Saturday, August 9, 2008

முதல்வன்

முதல்வன்;

- கமால்இ ஜீனத் குழுமம் துபாய். ( 050 8444097)
vkamal@etazenath.com


“அல்லாஹ_ அக்பர் ” (இறைவன் மிகப் பெரியவன்) “அல்லாஹ_ அக்பர் ” (இறைவன் மிகப் பெரியவன்) – அருகிலிருந்த பள்ளிவாசலில் இருந்து தொழுகைக்கான அழைப்பு கேட்கத் தொடங்கியது.

நான் கம்ப்யுட்டரை அணைத்து விட்டு தொழுகைக்காக புறப்பட எழுந்தேன். என்னுடன் பணியாற்றும் எங்களுக்காக தேநீர் தயாரித்து சாதாரண அலுவலகப் பணிகளைச் செய்யும் என்னைவிட பணியில் குறைந்த நிலையிலுள்ள என் நண்பரை அழைத்தேன். நானும் அவரும் சேர்ந்தே போவது வழக்கம்.

படிக்கட்டில் இறங்கத் தொடங்கினோம். எங்கள் முன் காலை விந்திவிந்தி நடந்தவாறு ஒருவர் இறங்கிக் கொண்டிருந்தார். நான் அவரை முந்த முயன்றேன். என் நண்பர் என் கையை பிடித்திழுத்து “கொஞ்சம் பொறுமையாக அவருக்குப் பின் செல்வோம் ”என்றார்.
கட்டிடத்தை விட்டு வெளியேறி வெளியே நடக்கும்போதும் காலை விந்திவிந்தி நடந்து சென்ற அந்த ஊனமுற்றவரை நான் முந்திச் செல்ல முயன்றபோதும்;

மீண்டும் “பொறுமையாக அவரை பின்தொடர்ந்தே செல்வோம் ” என்றார். நான் அவரை அதிசயமாகப் பார்த்தேன்.

சாலையை அடைந்தோம்;. தொலைவில் வந்து கொண்டிருக்கும் வாகனங்கள் வரும்முன் எங்களால் வேகமாக நடந்து சென்றோ அல்லது ஓடிச் சென்றோ கடந்து விடலாம் என்ற நிலை இருந்தபோதும்; “வேண்டாம்; அந்த ஊனமுற்றவர் சாலையை கடந்த பின்னேரே செல்வோம்” என்றார். நான் மீண்டும் அவரைப் புரியாமல் பார்த்தேன்;. சாலை வெறிச்சோடியது. எங்கள் முன்னால் சென்ற அந்த ஊனமுற்றவர்; சாலையைக் கடந்து கிழக்கு நோக்கி நடக்க நாங்கள் மேற்கில் பயணித்தோம்.

என் நண்பர் ஏன் அவ்வாறு செய்தார்? என உள்ளம் அறியத் துடித்தது. அவரைப் பார்த்து ““ஏன் நீங்கள் அந்த ஊனமுற்றவரை முந்த வேண்டாம். பின் தொடர்ந்தே செல்வோம் என்றீர்கள்?” ; என்று கேட்டேன்.

அவர் என்னை நோக்கி “அவர் நம்மைப் போல் இயல்பான உடலமைப்புடையவரல்ல. அத்தகைய ஒருவரை நாம் ஒவ்வொரு நிலையிலும் முந்திச் செல்லும்போது அவர் உள்ளம் நம்மை ஆண்டவன் இப்படி படைத்துவிட்டானே ஊனத்துடன்….. இந்த ஊனம் இல்லாமலிருந்தால் அவர்களைப்போல நாமும் வேகமாக கையை வீசி ஸ்டைலாகச் செல்லலாமே என்று மனவருத்தம் அடையலாம். மனிதனின்; உடலில் ஊனம் இருந்தாலும் உள்ளத்தில் ஊனம் ஏற்படக்கூடாது. மனவருத்தம் என்பதும் ஒர் ஊனம் தான்;. மனவருத்தமும் ஒருவருக்கு தன் மேலும்இ இறைவன் மேலும்இ வாழ்க்கையின் மீதும் விரக்தி ஏற்படுத்தலாம். கண்பார்வையற்ற ஒருவர் நம்முடன் இருக்கும்போது இயற்கையை உலக அழகை நாம் வியந்து பேசக்கூடாது. இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் மற்றவரின் உணர்வுகளை புரிந்து செயல்பட்டால் அதுவும் ஒரு நற்செயல்தான் ! அதுவும் இறைவணக்கத்தின் ஓர் அங்கம் தான் ” என்றார்.

நான் மெய்சிலிர்த்தேன். நான் அவரை நோக்கி “நான் வேண்டுமானால் பதவியில் முதல்வனாக இருக்கலாம். ஆனால் குணத்தில் நீங்கள் தான் முதல்வன்” என்றேன் உணர்ச்சிவயப்பட்டவனாக. அவர் “அல்ஹம்துலில்லாஹ்” (இறைவனுக்கே புகழனைத்தும்) என்றார்; அடக்கத்துடன் .

இத்தனை நாள் ஒரு சாதாரண ஊழியராக எண்ணியிருந்த என் நண்பர் தான் ஒரு மனிதாபிமனி என்று உணர்த்தியபோது என் உள்ளத்தில் பல மடங்கு உயர்ந்து போனார்.


No comments: