Tuesday, June 17, 2008

ஒற்றுமையே வேண்டாம்

ஒற்றுமையே வேண்டாம்


சமீபத்தில் ஷியாக்களும், சுன்னிகளும் சேர்ந்து தொழுகை நடத்தியதாகவும்,
மேலும் நடத்த இருப்பதாகவும் இது ஏற்படப்போகும் ஒற்றுமையின் அறிகுறி
என்று ஒரு செய்தி படித்தேன் இதுவரை நடந்தவை, இனி நடக்கக் கூடியவை என்ன
விளைவுகளை ஏற்படுத்தும் என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை.

இந்த நிலையில் பொதுவாக இந்தியாவில், குறிப்பகத் தமிழகத்தில், இஸ்லாமிய
இயக்கங்களிடையே 'ஒற்றுமை' என்பது அனைவரும் எதிர்பார்ப்பட்டது.
ஆனால் எட்டாக் கனியாகவே காட்சி தருவது என்றாகி இருக்கிறது.

இப்போது பரஸ்பரத் தாக்குதல்கள் மூர்க்கமாகி இருக்கின்றன. ஆகவே ஒற்றுமை
என்பதே வேண்டாம். தாக்குதல்கள் த்ரம் தாழ்ந்து போகாமல் இருந்தால்
சரி என்கிற நிலைக்கு நாம் ஆளாகி இருக்கிறோம். சிலர் கண்ணியமாக தங்கள்
வாதத்தை முன் வைக்க சிலர் காட்டுத்தனமாக வசை மாரிகளைப் பொழிந்து
தள்ளுகிறார்கள்.

இதில் எதிலும் சேராத, நல்லதை மட்டுமே விரும்பும் என்னைப் போன்றவர்களும்
இடையில் அகப்பட்டுக் கொண்டு அநியாயத்துக்கு அநாவசிய சொல்லடிகளை
வாங்க வேண்டியதிருப்பதுதான் பெரும் சோகம்.

நான் ஒரு ஊடகவியளாளன். அல்ஹம்துலில்லா, ஓரிரு வருடங்களல்ல. சுமார் அரை
நூற்றாண்டுக்கும் அதிகமாக ! இதில் நமது சமுதாயத் தலைவர்களை
உலகின் பல்வேறு பகுதி மக்களுக்குப் பரிச்சயப் படுத்தும், நம் சமுதாயச்
செய்திகளை உலகெங்கும் எடுத்துச் செல்லும் வசதியும் வாய்ப்பும் இறைவன்
அருளால் எனக்கு அமைந்து இருக்கிறது. அதை நன்கு பயன்படுத்திக் கொண்டு
என்னால் இயன்றவற்றையெல்லாம் சமுக நன்மைக்கு செய்து வருகிறேன் -
பிரதி பலன் கருதாது.

தனி நபர் ஆராதனையில் (Hero Worship) எனக்கு நம்பிக்கை இல்லை. எந்த
இயக்கத்தின் மீதோ அல்லது கட்சியின் மீதோ எவ்வித பற்றும் கிடையாது.
உண்மையான் பத்திரிகை தர்மப்படி காய்தல், உவத்தல் இன்றி, விருப்பு -
வெறுப்புகளின்றி எல்லோர் கருத்துக்கும் மதிப்பளித்து அவற்றை மக்கள்
முன்பு
வைக்கிறேன். தீர்ப்பை அவர்களுக்கே விட்டு விடுகிறேன். கண்ணியமானவர்கள்,
விஷயம் தெரிந்தவர்கள் என்னுடைய இந்த நிலையை பாராட்டுகிறார்கள்.

இதைப் பொறுக்க மாட்டாதவர்களோ அல்லது " நீ எங்கள் இயக்கமில்லையா
அப்படியானால் நீ எங்கள் எதிரிதான்" என்கிற குரூரமான (Sadist) மனப்
பான்மை உடையவர்கள் புழுதி வாரித் தூற்றுகிறார்கள். அவர்கள்
தேர்ந்தெடுக்கும் வார்த்தைகள் நாகரீகமானவையாக இல்லை. ஒரு இந்துத்வ
"ஜடாயு"
அவ்வாறு திட்டுவதை என்னால் புரிந்து கொள்ளமுடியும். ஆனால் ஒரு முஸ்லிம்
'சத்தியத்தின் குரல்' அவ்வாறு செய்வது வேதனை தருகிறது.இத்தகைய
சூழ்நிலையில் அபூ நூரா போன்ற நண்பர்கள் கண்ணியமான வார்த்தைகளைப்
பயன்படுத்தி இருப்பது மனதுக்கு இதம் தருகிறது. அதேசமயம், நான் ஒரு
குறிப்பிட்ட இயக்கத்துக்குப் பயந்து கொண்டு அல்லது அங்கு எனக்குள்ள
நாற்காலி மறுக்கப் பட்டு விடும் என்கிற எண்ணத்தில் நான் செயல் படுவதாக
உள்
நோக்கம் கற்பித்து கொச்சைப் படுத்துவது நியாயமானதாகப் படவில்லை.

ஆயிற்று ஐம்பத்தெட்டு ஆண்டுகள் - ஒலிபரப்புத்துறையில் - ஊடகத் துறையில்
உள் நுழைந்து.! "உலகின் மூத்த தமிழ் ஒல்லிபரப்பாளன்" ( The most SENIOR
Tamil Broadcaster in the WORLD) என்கிற தகுதியை எனக்களித்துள்ள
இறைவனுக்கே எல்லப் புகழும் -- நன்றியும்.

இத்தனை காலத்தில் யாருக்கும் தீங்கு எண்ணியதில்லை. உண்மைகளை மட்டுமே
உலகுக்குச் சொல்வதில் உறுதியாக இருந்திருக்கிறேன். காரணம்
'உண்மைக்கு நடுநிலை இல்லை' என்று நம்புகிறவன் நான். எனக்குப் பூச்சூட
வேண்டாம், பொன்னாடை போர்த்த வேண்டாம், 'வாழ்-நாள் சாதனையாளர்'
விருது கூட வேண்டாம். என்னை தூற்றாமல் இருங்கள் போதும். என் கருத்து
பிடிக்கவில்லையா ? அதை எடுத்துச் சொல்வதில் ஒரு கண்ணியம் இருக்கட்டும்.

அதுபோல, ஒற்றுமை என்பது வருகிறபோது வரட்டும். இப்போது வேண்டாம் என்றால்
வேண்டாம் என்றே இருக்கட்டும். யாரும் சரி, எந்தச் சூழலிலும் சரி தரம்
தாழ்ந்து தாக்குவதைக் கை விடுங்கள். ஏனெனில் நாம் மனிதர்களுக்குப்
பயப்படாதவர்களாக இருக்கலாம். ஆனால் ஆண்டவனுக்குப் பதில் சொல்லியே
ஆக வேண்டும். எல்லாவற்றின் மையப் புள்ளியும் அதுதான்.

நலமே நடக்கும் என்கிற நம்பிக்கையுடன் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்
abjabin@gmail.com

No comments: