Tuesday, July 15, 2008

துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பு நடத்திய கவியரங்கம் - நூல் வெளியிட்டு விழா

துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பு நடத்திய கவியரங்கம் - நூல் வெளியிட்டு விழா


துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பு மாதந்தோறும் கவியரங்கம் நடத்தி ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழ்ந்து வரும் கவிஞர்களை உலகறியச் செய்திடும் வண்ணமாக அதன் படைப்புகளை நூலாக்கி வெளியிட்டு வருகிறது.

இம்மாத கவியரங்கம் அன்பு எனும் தலைப்பில் கராமா சிவ் ஸ்டார் பவனில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

துவக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இந்நிகழ்வு பள்ளிப் பருவத்து நினைவுகளை அசை போடச் செய்தது.

அன்பு எனும் தலைப்பில் நடைபெற்ற கவியரங்கிற்கு முகவை முகில் மற்றும் வசந்தப்பிரியன் ஆகியோர் நடுவர்களாக இருந்து தொகுத்து வழங்கினர். கவிஞர்கள் காவிரிமைந்தன், இளைய சாகுல், ஜெயராமன், நிலாவண்ணன், ஜியாவுதீன், ஆதிபரணி, சிம்மபாரதி, கவிஞர் அத்தாவுல்லா உள்ளிட்டோர் கவிதைகளை வாசித்தனர்.

அதனைத் தொடர்ந்து தமிழ்த்தேர் எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு தமிழ் ஆர்வலர் ராஜகோபால் தலைமை வகித்தார்.
தான் பரோடோ, டேராடூன், பாட்னா உள்ளிட்ட பல்வேறு இந்திய நகரங்களில் பணிபுரிந்த போது அங்கெல்லாம் நடைபெற்ற தமிழ்ச் சங்க நிகழ்வுகளில் பங்கேற்றதை நினைவு கூர்ந்தார். ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை வரும் என்ற ஆவலை ஏற்படுத்திவிட்டது இக்கவிதை நிகழ்வு. ஒவ்வொருவரும் தான் பணிபுரியும் இடங்களில் சக பணியாளரிடம் அன்பு செலுத்திட வேண்டும் என இந்த அன்பு எனும் தலைப்பில் நடைபெறும் கவிதை நிகழ்வின் வாயிலாகக் கேட்டுக் கொண்டார்.

கவிஞர் அத்தாவுல்லாஹ் முன்னிலை வகித்தார். வானலை வளர்தமிழ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காவிரிமைந்தன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

துபாய் ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான் அவர்கள் குறித்த அறிமுகவுரையினை தளபதி ஏ.முஹம்மது தாஹா நிகழ்த்தினார். அப்துல் ரஹ்மான் அவர்கள் சிராஜுல் மில்லத் ஏ.கே.அப்துல் ஸமத் சாஹிப். பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. உள்ளிட்டோரின் சிஷ்யர் ஆவார். கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகளைச் செய்து வருபவர். துபாய் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மனித நேய மாண்பாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். எட்டாம் வகுப்பு படிக்கும் போதே தமிழகத்தின் சிறந்த மாண்வ பேச்சாளர் என்ற பட்டம் பெற்றவர்.

தமிழ்த்தேர் இதழின் அன்பு சிறப்பு வெளியீட்டை சொல்லின் செல்வர் எம்.அப்துல் ரஹ்மான் வெளியிட முதல் பிரதியை நிலவன் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து வெரோஸ், சீனிவாசன் பெற்றுக்கொண்டனர்.

எம். அப்துல் ரஹ்மானுக்கு நினைவுப் பரிசை முதுவை ஹிதாயத் வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட துபாய் ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் 'சொல்லின் செல்வர்' எம். அப்துல் ரஹ்மான் அவர்கள் தனது விழாப் பேருரையில் சகோதர சமுதாய மக்களுடன் தனக்குள்ள அன்பு வெளிப்பாட்டை உணர்ச்சிப் பூர்வ உரை நிகழ்த்தினார். வானலை வளர்தமிழ் அமைப்பு மாதந்தோறும் இத்தகைய கவிதை நிகழ்வினை நடத்தி வருவது குறித்து பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்வு இன்னும் விரிவடைய வேண்டும் என்றார். கண்ணதாசன் மீது காவிரிமைந்தனுக்கு உள்ள ஈடுபாடு அவரைவிட அவர் தமிழின் மீது கொண்டுள்ள பற்றின் காரணமாகவே எனலாம்.

ஒவ்வொரு சமயமும், மார்க்கமும் அனபை எவ்வாறெல்லாம் விவரித்துள்ளன எனபதனை எடுத்தியம்பினார் அப்துல் ரஹ்மான். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணி விழா மாநாட்டில் தான் சமய நல்லிணக்க விருது பெற தேர்வு செய்யப்பட்டதாகவும், அதனை தன்னை விட எழுபதாயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு காரணமாக இருக்கும் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநரும், ஈமான் அமைப்பின் தலைவருமான சையத் எம். ஸலாஹுத்தீன் அவர்களுக்கு வழங்குவதே பொருத்தமாகும் என குறிப்பிட்டதை நினைவு கூர்ந்தார்.

அன்பு செலுத்துவதன் மூலம் வாழ்வில் உயர் நிலையை அடையலாம் என்றார் சொல்லின் செல்வர் அப்துல் ரஹ்மான்.

பத்மநாதன் நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் வானலை வளர்தமிழ் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் பலர் பங்கேற்று கவிதை நிகழ்வினை அலங்கரித்தனர்.

வானலை வளர்தமிழ் அமைப்பின் தலைவராக இருக்கும் சிவ் ஸ்டார் பவன் உரிமையாளர் கோவிந்தராஜ் மாதந்தோறும் இலவசமாக இடம் தந்து, நிகழ்விற்குப் பின்னர் உணவும் தந்துதவி தமிழ் வளர்ச்சிக்கு துணைபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வானலை வளர்தமிழ் அமைப்பின் மின்னஞ்சல் முகவரி : "Kavirimaindhan" ,

http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=831&Country_name=Gulf&cat=new

No comments: