Friday, August 22, 2008

"வாழை நாரிலிருந்து துணிகள் தயாரிக்கத் திட்டம்': இயக்குநர் மு.மு. முஸ்தபா

"வாழை நாரிலிருந்து துணிகள் தயாரிக்கத் திட்டம்': இயக்குநர் மு.மு. முஸ்தபா



திருச்சி, ஆக. 21: வாழை நாரிலிருந்து இழைகள் தயாரிப்பதற்குப் பதிலாக, வாழை நாரை நெசவு செய்து துணிகள் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநர் மு.மு. முஸ்தபா.

திருச்சி மாவட்டம், போதாவூரில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:

"திருச்சி தாயனூரில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தால் 2005 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட உதயம் வாழை ரகத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த ரகம் கற்பூரவள்ளி ரகத்துக்கு மாறாக விவசாயிகளிடையே மிகவும் பிரபலமாகி வருகிறது.

இதைத் தொடர்ந்து மேலும் 2 புதிய வாழை ரகங்களை அறிமுகப்படுத்த ஆராய்ச்சி மையம் திட்டமிட்டு வருகிறது. இதற்காக பல்வேறு இடங்களில், பல்வேறு நிலைகளில் எம்.எல். சோதனை (மல்டி லோக்கேசனல் டெஸ்ட்) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சோதனை நீண்ட காலம் பிடிக்கும் என்பதால் புதிய வாழை ரகத்தை அறிமுகப்படுத்த இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம்.

வாழை மூலம் தயாரிக்கக்கூடிய 12 வகை பொருள்களுக்கான தொழில்நுட்பங்களை இதுவரை கண்டறிந்து உள்ளோம். இதில் நேந்திரம் வாழைக்காய் வருவல், வாழைப்பழத் தொக்கு, உலர்ந்த வாழைப்பழம், வாழைக்காய் ஊறுகாய், வாழைப்பழ பவுடர், வாழை ஜூஸ் என பல்வேறு பொருள்களை தயாரித்து, வர்த்தக ரீதியாகவும் வெற்றி கிடைத்துள்ளது.

தமிழகத்தில் மட்டுமன்றி, ஆந்திரம், கேரளம், மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்கள் இந்த பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்து வருமானத்தை ஈட்டி வருகின்றனர்.

வாழைப்பழத் தோலிலிருந்து ஒயின் தயாரிப்பில் புதிய தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பை, அதை ஒரு நவீன தயாரிப்புத் தொழிலாக மாற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மகாராஷ்டிர மாநிலம், பெல்காம் பகுதியில் உள்ள ஓர் கூட்டுறவு நிறுவனத்தின் முயற்சியில் இந்த தயாரிப்பை ஏற்றுக் கொள்ள ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திராட்சை பழத்திலிருந்து ஒயின் தயாரிப்புக்கு கலால் வரி விதிக்கப்படுவது போல், வாழைப்பழத் தோலிலிருந்து தயாரிக்கப்படும் ஒயினுக்கும் விதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறுநீரக கல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு வாழைத்தண்டு சாறு எதிர்ப்பு சக்தி வாய்ந்தது என்று கண்டறிந்து, தற்போது பலர் பயன்படுத்தி வருகின்றனர். இதை எளிதாக ஏற்றுக் கொள்ளும் வகையில் வாழைச்சாறிலிருந்து பவுடர் தயாரித்து, அதை மாத்திரை வடிவில் வழங்குவதற்கான ஆய்வுகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வாழை நாரை நெசவு செய்து அதன் மூலம் துணிகள் தயாரிக்கும் ஆய்வுப் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதில், வாழை நாரை கிழித்து இழைகள் தயாரிப்பதற்குப் பதிலாக "ரெட்டிங்' என்ற முறையில் வேதியியல் பொருளைக் கலந்து துணிகள் தயாரிக்க முடியும் என்று கண்டறிந்து உள்ளோம்.

தொடர்ந்து, தேசிய வாழை ஆராய்ச்சி நிலையமும், மும்பையில் உள்ள மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலையமும் இணைந்து கூட்டாக ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளோம்' என்றார் முஸ்தபா.

No comments: