1) தயவுசெய்து சிறுகுழந்தைகளுக்கு ஏ,பி,சி,டி..என எழுத்துக்களை முதலில் சொல்லிக்கொடுக்காதீர்கள்.
2) அதேபோல இளம்சிறார்களை நோட்டு, பேனா,பென்சில், புத்தகம் முதலியவற்றின் பக்கமே அண்டவிடாதீர்கள்.
3) எழுத்துக்களை கற்றுத் தருவதை தடைசெய்யவேண்டும்.
4) நாம் குழந்தையாக இருக்கும்போது நமது அம்மா, அப்பா, அண்டை வீட்டாரிடம் முதலில் தமிழ் பேசத்தானே கற்றுக்கொண்டோம். எழுதப்படிக்க பிறகுதானே கற்றுக்கொண்டோம்.
5) சிறுவர்களுக்கு அம்மா என்றால் மம்மி யில் ஆரம்பித்து - அவர்களிடம் சின்னச்சின்ன வார்த்தைகளாக தமிழிலும் ஆங்கிலத்திலும் இணையாகப் பேசமட்டும் கற்றுக்கொடுக்கவும்.
6) சிறார்கள் எப்போதும் இது என்ன - இந்தப் பொருளை எப்படி ஆங்கிலத்தில் அழைப்பது - என்று நச்சரித்தார்கள் - என்றால் அது குறித்து நீங்கள் பெருமகிழ்ச்சி அடைந்தே தீரவேண்டும். அவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து உங்களுக்குத் தெரியாததை அவர்கள் விடாப்பிடியாகக் கேட்டார்கள் என்றாலும் அதற்கான ஆங்கிலப் பதத்தை அர்த்தத்தை நீங்கள் அகராதியில் - இணையத்தில் திரட்டி அவர்களுக்குப் புரியும்படி எளிமையாகச் சொல்லிக்கொடுங்கள்.
7) இளம்குழந்தைகள் அதுஎன்ன - அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்கும் அழகே தனிதான். அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வது நமது கடமை.
8) நாம் எப்படி எழுத்துக்களை அறிவதற்கு முன்னரே தமிழில் பேசக் கற்றுக்கொண்டோமோ - அதே மாதிரி நமது குழந்தைகளை ஆங்கில எழுத்துக்களை சொல்லித் தருவதற்கு முன்னால் ஆங்கிலத்தைப் பேசக் கற்றுத்தந்தே ஆகவேண்டும்.
9) அவர்கள் சில நாட்களுக்குப் பிறகு - சிறிய சிறிய வாக்கியங்களாகப் பேச ஆரம்பிப்பார்கள். அதற்குள்ளாகவே அவர்கள் பல்லாயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்தவர்களாக இருப்பார்கள். இதுவரைக்கும் கூட நாம் எழுத்துக்களை வாசிக்கக் கற்றுக்கொடுக்கக் கூடாது.
10) ஏராளமான வார்த்தைகளையும், புதுப்புது வாக்கியங்களையும் பேச ஆரம்பித்தபிறகு மட்டுமே ஆங்கிலத்தை எழுதப்படிக்க கற்றுக்கொடுக்கவேண்டும். நாமும் முதலில் தமிழில் பேசிவிட்டு அதுவும் நன்றாக அரட்டை அடிக்கும் அளவுக்குத் தமிழ் தெரிந்த பிறகுதானே எழுதப்படிக்கத் தெரிந்துகொண்டோம்.
ஆனால் இந்த சமுதாயத்தில் ஆங்கிலம் மட்டும் எழுத்திலிருந்து ஆரம்பித்து கடைசி வரையில் பேசத்தெரியாமல் எத்துணை மக்கள் மனப்புழுக்கத்துடன் வாழ்கிறார்கள்.
Mujibur Rahman (Sr. Programmer)
No comments:
Post a Comment