Monday, November 24, 2008

தலித் முரசு - அக்டோபர் 2008

தலித் முரசு - அக்டோபர் 2008


இடப்பெயர்வில் அழியும் ஈழம் : பூங்குழலி

சற்று வசதி பெற்றவர்கள், குடும்பத்தில் ஒருவரையோ அல்லது ஒட்டுமொத்தாகவோ வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து விடுகின்றனர். அவர்கள் அனுப்பும் பணத்தில் தான் இங்குள்ளவர்கள் வாழ வேண்டும். ஆனால் அந்தப் பணமும் கைக்கு வந்து சேரும் என்ற உத்தரவாதமில்லை. பல வழிகளில் அந்தப் பணத்தை உரியவர் கையில் சேர்ப்பதுவுமே பெரும் பாடு. அப்படி வந்த பணத்தை வைத்து இடப் பெயர்வுக்கான செலவுகளை சமாளிப்பதே பெரும் சிரமம். இடப் பெயர்வுக்கான செலவு என்பதில் பெரும்பகுதி போக்குவரத்திற்கே போய்விடுகிறது. பெரும்பாலும் டிராக்டர்களை பயன்படுத்தியே மக்கள் இடம் பெயர்கின்றனர். 5 கி.மீ. தூரத்திற்கு ரூ.4000, 10 கி.மீ.க்கு 10,000 என வாடகை செலுத்த வேண்டியிருக்கிறது. காரணம் எரிபொருட்களின் விலை.

மன்னர்கள் கொடுங்கோலர்கள் என்பதற்கு அவர்களின் மநுதர்ம ஆட்சி முறையே சான்று: ஆ.சிவசுப்பிரமணியன்

வரி வாங்குதல் மூலம் நடைபெற்ற கொடுமைகள் தனி. திருவாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட மன்னன் 64 வகை ஊழியங்களை வைத்திருந்திருக்கிறான். ஊழியம் என்றால் வெட்டி வேலை. உப்பு ஊழியம், யானை ஊழியம், ஓலை ஊழியம் என்று பல ஊழியங்கள் உண்டு. யானை ஊழியம் என்பது யானைக்கு மட்டை வெட்டிப் போடுவது. அன்றைக்கு யாருடைய முறையோ அவர்கள் கண்டிப்பாக ஊழியத்தை செய்ய வேண்டும். இல்லை என்றால் தண்டனை உண்டு. ஆனால் வேலைக்கு ஏற்ற ஊதியமோ, ஓலைக்கு கிரயமோ தரமாட்டார்கள். ஓலை ஊழியம் என்பது ஓலையை வெட்டி எழுதுவதற்கேற்ப பதப்படுத்தி, சீவி அரசு அலுவலகங்களில் சேர்க்க வேண்டும். நேற்றைய ஓலையில் இன்று எழுத முடியாது. அன்றே தயாரித்தால்தான் எழுத முடியும்.இது ஓலை ஊழியம்.

வென்றது போராட்டம் - பின்னடைவும் பின்னிழுப்பும்: அழகிய பெரியவன்

பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் இப்பின்னடைவுப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆறு ரிட் மனுக்கள் தொடுக்கப்பட்டு, மிக நீண்ட நீதிமன்றப் போராட்டங்கள் நடத்தப்பட்ட பிறகு, நீதிமன்ற ஆணையின் படி நிரப்பப்பட்ட பணியிடங்களை அரசு இன்று தாமே முன்வந்து நிரப்பியதாகக் கூறி விழா வைத்து நம்பச் சொல்கிறது. கோப்பையில் நெய் வழிகிறது என்றால், கேட்டுத்தான் ஆகவேண்டும் போலிருக்கிறது! தலித் மக்கள் தங்களுடைய உரிமைகளை இழக்கிறபோது தன்னை நாடி கெஞ்ச வேண்டும் என்று அரசு நினைக்கிறது. நீதிமன்றம் சென்று ஆணை பெற்று வந்தாலோ, நானே செய்தேன் என்று தனது அதிகாரத்தை காட்டிக் கொள்கிறது. எப்படியானாலும் அதிகாரத்தின் காலடியில் தலித் மக்கள் எப்போதும் விழுந்து கிடக்க வேண்டும் என்பது தான் அரசின் எண்ணம்.

சமூக ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராட மறுப்பதேன்? : அசோக் யாதவ்

பொருளாதார அளவுகோலுக்காக வாதாடும் போது பிரகாஷ் காரத் பிரச்சனையின் ஆழத்துக்குப் போகவில்லை. இடஒதுக்கீடு என்பது வறுமையைக் குறைப்பதற்கான நடவடிக்கையோ, சமூக ரீதியில் வஞ்சிக்கப்பட்ட சமூகங்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் அல்லது கல்வியைப் பரப்பும் நடவடிக்கையோ அன்று. அந்தஸ்து, அதிகாரம், சிறப்புச் சலுகைகள், வசதிகள் ஆகியவற்றின் உற்பத்தி நிலையங்களான அதிகார வர்க்கம், கல்வி, நிறுவனம், நீதித்துறை, வணிகம் உள்ளிட்ட இடங்களில் உள்ள சில குறிப்பிட்ட சாதிக் குழுக்களின் மேலாதிக்கத்தைப் பலவீனப்படுத்தி, அதன்மூலம் சூத்திரர், ஆதிசூத்திரர், பழங்குடியினர் ஆகியோரின் சமூக விடுதலைக்கான தளத்தைத் தயார் செய்யும் நடவடிக்கையே இடஒதுக்கீடு.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் சிக்கல்களும் தீர்வுகளும்: சு. சத்தியச்சந்திரன்

ஒரு வழக்கின் பொருண்மைகளைப் (Fact) பொருத்தே அவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும். முன்தீர்ப்புநெறி (Law of Precedents) இந்திய நீதிமன்றங்களில் பெரும்பாலும் கடைப்பிடிக்கப்பட்டாலும், முன் தீர்ப்பு இல்லையென்பதாலேயே ஒரு வழக்கில் கோரப்படும் தீர்வு வழங்கப்பட முடியாது என்பதல்ல. இதை சமூக செயல்பாட்டாளர்கள் மனதில் நிறுத்தி செயல்பட வேண்டும். ஒரு குற்றவியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்ய வேண்டுமெனில், கீழ்க்கண்ட ஏதாவது ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட காரணங்களின் அடிப்படையில் மனுதாக்கல் செய்து கோரலாம். இவை உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத் தீர்ப்புகளின்படி உள்ள காரணங்களாகும். இவை முழுமையானவை அல்ல. இவை தவிர மற்றெந்த நியாயமான, ஏற்கத்தக்க காரணங்களின் அடிப்படையிலும் பிணையை ரத்து செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு.

மேலும் படிக்க http://www.keetru.com/dalithmurasu/index.php

editor@keetru.com

No comments: