Tuesday, July 13, 2010

நபிகள் நாயக சீர்த்தி

நபிகள் நாயக சீர்த்தி

( அ.தெளஃபீக் ரமீஸ், M.C.A.,M.A.,M.Phil.,NET.,Cert.in.urdu.,

தமிழாய்வுத் துறை, ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சி – 20 )

முஹம்மது (ஸல்) என்னும் திவ்ய நாமத்திற்கு சீர்த்திப் பெற்றியவர் புகழப்பட்டவர் – புகழுக்குரியவர் என்னும் ஆழிய பொருள் உண்டு. அப்பெரும் பெயரின் அர்த்த பாவங்களில் ஆழ்ந்து திளைத்தல் என்பது நல்லோர் பெறும் தனிப்பேறு. இறைவனின் திருவருள் நிறைந்த குருவருளால் அத்தீங்சுவையில் ஒரு கோண்பாகம் கண்டுளேன்.

முஹம்மது (ஸல்) என்னும் திவ்ய நாமத்திற்கு ‘சீர்த்திப் பெற்றியர்’ –புகழப்பட்டவர் – புகழுக்குரியவர் என்னும் ஆழிய பொருள் உண்டு. அப்பெரும் பெயரின் அர்த்த பாவங்களில் ஆழ்ந்து திளைத்தல் என்பது நல்லோர் பெறும் தனிப்பேறு. இறைவனின் திருவருள் நிறைந்த குருவருளால் அத்தீஞ்சுவையில் ஒரு கோண்பாகம் கண்டுள்ளேன்.

முஹம்மது (ஸல்) என்பது திவ்ய நாமம். ‘திவ்’ என்றால் ஒளி என்று பொருள் மூலமந்திரத் திருக்கலிமாலின் இருபத்து நான்கு அட்சரங்களும் நூரீ என்னும் ஒளியெழுத்துக்கள். எனவே,’முஹம்மது’ (ஸல்) என்பது ஒளிதிகழ் நற்பெயர் என்பது தெற்றென விளங்கும். அதனாலன்றோ, தாஜுஸ்ஸலவாத்தில் “இஸ்முஹூ மக்தூபுன் மர்ஃபூஉன் மஷ்ஃபூஉன் மன்கூஷுன்ஃபில் லவ்ஹி வல் கலம்” என்னும் நனி சால அழகிய கோர்வை.

‘வ குல்ல ஷைஇன் அஹ்ஸைனாஹூ ஃபீ இமாமின் முபீன்’ என்பது திருக்குர்ஆனில் ஒரு ஸ்லோகபாகம். இதனால் முஹம்மது (ஸல்) என்னும் செளந்தர்ய நாமம் மக்தூபானது என்பது பெற்றோம்.

‘வரஃபஃனா லக திக்ரக்’ என்று வல்லோனாம் அல்லாஹ் நம் நாயகத்தை நோக்கி நயந்து கூறினன். இதனால், முஹம்மது (ஸல்) என்னும் ஐஷ்வர்ய நாமம் மர்ஃபூவானது என்பது பெற்றோம்.

‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்பது திருக்குர்ஆனில் ஒரு ஓதம் திருக்கலிமாவின் இந்தச் சற்குணபாகத்தின் பொருட்டால் ஆதிபிதா ஆதம் (அலை) பாவமன்னிப்பென்னும் அகசொஸ்த்தம் பெற்றதறிவோம். இதனால், முஹம்மது (ஸல்) என்னும் கற்பக நாமம் மஷ்ஃபூவானது என்பது பெற்றோம்.

‘லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்னும் தாரக மூல சாராம்ஸ மந்திரத் திருக்கலிமாவை ஏகன் தன் அர்ஷெ முஅல்லாவில் வைர அச்செனப்பொறித்தனன். இதனால், முஹம்மது (ஸல்) என்னும் நித்ய – சத்ய – வித்ய நாமம் மன்கூஷானது என்பது பெற்றோம்.

முஹம்மது (ஸல்) சீர்த்திப் பெற்றியர் கீர்த்தி என்றால் புகழ். அதனினும் பெரிது சீர்த்தி. ‘சீர்த்தி மிகு புகழ்’ என்று தொல்காப்பியம் நவிலும் ‘மிகுபுகழ்’ என்பது வினைத்தொகை மிகுந்த – மிகுகின்ற – மிகும் என்று முக்கால முணர்த்தா நிற்பது. எனவே, முஹம்மது (ஸல்) அவர்களும் முன்பு புகழப்பட்டவர், இன்றும் புகழப்படுபவர், இனியும் ஓர் எல்லையின்றி புகழப்படப்போகிறவர் என்னும் உயரிய அந்தஸ்த்தில் உள்ளார்கள். ‘வலல் ஆகிரத்து கைருல்லக மினல் ஊலா’ என்பது திருக்குர்ஆன் ஸ்லோகமால் கணத்திற்குக் கணம் அண்ணலின் ஜ்யோதிர்மயம் விரிந்து பரந்த வண்ணம் உள்ளது.

இது நிற்க. முஹம்மது (ஸல்) என்னும் ஞானதீபத்திற்கு விட்டில்களான நாயகக்காதலர்தம் பேசரிய நிலை பற்றிச் சற்றே பேசுதல் விழைவாம். எங்கும் நிறை பரம்பொருளின் அம்ருத ஒளிக்கு ஓர் ஆடியாய்ப் பண்டு தெளிவெய்தி ‘தேசம்’ எனப் பெயரிய இப்பாரதத் திருநாட்டில் முந்தை ஞானியர் சிந்தையில் முகிழ்த்த உபாஸன உபாயம் நாயக நாயகி பாவனை என்பது உலகப் பிரஸித்தம். அஃது, துவக்கநிலைச் சாதகர்க்குத் தொடர்பறாமை கருதி சரீர சம்பந்த காமம் சான்ற பரிபாஷையில் பேசப்படுவதுண்டு. அவ்வாறன்றி, ஆப்தர் அறி நுணுக்க மொழியிலும் பேசப்படுவதுண்டு. பக்தி ரசம் கொப்பளிக்கும் இப்பாவனை பாவிய பாவிகப் பனுவல்கள் இஸ்லாத்தின் இதயமென நல்லறிஞர் ஒப்பும் சூஃபித்துவத்தில் சுடர் வீசிப் பூத்தன. இறைக்காதல் நறவம் நுரைத்துத் ததும்பும் இப்பொற்கிண்ணங்களில்தான் வான்படு வாலைக் குமரியின் வாலிபப்பால் என நபிகள் நாயகக் காதலும் பொங்கி வழிதல் காண்கிறோம். கஅபு (ரலி), மெளலானா ரூமி, இமாம் பூசரி, அல்லாமா இக்பால், குணங்குடி மஸ்தான், உமறுப்புலவர் மற்றும் இன்னோரன்ன ஞானக் கவிஞர்கள் நபிகள் நாயகத் திருமேனி நல்லழகை எல்லை கடவாது மோகித்து நின்று அதிரஸானுபவங்களில் தோய்ந்து மெத்த மெச்சி வருணித்துள்ளனர். அவ்வப்போது அப்போதுகளில் தாது கோதியபோது என் அந்தரங்கத்தில் உதிர்ந்த மகரந்தப் பொற்துகள்களால் என் உயிர் சிலிர்த்துப் பூப்படைந்த வழுவற்ற தெய்வப்பொழுதுகளை வழுத்துகிறேன். விம்மித விரிவடையும் என் நெஞ்சுக்கூடு வெடிப்புறல் அஞ்சி இருகரம் கொண்டு அழுத்துகிறேன்.

மெய்ஞான இலக்கியங்களில் காதற்பாவிகம் குறித்த தம் ஆய்வில் ஜோனா விண்டர்ஸ் (Jonah Winters), “It was the revolutionizing influence of Muhammad that inspired the development of a spiritual side to erotic poetry” என்று நாயகப் புகழ்ச்சி புகன்ற பின் இவ்வாறு எழுதுகிறார் “Unlike founders of certain other religions, Muhammad figures relatively little in the theme of erotic mysticism” எஞ்ஞான்றும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்பால் முறைபிசகு நேரா அணுகுமுறை காத்தற்பொருட்டு, ஞானக்கவிகள் தம் அறிவுவிழி மோகக் கிறக்கத்தில் மருகிச் செருகாது பேணி வந்துள்ளனர். எனினும், மெளலானா ரூமியின் இலக்கியங்களில் நாற்பதாண்டுகள் மூழ்கி ஆழங்காற்பட்டு நுண்மாண் நுழைபுலம் கண்ட அன்னிமேரி ஷிம்மெல் (Annemarie Scheimmel) கூறுவதுபோல் “The Western student of Islam will be surprised to see the strong ‘mystical’ qualities attributed to Muhammad’.

ஆய கலைகள் அறுபத்து நான்கிலும் நாயகப் பேரொளியின் நேயச் சாற்றின் ஈரம்பட வேண்டும் என்னும் அபிலாஷை என் அகத்தில் முற்றிவரும் இக்காலை, தூசுபடு பொறிநுகர்வின் மாசு இரித்த அருங்கலைவாணர்தம் நல்லிசை சிவணிய இலக்கியதரமார்ந்த பாடல்களைச் செவித்துச் சுவைத்து, பாகென மெழுகும் பக்தியில் பரவசம் பயில்வேனுக்கு நாயகம் மீதூறும் நற்காதலால் பாசுரங்கள் எழுதிப் பார்க்க ஆவல் மேலிட்டது. தளையறியேன், தொடையறியேன், இலக்கணப் புலமை என்னும் நிலையறியேன். எனினும் ஆசை பற்றி அறையலுற்றேன். ‘காற்றின் வரும் கீதமே’ என்னும் பாடல் வழி ராகத்திற்குக் கேள்விக்கொடை நல்கியவர் இசைஞானி.

பல்லவி

யா சையிதுல் அன்பியா – என்

ஆசைமயல் தீர்க்க வாரீர் (யா சையிதுல் …)

அனுபல்லவி

வாசமிகு அமுத வாய்திறந்து

வாழ்த்து மொழியொன்று கூறீர் (யா சையிதுல்…)

சரணங்கள்

நேசமுடன் உங்கள் தாள்பணிந்தேன்

நெஞ்சம் நெகிழ்ந்திட முத்தமிட்டேன்

கோசங்கள் எனை மோசம் செய்யாமல்

காவல் கொடுத்து அபயநிலை தாரீர் (யா சையிதுல்…)



தாசர்க்குத் தாசர்க்குத் தாசன் என்னும்

தரமொன்று அடைந்துட எனை ஏற்றி

நாச நிலைகள் என்னை அணுகாமல்

நபியே ! கதியே ! நல்லருள் தாரீர் (யா சையிதுல்…)



வீசுமுக நிலவில் தினம் குளித்து

தேசு மழை நனைந்து உயிர்குளித்து

மாசில் எழில் நிறைந்த உமை நோக்கி

மண்மேல் உய்யும் அநுபவம் தாரீர் (யா சையிதுல்…)




ந‌ன்றி :
தி ஜ‌மால் 2006 - 2007
ஜ‌மால் முஹ‌ம்ம‌து க‌ல்லூரி ஆண்டு ம‌ல‌ர்


--
MUDUVAI HIDAYATH
www.imandubai.org
www.mudukulathur.com