இப்படியும் ஒரு தமிழ் சேவை
பலரும் பலவிதமான வழிகளில் சமுதாயத்திற்கு பல சேவைகளையும், தேவையுள்ளவர்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகின்றார்கள். சேவைகளிலே சிறந்த சேவை எது என மகாகவி பாரதியாரை கேட்டால் அவர் சொல்லுவார் "அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கியொளிர நிறுத்தல் அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" என்று.
மாறிவரும் உலகச் சூழலில் நம் வாழ்க்கை முறைகளும் வெகுவாய் மாறிவிட்டன. முன்பெல்லாம் வேலைக்காக வயக்காட்டுகளுக்கும், பண்ணை தோப்புகளுக்கும் போனார்கள். அதன் பின்னர் வேலைகளுக்காக மில்லுகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் போனார்கள். இப்போதெல்லாம் வேலைக்காக அடுக்குமாடி கட்டடங்களுக்கு விரைகின்றார்கள். உலகின் உற்பத்தி துறையை சீனா மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக்கொண்டாலும் சேவை மற்றும் கணிணி மென்பொருள் உருவாக்குவதில் நம்மவர்கள் உஷாராய் இருந்து பல லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை நம் ஊர் கொண்டுவந்தார்கள். இந்த கணிணி யுக பூம்மினால் நம்போன்ற நடுத்தர வர்க்கத்தினரால் கொஞ்சம் தலை நிமிர முடிந்தது.
இந்த வாய்ப்பில் எங்கோ சத்திரப்பட்டிகளிலும் ஆண்டிப்பட்டிகளிலும் அரசுபள்ளிகளில் தமிழில் படிக்கும் மாணவர்களும் பங்குபெறவேண்டும், ஜப்பானியர் போல் நாமும் தாய் மொழியில் படித்தால் இன்னும் அதிகம் சாதிக்க முடியும் என்ற நோக்கில் கணிணி தொழில் நுட்ப பாடங்களை எளிய தமிழில் மொழிமாற்றி அவற்றை இலவசமாக ஏழை மாணாக்கர்களுக்கு வழங்கும் அரியதொரு பணியை செய்து வருகின்றார் ஒரு மனிதர். அவர் பெயர் பாக்கியநாதன்.
இவர் ஏற்கனவே போட்டோஷாப், கோரல்டிரா, பேஜ்மேக்கர், எளிய தமிழில் VC++, எளிய தமிழில் ஜாவா, எளிய தமிழில் யூனிக்ஸ், எளிய தமிழில் ஆரக்கிள், ஆரக்கிள் கட்டளை குறிப்புகள், Ms-Word கேள்விப்பதில்,C Function quick Reference முதலான நூல்களை தமிழில் எழுதியுள்ளார். விரைவில் PHP5 & MySQL, Tally,E-Publishing,Excel-2007 Tips முதலான நூல்களும் தமிழில் வரவிருக்கின்றனவாம்.
திரு அப்துல் கலாம் ஐயா போல் அரசு பள்ளியிலேயே முழு படிப்பையும் தமிழிலேயே படித்து முன்னுக்கு வந்து இன்றைக்கு முன்ணணி நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொருவரும் சில டாலர்கள் இவருக்கு கொடையாக வழங்கினாலே இப்பணியை இவர் மென்மேலும் சிறப்பாக செய்ய அது நிச்சயம் உதவியாய் இருக்கும்.
நான் பயணித்து வந்த அந்த கடினமான பாதையை கொஞ்சம் திருப்பிப்பார்த்தேன். சொல்லவேண்டுமென தோன்றிற்று. சொல்லிவிட்டேன். :)
மேலும் விவரங்களுக்கு அவரது இணையதளம் பார்க்கவும்
http://www.tamilsoftwarebooks.org
அவரது விலாசம்
Bakkia Nathan
Bakkiam Consultancy Services
Old No: 60, New No: 127,
Angappa Naicken Street,
Parrys, Chennai-600 001.
Phone: 044-43517072
Mobile: 9840324409
email: author@tamilsoftwarebooks.org