ராமநாதபுரம் : தமிழ்ச் சங்க முப்பெரும் விழா
ராமநாதபுரம், அக். 6: ராமநாதபுரம் தமிழ்ச் சங்கம் சார்பில் மருதூர் வள்ளலார், காமராஜர், கி.வா.ஜ. விருது பெற்ற பேராசிரியர் அப்துல்சலாமுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு தமிழ்ச் சங்கச் செயலர் பொ. சந்திரசேகரன் தலைமை வகித்தார். சங்க துணைத் தலைவர் வைகிங் எம்.எஸ். கருணாநிதி முன்னிலை வகித்தார். பொருளாளர் சுந்தரமூர்த்தி வரவேற்றார்.
விழாவில் வள்ளலாரைப் பற்றி கவிஞர் மகுடதீபனும், காமராஜரைப் பற்றி கவிஞர் பழ. முருகேசனும் கவிதை வாசித்தனர்.
சங்கத்தின் மற்றொரு துணைத் தலைவர் கு. விவேகானந்தன் விழாவை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
பின்னர் சென்னை கம்பன் கழகத்தினரால் ராமநாதபுரம் தமிழ்ச் சங்கத் தலைவரான பேராசிரியர் மை. அப்துல்சலாமுக்கு கி.வா.ஜ. விருது வழங்கப்பட்டமைக்கு அனைவரும் பாராட்டினர்.
மக்களவை உறுப்பினர் எம்.எஸ்.கே. பவானி ராஜேந்திரன், கே. ஹசன்அலி எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் அ. அன்வர்ராஜா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, வர்த்தக சங்கத் தலைவர் தனபாலன் ஆகியோர் தமிழ்ச் சங்கத் தலைவரையும், அதன் செயல்பாடுகளையும் பாராட்டினர்.
பேராசிரியர் மை. அப்துல்சலாம் ஏற்புரை நிகழ்த்தினார்.
விழாவில் பல்வேறு வரலாற்று நூல்கள் எழுதிய எழுத்தாளர் அமரர் முஸ்தபா கமாலின் மகள் சர்மிளா தன் தந்தை எழுதிய நூல்களை நாட்டுடைமையாக்க அரசை வலியுறுத்தி பவானி ராஜேந்திரன் எம்.பி., கே. ஹசன்அலி எம்.எல்.ஏ. ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
சங்க உறுப்பினர் பெ. குமரன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment