பொதுவாக சில மனிதர்கள் நிகழ் காலத்தில் வாழ்வதில்லை. கடந்த காலத்திலேயே தங்கிவிடுகிறார்கள். கடந்த காலத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனையை எதிர் காலத்திற்கும் கொண்டு செல்வார்கள். அதன் மூலம் தனக்குக் கிடைக்கும் மகிழ்ச்சியையும் துன்பகரமான நோக்கிலேயே நோட்டமிடுவார்கள்.
இப்படிப் பட்டவர்கள் தன்னுடைய மகிழ்ச்சியை குறித்து சிந்திப்பதேயில்லை. இவர்கள் தங்களைத் தானே மன அழுத்தத்திற்கு உள்ளாக்கிக் கொள்வார்கள். எப்போதும் இவர்கள் மனம் கவலையோடே நிரம்பி யிருக்கும். முகத்தில் சோர்வு நிலை தாண்டவமாடும். இவர்கள் சிந்தனையெல்லாம் வருங்காலத்தில் என்ன துன்பம் நேரப் போகிறதோ என்றுதான் இல்லை. கடந்த காலத்தில் ஏற்பட்ட துன்பங்கள் குறித்துத் தான் இருக்கும்.
இவர்கள் எதற்கும் திருப்தி அடையாதவர்களாய் இருப்பார்கள். பிறரைப் பற்றி இவர்கள் நினைத்துக்கூட பார்ப்பதில்லை. மற்றவர்களுக்கு அறிவுரை என்னும் பேரில் ஏதாவது சொல்லி அவர்களது இன்பத்தையும் கெடுப்பார்கள். இவர்கள் எந்நேரமும் தன்னுடைய கவலைகளைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பதால், இவர்கள் பேச்சிலும் கவலைதான் தெறிக்கும். இவர்களின் வார்த்தைகள் அவ நம்பிக்கையால் சலவை செய்யப் பட்டிருக்கும்.
இப்படி இவர்கள், தேவையில்லாத அவசியமில்லாத விஷயங்களுக்காக கவலைப்படுவதனால், இவர்களின் அன்றாட வாழ்க்கை அவதிக்குரியதாக இருக்கும். இவர்கள் வருங்காலத்தின் மேல் அளவற்ற அவ நம்பிக்கையும் பயமும் கொணடிருப்பார்கள். இந்தப் பிரச்சனை வருமோ அந்தப் பிரச்சனை வருமோ யென்று, வரப்போகாத பிரச்சனைகளும் வந்து விடுமோயென சந்தேகப் படுவார்கள். அது அவர்களின் மனப்பான்மையை சுருக்கி விடுகிறது. நோய்களை வாழ்நாள் குத்தகையாக ஆக்கிக்கொள்கிறது.
ஒரு மனிதன் தனக்கு இன்பம் வரப்போகிறது. இன்பம் மட்டும்தான் வரப்போகிறது என்று எண்ணும் குணம் உடையவானக இருப்பானாயின் அவனுக்கு நிச்சயமாய. இன்பம்தான் நேரும். அப்படியே துன்பம் நேர்ந்தாலும், அந்த துன்பமானது அவனை பெரிதளவில் பாதிக்காது. ஆனால் எவனொருவன் தனக்கு துன்பம் நேர்ந்துவிடுமோ என பயப்படுகிறானோ, அவனுக்கு நிகழப்போகும் இன்பம் கூட துன்பமாகவே காட்சியளிக்கிறது. ஒருவேளை அவனுக்கு ஏதாவது ஒரு சிறு துன்பம் நேர்ந்துவிட்டால் கூட போதும், அதை அவன் பூதக்கண்ணாடி கொண்டு பார்ப்பான்.
ஆக, எண்ணத்தில் இருப்பதுதான் செயல்படிவம் பெறும். அதற்காகத்தான் நம் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் 'கனவு காணுங்கள்' என்றார். உன் மனம் நல்லதையே நினைக்குமானால், உனக்கு நிகழக்கூடியவை அனைத்தும் நல்லதாகவே அமையும். எதிர்மாறாக உன் மனம் துன்பத்தில் கிடக்கு மானால் நிகழும் நன்மைக்கூட துன்பமாகவே காட்சியளிக்கும்.
ஒருவன் காட்டு வழியாக சென்று கொணடிருந்தான். சூரியனின் வெப்பம் தாள முடியாமல் ஒரு மரத்தின் நிழலில் ஒதுங்கினான். அப்போது அவனுக்கு தாகமாக இருந்தது. குடிக்கத் தண்ணீர் கிடைத்தால் நன்றாக இருக்குமே என நினைத்தான். என்ன ஆச்சரியம், எங்கிருந்தோ தண்ணீர் வந்தது.
அதைப் போலவே சாப்பிட உணவு கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தான், அவ்வாறு உணவும் வந்தது. சற்று நேரம் இந்த மரத்து நிழலில் தூங்கிவிட்டு செல்ல ஒரு கட்டில் கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தான். அவ்வாறே கட்டிலும் கிடைத்தது.
அவனது உள்ளத்தில் திடீரென்று ஒரு சஞ்சலம், இப்படி ஒரு காட்டில் தன்னந்தனியாக படுத்துக் கொண்டிருக்கிறோமே, ஏதாவது புலி நம்மை அடித்தால் என்ன செய்வது என்று நினைத்தான். அவன் நினைத்தது போல புலியால் அடிக்கப்பட்டு இறந்தான்.
இப்படித்தான் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நடந்து கொணடிருக்கிறது. எல்லாம் நன்மைக்கே என்று நினைப்பவனுக்கு நல்லவை நடக்கிறது. சஞ்சலம் உடையவனுக்கு அதற்கேற்றார் போல் நடக்கிறது.
மனிதன் நிகழ்காலத்தை வைத்து எதிர்காலத்தை கணிக்கக் கூடிய ஆற்றல் உடையவனாக இருந்தாலும், அவன் கணித்தவாறே நடக்கும் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. எல்லாம் நம்பிக்கைதான்.
பூமியிலிருந்து வேற்று கோள்களுக்கு அனுப்பும் விஞ்ஞானிகள், இந்த விண்கலம் இந்த நேரத்தில் இங்கே தரையிரங்கும், இங்கிருந்து இன்னயின்ன விஷயத்தை படம் பிடித்து அனுப்பும் என்று சொன்னால்கூட அதில் அவர்களுக்கு தொண்ணூற்று ஒன்பது சதவிகிதம் தான் நம்பிக்கை இருக்கும். ஒரு சதவிகிதம் சஞ்சலம் இருக்கும். ஆனால் அதை அவர்கள் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். முழு உறுதியோடு செயல்படுவார்கள்.
இப்படி விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பும் முன்பே அது போய்ச் சேருமா, இல்லை கோளாறு ஏற்படுமா, இல்லை விபத்து நேருமா என்று விஞ்ஞானிகளுக்கு தெரிய வந்தால், அதற்கேற்றாற் போல் செயல்படுவார்கள். ஆனால் இவைகள் எதிர்பாராமல் நிகழும்போது ஏமாற்றம் தான்.
இங்கே "எதிர்பாராமல்" என்ற வார்த்தைதான் நாம் கவனிக்க வேண்டியது. ஏனெனில் அது எதிர்காலத்தோடு தொடர்புடையது. ஒரு மனிதன் தனக்கு வருங்காலத்தில் அளவற்ற செல்வங்கள் கிடைக்கப் போகிறது என்றால், இப்போதிலிருந்து அவன் சோம்பேறி ஆகிவிடுவான். இதுவே ஒரு மனிதனுக்கு துன்பம் நேரிடப் போகிறது என்று தெரிந்தால், இப்போதிருந்தே அவன் இன்பத்தை தொலைத்து விடுவான்.
ஆகையால்தான், எதிர்காலம் எதிர்பாராதவையால் சூழப்பட்டிருக்கிறது. என்னதான் எதிர்காலம் எதிர் பாராதவையால் சூழப்பட்டிருந்தாலும், நிகழ்காலத்தை அடிப்படையாகக் கொண்டே வருங்காலம் வடிவமைக்கப்படுகிறது. நிகழ்காலத்தில் அவன் சிந்தனையும் செயலும் சிறப்பாய் இருந்தால் எதிர் காலமும் அவ்வாறே அமையும்.
நிகழ்காலத்தில் சிந்தனையில் தெளிவு இல்லாமலும் செயலில் பிரகாசமில்லாமலும் இருப்பவன் எதிகாலத்தையும் அவ்வாறே அமைத்துக் கொள்கிறான். இவர்கள் படுக்கையறையையும் விட்டு வைப்பதில்லை. அங்கேயும் துன்பத்தோடு புரண்டு புரண்டு படுப்பார்கள். தூக்கத்தை கெடுத்துக் கொண்டு துக்கத்தை அதிகரிப்பார்கள்.
மனிதனுக்கு தூக்கம் என்பது, அவன் துயர்கள் அனைத்தையும் மறப்பதற்காகவும், உழைத்து உழைத்து களைத்த உடம்பிற்கு ஓய்வு தந்து, மீண்டும் உழைப்பதற்கான ஆற்றலையும் ஆரோக்கியத்தையும் பெறுவதற்காகத் தான்.
ஆனால் பெரும்பாலோர் என்ன செய்கிறார்கள். இரவு நேரத்தில் சரிவர தூங்குகிறார்களா? இல்லை. நாளை எப்படி இருக்குமோ, என்ன நடக்குமோ என்று கவலைப்படுகிறார்கள். பகலைத்தான் இன்பமாக கழிக்க வில்லை என்றால், இரவையும் அவ்வாறே கழிக்கிறார்கள்.
இன்னும் சிலரின் கவலைகள் வித்தியாசமானது. அவர்கள் தனக்கு தூக்கம் வரவில்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டு, தன் மனத்தை உறுத்திக் கொண்டிருப்பார்கள். அதுவே அவர்களின் தூக்கத்திற்கு பெருந்தடையாக அமைந்துவிடும்.
நாம் சிறப்பாய் செயல்படுவதற்காக எப்படியெல்லாம் பயிற்சியை மேற்கொள்கிறோமோ, அவ்வாறே தூங்குவதற்கும் சில பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அந்த பயிற்சி ஒன்றுமில்லை. பகலில் செய்ய வேண்டியதை ஒழுங்காய் செய்வதுதான்.
ஆக சீரான தூக்கத்திற்குக்கூட பயிற்சி அவசியமாகிறது. நாம் படுக்கைக்கு செல்லும் முன் நம் மனத்திலுள்ள பிரச்சனைகளை, சிக்கல்களை எல்லாம் விரட்டி விட்டு மன அமைதியோடு படுக்கைக்கு சென்றால் நிச்சயம் நல்ல தூக்கம் வரும். படுக்கையில் நம் உடலை அலட்டிக் கொள்ளாமல் தொய்வாய் படுக்க வேண்டும். முக்கியமாய் தூக்கம் வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி, கண்களை மூடி்க் கொண்டு "நான் நிம்மதியாய் தூங்கிக் கொண்டிருக்கிறேன்" என்ற எண்ணத்தை மனத்தில் ஓடவிட வேண்டும்.
மனிதனுக்கு இன்றை தினமென்பது நிச்சயம், அது அவனுக்குச் சொந்தமானது. ஆனால் நாளை என்பதோ நிச்சயமற்றது. அதை அவன் சொந்தம் கொணடாட தகுதி அற்றவன். ஏனெனில் நாளை என்பதில் அவனே இல்லாமல் கூட போகலாம்.
ஆகையால்தான் இருக்கும் இன்றினை மனநிறைவோடு வாழக் கற்றுக் கொள் என்று மேதாவிகள் சொல்கிறார்கள்.
இன்று என்பது நேற்றாகிறது. நாளை என்பது இன்றாகிறது. ஆகையால் இன்றை எவன் கவலைப்படாமல் மன அமைதியோடு வாழ்கிறானோ, அவன் நேற்றையும் நாளையும் அவ்வாறே வாழ்ந்தான், வாழ்வான்.
நேற்று என்பது நினைவு, நாளை என்பது நம்பிக்கை. மனிதனுக்கு நாளை பற்றிய பயத்தை கட்டுப் படுத்தும் உணர்ச்சி பெரும்பாலும் குறைவாகவே இருக்கின்றன. இந்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் இல்லாதவன் கவலைப்படுகிறான். பயப்படுகிறான். இப்படியே தினந்தினம் அவன் செத்துப் பிழைக்கிறான். இதன் காரணமாக அவனுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. பின் நரம்பு தளர்ச்சி, மூளை பாதிப்பு போன்றவற்றால் பாதிப்பிற்கு உள்ளாகிறான்.
ஆனால் இத்தகைய பய உணர்ச்சி அற்றவனோ, இல்லை இதையெல்லாம் கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையவனோ, இத்தகைய மன அழுத்தத்திற்கு உள்ளாவதில்லை. அவன் எதையும் சமாளிக்க தயாராக இருப்பான்.
மன அழுத்தம் நம்மை ஆட்கொணடால் முதலில் மனம் சோர்ந்து போகிறது. பின் உடல் சோர்ந்து போகிறது. தலைவலி, மூச்சு வாங்குதல், எதற்கும் நமபிக்கையற்ற தன்மை, அழுகையென அது நம்மை வழி நடத்துகிறது.
நாம் எந்தச் சூழ்நிலையையும், பிரச்சனையையும் சமாளிக்கக் கூடியவானாக நம்மை பழக்கிக் கொள்ள வேண்டும். நடந்தவைகளுக்காக நாம் கவலைப்படுவதால் என்ன ஆகிவிடப் போகிறது. அது முடிந்து விட்டதுதானே. இனி நடக்கப்போவதைத்தானே நாம் வசப்படுத்த வாய்ப்பிருக்கிறது என்ற உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
சென்றவைகளைப் பற்றி நினைத்து, நாம் ஏன் நம் கண்ணீரை வீணாக்க வேண்டும். ஞானி அனக்ஸாகரஸ் என்பவரிடம் ஒருவர் ஓடி வந்து "ஐயா, தங்கள் மகன் இறந்து விட்டான்" என்ற இழவுச் செய்தியை சொல்கிறான். இதைக் கேட்டதும் ஞானி அனக்ஸாகரஸ் "இதில் என்ன இருக்கிறது. எல்லோரும் இறக்க வேண்டியவர்கள்தான் என்று கவலைப்படாமல் பதிலளித்தாராம்.
ஞானியாய் இருப்பதால் அவருக்கு இந்த விஷயம் பாதிப்பை தராமல் இருக்கலாம். ஆனால் சராசரி மனிதர்களுக்கோ இந்தச் செய்தி கண்டிப்பாய் பாதிப்பை தரும்.
உயிரை இழப்பதுதான் உச்சக்கட்டம். ஆகையால் நாம் உயிர் இழப்பு தவிர்த்து வேறு எந்தப் பிரச்சனைக்கும் கவலையடையக் கூடாது என்று தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். சொல்லப் போனால் இந்த உயிர் இழப்பால் ஏற்படும் கவலை கூட காலப்போக்கில் காணாமல் போய்விடும் என்பது உண்மை.
ஆகவே இருக்கும் காலத்தை ஆனந்தத்தோடு, மன அழுத்தம் இல்லாமல், பிரச்சனைகளை சமாளிக்கும் துணிவோடு வாழ்வோமாக.
Mail sent by
ahamed anas
No comments:
Post a Comment