல்வது மட்டும் தீர்வாகாது. அதே நேரத்தில், பலர், இங்கிருந்து கொண்டு இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளனர் என்பதையும் மறுக்க முடியாது. Infosys நாராயண மூர்த்தி, நந்தன் நில்கேனி, அருண் சோரி, K.V.காமத் (ICICI), உள்பட பலர். இன்னும் பலர், ஐஐடி களில், ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் அவர்களின் எண்ணிக்கை சொற்பமே. மற்றவர்களைப் போல, நந்தன் நில்கேனியும் வெளிநாட்டிற்கு சென்றிருந்தால், நாம் Infosys என்ற சிறந்த நிறுவனத்தை பெற்றிருக்க மாட்டோம். Infosys, தற்போது 30000 க்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு கொடுத்துள்ளது மட்டுமன்றி பொருளாதாரம் உயரவும் வழி வகுத்துள்ளது. ஐஐடிகளில் படித்தவர்களில் 50% இங்கு தங்கி இருந்தாலே நிச்சயமாக Infosys போல பல நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் துவக்கப்பட்டு சாதனைகள் பல செய்திருக்க முடியும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், தேசிய நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு முன்னாள் ஐஐடி மாணவர், சில சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்டார். அப்போது, ஓர் ஐஐடி ஆசிரியர், "இந்திய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் ஐஐடி மாணவர்கள் இந்தியாவில் பணிபுரிவதை ஊக்கப்படுத்த மாட்டோம்" என்றார்.

இது அவரின் பொறுப்பற்றத்தன்மைக்குச் சான்று. அந்த மாணவரின் மறைவு பெரிய இழப்புத் தான். ஆனால் இந்தியா போன்ற பெரிய, வளர்ந்து வரும் நாட்டில் இது போன்ற சில நிகழ்வுகள் சில நேரங்களில் தவிர்க்க முடியாததது. முதலில் இத்தகய ஆசிரியர்கள் தங்களின் எண்ணங்களை மாற்றிக் கொண்டு, மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அப்போது தான் அவர்களுக்கும் நம்பிக்கை பிறக்கும். நம் நாட்டிற்கும் ஒரு வழி கிடைக்கும்.

என்ன தீர்வு:

ஐஐடி, சேர்க்கை விதிகளில் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். ஐஐடி மாணவர்கள், மேல்படிப்பிற்கு வெளிநாடு செல்ல எந்த தடையும் இல்லை. அவர்கள் தங்கள் குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்த, அங்கு பணிபுரியவும் எந்த தடையும் இல்லை. ஆனால், 10 வருடங்களில் அவர்கள் தாய்நாடு திரும்ப ஆவண செய்ய வேண்டும்.

இந்தியா மாறாது; இது வாழ்வதற்கு உகந்த நாடு அல்ல என்று அங்கிருந்து கூவுவதை விடுத்து, அதை மாற்ற என்ன செய்யலாம் என்று எண்ணி செயலில் இறங்குவது சாலச் சிறந்தது.

ஐஐடி ஆசிரியர்கள், மாணவர்களை இந்தியா திரும்புவதற்கான அவசியத்தை எடுத்துரைத்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

இந்த மாறுதல்கள் மிக மிக அவசியம்.

இல்லையென்றால், ஐஐடிகள், வெளிநாடுகளுக்கு தலைசிறந்த வல்லுனர்களை ஏற்றுமதி செய்யும் வெறும் மனித தொழிற்சாலைகளாகி விடும்.

imamcivil@gmail.com

எல்லா இணைய தளங்களிலும் தமிழில் தட்டச்சலாம்

எல்லா இணைய தளங்களிலும் தமிழில் தட்டச்சலாம்

http://tvs50.blogspot.com/2009/06/type-eveywhere-in-tamil.html

இணையத்தில் தமிழில் டைப் செய்வது என்பது இன்னும் முழுமை பெறாத விசயமாகவே இருக்கிறது. பெரும்பான்மையான வலைப்பதிவர்கள் NHM Writer உபயோகித்து தமிழில் டைப் செய்து வருகிறார்கள். NHM Writer உபயோகித்து எங்கு வேண்டுமானாலும் தமிழில் டைப் செய்யலாம்.

எளிமை காரணமாக அதிகமானோர் Google Transliteration மூலம் தமிழில் டைப் செய்து காப்பி செய்து வேண்டுமென்ற இடத்தில் பேஸ்ட் செய்வார்கள். பின்னூட்டம் இடும் போதோ, சாட் (Chat) செய்யும் போதோ இப்படி காப்பி பேஸ்ட் செய்வது கடின வேலையாக இருக்கும். தட்ஸ்தமிழ், தமிழிஷ், நக்கீரன் போன்ற தளங்கள் தங்கள் பின்னூட்ட பெட்டியில் Google Transileration ஒருங்கிணைத்து உள்ளார்கள். அங்கு எந்த பிரச்சினையும் இல்லை. நேரடியாக அங்கே தமிழில் நம் கருத்துகளை வெளிப்படுத்தலாம்.

ஆனால் பிளாக்கர், வோர்ட்பிரஸ் வலைப்பூக்கள், தினமலர், ஜிமெயில் சாட்டிங் போன்ற தளங்களில் நேரடியா தமிழில் டைப் செய்ய இயலாது. எனது இந்த பிளாக்கின் "தேடுங்கள்" பகுதியில் கூட நீங்கள் தமிழில் நேரடியாக டைப் செய்து தேட முடியாது. இது போன்ற தருணங்களில் வேறு எங்காவது தமிழில் டைப் செய்து பேஸ்ட் செய்ய வேண்டி இருக்கும்.

இந்த சிக்கலை போக்க Google எந்த தளத்திலும் தமிழில் டைப் செய்வதற்காக ஒரு வசதியை அறிமுகப்படுத்தி உள்ளனர். ஒரு சிறிய ஜாவாஸ்கிரிப்ட் நிரலை உங்கள் இணைய உலாவியின் Bookmark டூல்பாரிலோ, Favorites லோ இணைத்து கொள்ள வேண்டும். வேண்டுமென்ற போது அதனை கிளிக் செய்து எல்லா இணையத்தளங்களிலும் தமிழில் டைப் செய்யலாம்.



இத்தனை எப்படி நிறுவது என்பதை பற்றி அறிய கூகுளின் இந்த உதவி பக்கத்திற்கு செல்லுங்கள். அங்கே படங்களுடன் மிகவும் எளிமையாக விளக்கி உள்ளார்கள். பெரும்பாலான இணைய உலாவிகளில் எப்படி நிறுவுவது என்பது பற்றிய விளக்கம் அங்கு உண்டு.


அதனை நிறுவி கொள்ளுங்கள். நீங்கள் ஒரு இணைய பக்கத்தில் இருக்கும் போது அங்கு தமிழில் டைப் செய்ய விரும்பினால் நீங்கள் நிறுவிய [அ Type in Tamil] பட்டையை கிளிக் செய்து Transliteration Enable செய்து கொள்ளுங்கள். வேண்டுமென்ற இடங்களில் தமிழில் டைப் செய்து கலக்குங்கள். இனிமேல் நீங்கள் கூகிள் ஜிமெயில் சாட்டிங்கில் தமிழில் அடுத்தவருடன் எளிதாக தமிழில் டைப் செய்து உரையாடலாம்.

குறிப்பு : இந்த முறை பிளாக்கர் இடுகைகளுக்கு கீழே இடம் பெறும் பின்னூட்ட பெட்டிகளில் வேலை செய்வதில்லை. தனிப்பக்கத்தில் திறக்கும் பின்னூட்ட பக்கங்களில் வேலை செய்கிறது.

சாதிக் பைஜியுட‌ன்

சாதிக் பைஜியுட‌ன்