ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் சென்னையில் இலவச பயிற்சிக்காக விண்ணப்பிக்கலாம் என்று மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி அறிவித்துள்ளார்.
சென்னையில் சைதை துரைசாமி நிறுவியுள்ள மனிதநேய அறக்கட்டளை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு எழுதும் மாணவர்களுக்காக இலவச பயிற்சி அளித்து வருகிறது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு உணவு, உறைவிடம், பாட நூல்கள், யோகா பயிற்சி வகுப்புகள், சீருடைகள், போக்குவரத்து வசதிகள் என அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு இந்த அமைப்பில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கு 100 மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் 12 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு தேர்வாணையக்குழு நடத்தும் துணை மாவட்ட ஆட்சியர், காவல்துறை துணை சூப்பிரண்டு போன்ற குரூப்1 பணிகளுக்கான முதல்நிலை தேர்விலும் 22 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
கடந்த மே மாதம் இந்த மையத்தின் சார்பில் 90 மாணவர்கள் முதல் நிலை தேர்வு எழுதியுள்ளனர். இந்த தேர்வு முடிவுகள் ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் வெளியாகிறது. இவர்களுக்கான முதன்மை தேர்வு பயிற்சி வகுப்புகள் ஜூலை முதல்வாரத்தில் தொடங்கப்படுகிறது.
2009ம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., முதல்நிலை தேர்வுக்காக புதிய மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இந்த மையம் சார்பில் இலவச பயிற்சி தொடங்கப்பட உள்ளது. இதற்காக 8 மாதம் தொடர்ந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த இலவச பயிற்சியில் சேருவதற்கு குறைந்தபட்ச வயது 21 ஆகும். ஏதாவது ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் சிறந்து விளங்கிய கிராமப்புற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்த பயிற்சியில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு சென்னை, மதுரை, நாகர்கோவில், வேலூர், கரூர், ஈரோடு, திருச்சி ஆகிய இடங்களில் நடத்தப்படும்.
நேர்முகத்தேர்வு சென்னையில் நடைபெறும். இந்த நுழைவுத்தேர்வு ஜூலை மாதமும், பயிற்சியின் தொடக்கம் ஆகஸ்டு மாதமும் நடைபெறும்.
நுழைவுத்தேர்வு 2 தாள்கள் கொண்டதாக இருக்கும். முதல்தாளில் தேர்ந்தெடுத்து குறிக்கும் வினாக்களும், 2வது தாளில் கட்டுரை வடிவிலான வினாக்களும் இடம்பெறும். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு வினா கொடுக்கப்படும்.
இதில் பொதுஅறிவு, இந்திய வரலாறு, புவியியல், அரசியல், பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், பொருளாதாரம், பொது ஆங்கிலம், தமிழ் இலக்கிய வரலாறு ஆகிய பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.
இதற்கான விண்ணப்பங்களை மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பயிற்சி மையம், 28, ஒன்றாவது முதன்மைச் சாலை, சி.ஐ.டி.நகர், சென்னை600035 என்கிற முகவரியில் நேரடியாகவோ அல்லது இந்த அறக்கட்டளையின் இணையதள முகவரியிலோ பிரதியெடுத்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை மாதம் 4ந்தேதிக்குள்ளாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், சாதிச்சான்றிதழ் நகல், பட்டச்சான்றிதழ் நகல், சுய முகவரி எழுதப்பட்ட 3 தபால் உறைகள் ஆகியவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த தகவலை மனித நேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment