Friday, September 19, 2008

கருணாநிதியிடம் இஸ்லாமிய இலக்கிய கழகத்தினர் கோரிக்கை மனு


கருணாநிதியிடம் இஸ்லாமிய இலக்கிய கழகத்தினர் கோரிக்கை மனு


சென்னை, செப்.20-

முதல்-அமைச்சர் கருணாநிதியை இஸ்லாமிய இலக்கிய கழக நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

கருணாநிதிக்கு வாழ்த்து

முதல்-அமைச்சர் கருணாநிதியை, இஸ்லாமிய இலக்கிய கழக நிர்வாகிகள் கவிக்கோ அப்துல் ரகுமான், கேப்டன் அமீர்அலி, எஸ்.எம்.இதாயத்துல்லா, பிரசிடன்ட் அபுபக்கர் ஆகியோர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். பெரியார் விருது, டாக்டர் பட்டம் பெற்ற முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள். இஸ்லாமிய இலக்கிய கழக நிர்வாகிகள் கொடுத்த மனு விவரம் வருமாறு:-

தமிழகத்தில் வாழும் சிறுபான்மை மக்களுக்கு தமிழக அரசு தொடர்ந்து இடஒதுக்கீடு உள்ளிட்ட நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு நன்றி கூறுகின்றோம். மத்திய அரசு, மாநில அரசு மூலம் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலும், பட்டப்படிப்பு மற்றும் உயர்கல்வி வரையிலும் அதிக மதிப்பெண் எடுத்த ஏழை மாணவர்களுக்கு முழு கல்வி உதவித்தொகை வழங்குகிறது.

எளிமையான மனு

இதற்கான மனுவினை மாணவர்கள் படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மூலம்தான் அரசின் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலருக்கு அனுப்ப வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசின் கல்வித் துறை, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பாததால் பெரும்பாலான கல்விக்கூடங்கள் மாணவர்களிடம் இருந்து மனுக்களை பெற மறுத்து வருகின்றன.

இதுதொடர்பாக கல்வித் துறை, உடனடியாக சுற்றறிக்கை அனுப்புவதுடன் ஊடகங்களிலும் இந்தச் செய்தியை வெளியிட வேண்டும். மனுக்களை பூர்த்தி செய்ய தேவைக்கு அதிகமான சான்றிதழ்களை திரட்டுவதற்கு ஏழை மாணவர்களுக்கு ரூ.500-க்கு மேல் செலவாகிறது. சிலருக்கு மட்டுமே மேற்கண்ட உதவித் தொகை கிடைப்பதால் பலர் செய்யும் செலவு வீணாகிறது. எனவே, கல்லூரி மற்றும் பள்ளிகளில் ஏற்கனவே மாணவர்கள் படித்துக் கொண்டு இருப்பதால் மனுக்களை எளிமைப்படுத்தி ஏழை மாணவர்களின் சிரமத்தைப் போக்க பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

நல வாரியம்

எங்களது முந்தைய கோரிக்கையின்படி அரசு சாராத நல வாரியங்களில் இருப்பது போல முஸ்லீம்களின் பள்ளி வாசல்களில் பணிபுரியும் உலமாக்களுக்கு ஒரு நல வாரியம் அமைக்க வேண்டும். சதாவதானி சேக்குத்தம்பி பாவலர் அஞ்சல் தலை வெளியிட வேண்டும். விசாரணையின்றி எந்த கோர்ட்டு தீர்ப்பும் இல்லாமல் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள முஸ்லீம் கைதிகளை விடுவிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments: