Sunday, July 27, 2008

திருக்குர்ஆனும் - திருக்குறளும்

திருக்குர்ஆனும் - திருக்குறளும்

தொகுப்பு : எம். முஹம்மது மஸ்தான், எம்.ஏ., பிஎஸ்ஸி
தலைமையாசிரியர் - ஓய்வு


விதிப்பற்றி திருக்குரானும்,திருக்குறளும்

இறைவன் கொடுத்ததை தடுப்பவன் எவனுமில்லை.
இறைவன் தடுத்ததை கொடுப்பவன் யாருமில்லை.
இறைவனின் அனுமதியின்றி எதுவும் நடப்பதில்லை.
இதை திருக்குர்ஆன்( 15 145 ) தெளிவு படக் கூறுகிறது.

மேலும் எந்த ஆன்மாவும் ( முன்னரே ) எழுதப்பட்டிருக்கும் தவணைக்கு இணங்க அல்லாஹ்வின் அனுமதியின்றி மரணிப்பதில்லை. எவரேனும் இந்த உலகத்தின் நற்பலனை ( மட்டும் ) விரும்பினால் நாம் அவருக்கு அதிலிருந்தே வழங்கிவிடுவோம். இன்னும் எவர் மறுமையினையும், நன்மையையும் விரும்புகிறானோ அவருக்கு அதிலிருந்து வழங்குவோம். நன்றியுடையோருக்கு அதி சீக்கிரமாய் நற்கூலி கொடுக்கிறோம்.

இதையே வள்ளுவர் தமது வான்மறையில் ஒரு கோடி பொருளை சேர்த்து ஒழுங்குப்படுத்தி வைத்திருந்தாலும் இறைவன் விதித்த வகையால் அல்லாமல் அவற்றை அனுபவிக்க முடியாது என்ற கருத்தை -

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
கொடுத்தார்க்கும் துய்த்தல் அரிது

என்ற குறலால் விளக்கப்படுகிறது.

கஞ்சத்தனமும், ஊதாரித்தனமும்

திருக்குர் ஆனில் ‘கஞ்சத்தனமுமாக உம்முடைய கையைக் கழுத்தில் மாட்டிக் கொள்ளாதீர். உம்முடைய வாயை முற்றிலும் விரித்து விடாதீர் ( 17 : 29 ) இதனை வள்ளுவர் கஞ்சத்தனமிக்கவன் இந்த பூமிக்கு பாரம் என்பதை -

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை

என்ற குறளிலும் ஊதாரித்தனம் இல்லாமல் முறையாக செலவு செய்வது பற்றி

ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி

என்ற குறளிலும் தெளிவாக விளக்குகிறார்.

தீயசெயல் பற்றி திருக்குரானும், திருக்குறளும்

மனிதர்களே : உங்களுடைய அடாத செயல்கள் ( தீய செயல்கள் ) உங்களுக்கே கேடாக முடியும் குரான் ( 10 : 23 ) இதனை வள்ளுவர்

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்

என்ற குறளில் தீயைக் காட்டிலும் தீயவை கொடுமையானது என்று கூறுகிறார்.

புறங்கூறுதல் பற்றி குரானும், குறளும்

பிறர் குறைகளை நீங்கள் துருவித் துருவி கொண்டிராதீர். அன்றியும் சிலர் சிலரைப் பற்றியும் புறம் பேச வேண்டாம் 50 : 2(16) இது பற்றி திருக்குறள் கீழ்வரும் குறள்களில் தெளிவாக விளக்குகிறது. பிறர் குறைகளைக் காண்பதுபோல் தம் குறைகளைக் கண்டு உணர்ந்தால் இந்த மண்ணுலகில் தீதில்லை என்பதை -

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டா மன்னும் உயிர்க்கு ?

என்ற குறளிலும், ஒருவன் தர்மம் என்னும் சொல்லைக்கூட சொல்லாமல் தீயவை செய்து ஒழுகினாலும் அவன் புறங்கூறமாட்டான் என்று நற்பெயர் எடுப்பதே நல்லது என்பதை -

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது

இக்குறளிலும் விளக்குகிறார்.

இன்னா செய்யாமை பற்றி இறைமறையும் இனிய குறளும் :

இறைமறையில், நன்மையும், தீமையும் சம்மாகமாட்டா. நீங்கள் ( தீமையை ) தன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது யாருக்கும் உமக்கும் இடையே பகைமை இருந்ததோ அவர் நண்பரே போல் ஆகிவிடுவார். 41:5(34) இதை திருக்குறள் நமக்கு தீங்கு செய்பவரை தண்டிப்பது அவர் வெட்கம் அடையும்படி அவருக்கு நல்லதைச் செய்தலே ஆகும். இதனால் அவர் தாம் செய்த செயலுக்கு வருந்தி வெட்கப்பட்டு திருந்துவார் என்பதை -

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்

என்ற குறளில் விளக்குகிறார்.

ஷக்கராத் பற்றி திருக்குறள்

எல்லா மனிதருக்கும், இறக்கும் தருவாயில் ‘சக்கராத்' என்ற நிலை ஏற்படும். அந்த நிலை வருவதற்கு முன்பாக எல்லாம் வல்ல இறைவன்பால் ஈமான் கொண்டு நல்வினை ஆற்றிட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது திருக்குரான். இதனையே திருவள்ளுவார் நாக்கு பேசமுடியாமல் செத்துவிக்கும் முன்பே நல்ல செயல்களை செய்திடல் வேண்டும் என்ற கருத்து மேலோங்கி கீழ்வரும் குறளில் சொல்லுகிறார்.

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்

எல்லாப்புகழும் இறைவனுக்கே :

எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று திருக்குர்ஆன் ‘அல்ஹம்துலில்லாஹ்' என்ற வாக்கியத்தின் மூலம் இயம்புகிறது. இதனை திருவள்ளுவர் தலைமைக் குணங்களுடைய இறைவனின் மெய்யான புகழை இடைவிடாது அன்போடு சொல்லுபவர்பால் ‘இருள்சேர் இருவினையும் சேரா'என்பதை சொல்லுவது மூலம் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பதை வலியுறுத்துகிறது.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்பரிந்தோர் மாட்டு

என்ற குறளில் தெளிவுபடக் கூறுகிறார்.

நன்றி : இஸ்மி
ஜூலை 2005

No comments: