அண்ணல்நபி பற்றி அறிஞர் அண்ணா
செப்டம்பர் 14, 2008 by gazzalie
http://rajaghiri.wordpress.com/
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் காயல்பட்டினத்துக்குச் சென்றிருந்தேன். அப்போது என்னுடன் திருப்பூர் மொய்தீனும், முஹம்மது ஹூசைன் நயினார் அவர்களும் வந்திருந்தார்கள். நாங்கள் மூவரும் முஹம்மது நபி விழாவிலே பேசினோம். அப்பொழுது அந்த விழாவிலே பேசிய ஒருவர் இஸ்லாமிய கதை என்று ஒன்றைச் சொல்லி குர்ஆனுக்கும் அதற்கும் சம்பந்தப்படுத்தி விளக்கினார்.
யாரோ ஒருவர் காட்டு வழி செல்கையில், தனது செருப்பையும், கைத்தடியையும் மற்றொருவருக்குத் தானம் கொடுக்கும்படி ஆண்டவன் கட்டளையிட்டாராம். உடனே அவர் தானம் கொடுத்து விட்டாராம். அதன் பிறகே அவர் காட்டுவழியே செல்லுகையில் கள்வரிடம் சிக்கிக்கொண்டாராம். அந்தச் சமயத்தில், முன்பு தான் தானம் கொடுத்த கைத்தடியும் செருப்பும் வந்து, கள்வர்களிடமிருந்து அவரைக்காப்பாற்றினவாம்.
அந்தக் கதையைக் கேட்டதும் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. ஏனக்கு அருகிலிருந்த முஹம்மது ஹூசைன் நயினார் அவர்களிடம் இக்கதையைப் பற்றிக் கேட்டேன் - இந்தக் கதை குர்ஆனில் இருக்கிறதா? முஹம்மது நபி இதைச் சொல்லியிருக்கிறாரா? என்று. அதற்கு அவர் - அதெல்லாம் ஒன்றுமில்லை. குர்ஆனுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. பிற்காலத்தில் யாராலோ கட்டிவிடப்பட்ட கட்டுக்கதை அது என்றார்.
அதன்பிறகு நான் பேசுகையில், இதைப்பற்றிக் குறிப்பிட்டு கட்டுக்கதை என்பதை விளக்கி, இப்படிப்பட்ட அற்புதங்களை காட்ட வேண்டுமென்பது ஐயன் கட்டலையல்ல என்பதையும் எடுத்துச் சொன்னேன். காயல்பட்டினத்து மக்கள் அதனாலே என்னை எதிர்க்கவோ, கண்டிக்கவோ இல்லை. தமிழ்நாட்டிலே மிகப்பெரிய அரபுக்கல்லூரி ஒன்றும் இருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பே அங்குள்ள மக்கள் நான் எடுத்துச் சொன்ன உண்மையை உணர்ந்தார்கள் என்றால், இன்று ஒப்ப மறுத்து விடமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
இந்த நேரத்தில் இஸ்லாமிய சமூகத்தினருக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்வேன்! அற்புதங்களைக் காட்டி, அதனாலே இஸ்லாம் சிறந்தது என்று நீங்கள் வாதாடினால் உங்களிடமுள்ள அற்புதங்களுக்கு அப்பன், பாட்டன் என்று சொல்லும்படியான அற்புதங்களெல்லாம், எங்களுடைய மதம் என்று வர்ணிக்கப்படும் இந்து மதத்திலே இருக்கின்றன.
உலகத்தில் இஸ்லாம் கடைசி வரை நிலைத்து நிற்கும் என்று ஜார்ஜ்பெர்னாட்ஷா கூறியதற்குக் காரணம், அந்த மதத்தில் அற்புதங்கள் குறைவு - அறிவுக் கருத்துக்கள் நிறைவு என்பதால்தான்!
அறிவுக்கொவ்வாத அற்புதக் கதைகள் இந்துக்களிடத்திலே ஏராளமுண்டு. நமது தாய்மார்களைக் கேட்டுப்பாருங்கள் பிரகலாதன் கதையை விடவா அற்புதக் கதை ஒன்று இருக்கிறது? என்பார்களே! அற்புதங்களை விற்பனை செய்தவர்களே நாங்கள் - அற்புதங்களின் பிறப்பிடமே நாங்கள் - என்று சொல்லிக்கொள்ளும்படியான எண்ணற்ற கதைகளை இந்துக்கள் எடுத்துச்சொல்வார்கள்!
எனவே, அற்புதங்களைக் காட்டி இஸ்லாமிய கொள்கைக்கு அருமை பெருமை தேடாதீர்கள்! நபிகள் நாயகத்தின் அஞ்சா நெஞ்சுருதியாலும், அவர் செய்த அறப்போரினாலும் தான் இஸ்லாம் பரவியது.
அடிக்கடி ஆண்டவன் அவதாரம் எடுக்காமலே இஸ்லாத்தில் அரிய கருப்பொருள்கள் ஏராளமாக இருக்கின்றன!
இஸ்லாத்தின் மாண்பைப் போற்றுவதற்குக் காரணம் அந்த மார்க்கதிலே “இதை நம்பு” என்று ஆண்டவனால் கட்டளை பிறப்பிக்கப்படவில்லை, காரணம் கூறுவதால் தான் நம்பப்படுகிறது.
சீனாவுக்குச் சென்றேனும் (தொலைவுகருதி) கல்வி கற்கவேண்டும் என்று அந்த மார்க்கத்திலே சொல்லப்படுகிறது.
இன்றைய இஸ்லாமியச் சமுதாயத்திலே பெரும்பாலோர் கல்வியறிவு பெறாமலிருக்கின்றனர். அந்த மார்க்கத்திலே சொல்லப்பட்டிருக்கின்ற கட்டளை - கருப்பொருள் - கல்வியறிவு பரப்பப்படவேண்டும்.
- அறிஞர் அண்ணா -
No comments:
Post a Comment