Wednesday, December 10, 2008

மைந்தனை தியாகம் செய்யத் தூண்டிய கனவு

முஸ்லிம்கள் இரண்டு பண்டிகைகளைக் கொண்டாடுகின்றனர்: 1. ஈதுல்ஃபித்ர் எனும் ஈகைத் திருநாள். இதுவே ரமலான் எனப்படும். 2.ஈதுல் அள்ஹா எனப்படும் தியாகத் திருநாள். யூத நெறி, கிறிஸ்தவ நெறி, இஸ்லாமிய நெறி என்ற மூன்று பேராறுகளுக்கும் மூல ஊற்றாகத் திகழ்பவர் இறைத் தூதர் இப்ராஹிம். யூதரும் கிறிஸ்தவரும் அவரை ஏப்ரஹாம் என்பர். உண்மையில் யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் என்பவை வெவ்வேறாக இன்று காணப்பட்டாலும் அடிப்படையில் இவை ஏகத்துவ நெறி எனப்படும் ஒரே நெறியைச் சார்ந்தவையே.



இறைதூதர் இப்ராஹிம் (அலை) அவர்கள் ஒரு நாள் ஒரு கனவு கண்டார். அதில், அவர் தம் அருமந்த மைந்தன் இஸ்மாயில் அவர்களை இறைவனுக்காக பலியிடுவதைப் போல் கண்டார். இறைத் தூதர்களுடைய கனவுகள் மற்ற மனிதர்கள் காணும் கனவு போன்றவையல்ல. அவை கடவுளின் கடிதங்கள். இறைவன் அவருடைய புதல்வர் இஸ்மாயில் அவர்களைத் தனக்குப் பலியிடுமாறு ஆணையிடுவதாகவே இப்ராஹிம் கருதினார்.



இஸ்மாயில், இப்ராஹிம் தம் 86வது வயதில் தவமிருந்து பெற்ற பிள்ளை. அவர் மீது இப்ராஹிம் தம் உயிரையே வைத்திருந்தார். இருப்பினும், இறைவனின் ஆணையைத் தலைமேல் ஏற்றுத் தம் அருமந்த மைந்தனை இறைவனுக்காகத் தியாகம் செய்யத் துணிந்துவிட்டார். இப்ராஹிம் தம் புதல்வரைக் கத்தியால் அறுக்கத் தொடங்கிய போது இறைவன், "இப்ராஹிமே! எனக்காக உம் அருமந்த மைந்தனையே பலி கொடுக்கத் துணிந்த உம்தியாகவுணர்வை ஏற்றுக் கொண்டேன். உம் மகனைப் பலியிட வேண்டாம். நீர் சோதனையில் வெற்றி பெற்றுவிட்டீர். உம் மகனுக்குப் பகரமாக ஓர் ஆட்டைப் பலியிடுவீராக' என்று கூறினார். இப்ராஹிமும் அதன் படியே ஓர் ஆட்டைப் பலியிட்டார்.



உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் இந்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்தே தியாகத் திருநாளைக் கொண்டாடுகின்றனர். அப்போது ஆடு, மாடு, ஒட்டகம் எதையேனும் இறைவனுக்காகப் பலியிடுகின்றனர். இது தியாக உணர்வுக்கான பயிற்சி.



எல்லாமே இறைவன் கொடுத்தவையே. எனவே, மனிதன் அவனுக்காகத் தன் உடல், பொருள், ஆவி மட்டுமின்றித் தம்மால் மிகவும் நேசிக்கப்படும் மனைவி, மக்களைக் கூடத் தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்பதையே இத்திருநாள் போதிக்கிறது.



பலியிடப்பட்ட பிராணியின் மாமிசத்தை மூன்று பகுதியாகப் பங்கு போட்டு, ஒரு பங்கை ஏழை எளியவருக்கும், ஒரு பங்கை உற்றார் உறவினருக்கும் வழங்கிவிட்டு ஒரு பங்கைத் தான், தம் உபயோகத்திற்கு வைத்துக் கொள்ள வேண்டும்.



ஏழைகளும் வயிறார உண்டு, பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு.



புனிதப் பயணம் (ஹஜ்): இஸ்லாத்தின் ஐந்து கடமைகளுள் ஹஜ் என்ற புனிதப் பயணமும் ஒன்று. இது வசதியுடையவர்களுக்கு மட்டுமே கடமை. அரேபிய நாட்டில் மக்கா என்ற ஊரில் உள்ள கஅபா என்ற இறையில்லத்திற்குச் சென்று வழிபாடுகள் செய்து வருவதே ஹஜ் எனப்படுகிறது. கஅபா இந்த உலகில், ஏக இறைவனுக்குக் கட்டப்பட்ட முதல் ஆலயமாகும். முதல் மனிதரும் முதல் இறைத் தூதருமாகிய ஆதம் (அலை) அவர்கள் அவ்விடத்தில் வழிபட்டிருக்கின்றனர். இப்ராஹிம் (அலை) அவர்கள் மண்மேடாக இருந்த அந்த இடத்தில் இருந்த ஆதம் அவர்கள் கட்டிய ஆலயத்தின் அடித் தளத்தின் மீதே புதிய ஆலயமொன்றைக் கட்டினர். இஸ்மாயில் (அலை) அவர்களும் இத்திருப்பணியில் தந்தைக்கு உதவியாக இருந்தார்.



கஅபா: அரபியில் "கஅபா' என்றால் ஆறு சமசதுரங்கள் கொண்ட கன உருவம் (ஞிதஞஞு) என்று பொருள். கஅபா ஆலயம் இவ்வடிவிலேயே கட்டப் பட்டுள்ளது. இவ்வாலயம் எல்லாப் படைப்புகளையும் பற்றிய கொள்கைகளை இணைத்து, உணர்த்துவதாக அமைக்கப்பட்டுள்ளது. வேதியல், பௌதீகம், பிரபஞ்சவியல், எரிகல் இயல், மருத்துவம் ஆகியவற்றை உணர்த்தும் வகையிலும் கஅபா கட்டப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொல்வதென்றால் கஅபா அண்டத்தின் பிண்டம். வானியல்படி எத்திசையிலிருந்தும் வீசும் காற்றுகளை எதிர் கொள்ளும் படி ஆலயம் அமைந்திருக்கிறது. கஅபாவின் நீள் சதுர அச்சு சூரியன் பூமிக்கு நெடுந்தொலைவில் இருக்கும் காலத்தில் வரும் கோடைக் காலச் சூரியோதயத்திற்கும், குளிர் காலச் சூரிய அஸ்தமனத்திற்கும் இணைவாக அமைக்கப்பட்டிருக்கிறது.


இடம் சுற்றல்: புனிதப் பயணிகள் கஅபாவை ஏழு முறை சுற்றி வரவேண்டும் என் பது முக்கியமான வழிபாடு. பயணிகள் ஆலயத்தை இடப்புறமாகக் கொண்டு சுற்றி வருவர். இது ஒரு குறியீட்டு நிகழ்ச்சி. சூரியனை மையமாகக் கொண்டு கிரகங் கள் சுற்றுவது போல, (கிரகங்களும் இடம் சுற்றுகின்றன) இறைவனை மையமாகக் கொண்டு சகல உயிர்களும் சுற்றி வருகின்றன. மையமே, உயிர்களை இயக்குகிறது. மையமில்லையேல், உயிர்கள் இல்லை என்பதை உணர்த்தும் நிகழ்ச்சி இது.



சஃபா மர்வா: சஃபா, மர்வா என்ற இரு சிறு குன்றுகள் கஅபாவுக்கு அருகில் இருக்கின்றன. புனிதப் பயணிகள் இக்குன்றுகளுக்கிடையே ஏழு முறை தொங்கோட்டம் செய்ய வேண்டும். இது இப்ராஹிம் (அலை) அவர்களுடைய துணைவியார் ஹாஜரா தம் கைக் குழந்தை இஸ்மாயில் (அலை) அவர்கள் தாகம் தணிக்கத் தண்ணீர் தேடி, சஃபா, மர்வா குன்றுக்களுக்கிடையே ஓடிய நிகழ்ச்சியை நினைவு கூர்வதாகும்.



ஜம் ஜம்: ஜம் ஜம் என்பது கஅபாவில், இருக்கும் புனித தீர்த்தமாகும். இஸ்மாயில் (அலை) சிறு குழந்தையாக இருந்த போது, தாகத் தால் அழுதார். அவர் கால்களை உதைத்துக் கொண்டு அழுதபோது, பூமியே தாய்ப்பாசம் கொண்டு பால் சுரந்தது போல், தரையிலிருந்து நீரூற்று ஒன்று பீறிட்டுப் பெருகியது. இதுவே ஜம் ஜம். இப்போது, இது சிறு கிணறாக இருக்கிறது. ஜம் ஜம் ஓர் அற்புதம். இது சகல ரோக நிவாரணி. ஒவ்வொரு ஹஜ்ஜுக்கும் முப்பதிலிருந்து நாற்பது லட்சம் பயணிகள் கஅபாவுக்கு வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் இந்நீரே குளிக்கவும் குடிக்கவும் பயன்படுகிறது. கேன் கேனாக ஊர்களுக்கும் கொண்டு செல்கின்றனர். மக்கா, மதீனா என்ற இரு நகரங்களுக்குக் குடிநீரும் இது தான். ஜம் ஜம் வற்றாமல் சுரந்து கொண்டே யிருக்கிறது. அருகில் எந்த இடத்தைத் தோண்டினாலும் நீர் கிடைப்பதில்லை.



அரஃபா: புனிதப் பயணிகள் அரஃபா என்ற பெருவெளியில் கூடி வழிபடுவர். இது ஹஜ்ஜின் கடமைகளுள் முக்கியமானது. பயணிகள் முஸ்தலிஃபா, மினா ஆகிய இடங்களிலும் தங்கி வழிபடுவர்.



ஹஜ்ருல் அஸ்வத்: கஅபாவின் தென் கிழக்கு மூலையில் ஒரு கருங்கல் பதிக்கப் பட்டிருக்கிறது. இது ஹஜ்ருல் அஸ்வத் எனப்படுகிறது. இக்கல் புனிதக் கல்லாக மதிக்கப்படுகிறது புனிதப் பயணிகள் இக்கல்லை முத்தமிடுவர். நபிகள் நாயகம் இவ்வாறு செய்தார் என்பதனாலே பயணிகளும் முத்தமிடுகின்றனர். இதைத் தவறாகப் புரிந்து கொண்ட சிலர், முஸ்லிம்கள் கஅபாவில் கல்லை வணங்குகின்றனர் என்று கூறுகின்றனர். இது முற்றிலும் தவறாகும். கல்லை மட்டுமல்ல படைப்புகளில் எதை வணங்கினாலும் அவர்கள் முஸ்லிம்களாக இருக்க முடியாது. இறைவனைத் தவிர வேறு யாரையும், எதையும் இறைவனாகக் கருதி வணங்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. இதில் சமரசத்திற்கே இடமில்லை.



ஒன்றே குலம் ஒருவனே தேவன்: பல நாடுகளிலிருந்து பல மொழி பேசும் பல இன மக்கள் வேறுபாடின்றி ஹஜ்ஜில் ஒரே உடையணிந்து, ஒரே இறைவனை வணங்குகின்றனர். "ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்ற கொள்கையை செயலால் உரத்துச் சொல்லும் வழிபாடே ஹஜ்ஜாகும். கஅபா இதயம் போன்றது. அங்கே அசுத்த ரத்தமாகச் செல்லும் புனிதப் பயணிகள் சுத்த ரத்தமாகித் திரும்புகின்றனர்.



கவிக்கோ அப்துல் ரகுமான்

No comments: