வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Wednesday, January 14, 2009
52 வது ஆண்டில் குரல் ! குர்ஆனின் குரல்
52 வது ஆண்டில் குரல் ! குர்ஆனின் குரல்
அல்ஹம்து லில்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!
எல்லாப் புகழும்,புகழ்ச்சியும் அகிலத்தை படைத்தாளும்,எல்லாம் வல்ல அல்லாஹ் ஜல்ல ஷனுஹு வத ஆலாவுக்கே உரித்தானது.
சர்வ சக்தியும் படைத்த அந்த வல்ல ரஹ்மான்,எங்கள் அருமைத் தந்தையார் அவர்களையும்,அவர்களின் பாரம்பரியங்களையும் இந்த சன்மார்க்கத்திற்காகவே வாழும் பாக்கியம் பெற்றவர்களாக சன்மார்க்க ஊழியர்களாக ஆக்கி வைத்தான்.
எங்கள் முன்னோர்களும்,மூத்தோர்களும் செய்த அந்த நல்ல துஆக்கள் வீண் போகவே இல்லை.
அந்த முன்னோர்களும்,அவர்களின் வழி வந்த எங்கள் அருமை தந்தையார் மர்ஹூம் அல்லாமா அஸ்மியான் மு.அப்துல் ஜப்பார் ஹள்ரத் (நவ்வரல்லாஹு மர்கதஹு ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களும் செய்த சின்னஞ்சிறு சேவைகளையும்,அவர்கள் ஏந்திய கரங்கள் வேண்டிக் கொண்ட நல்ல துஆக்களையும் நாளும் பொழுதும் அந்த வல்ல ரஹ்மான் கபூலாக்கியே வைத்தான்.
அதன் விளைவாகவே ... குர் ஆனின் குரலின் வடிவத்தில் எங்கள் அருமை தந்தையார் அவர்கள் துவக்கி வைத்த அந்த சின்னஞ்சிறு சேவை இன்று ஆல் போல் வளர்ந்தோங்கி ஐம்பத்தி இரண்டாவது வயதை அடைந்திருக்கிறது.
அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்!
இஸ்லாமிய பத்திரிக்கை உலகில், முற்றிலும் ஷரிஅத்திற்கு ஏற்ற வகையில் கதைகளோ,காரணங்களோ இல்லாமல் ஐம்பத்தியோரு ஆண்டுகளை குர் ஆனின் குரல் கடந்து நிற்பதற்கு முழுமையான காரணம்;குரலின் நிறுவனர் எங்கள் அருமை தந்தையார் மர்ஹூம்
அல்லாமா அஸ்மியான் மு.அப்துல் ஜப்பார் ஹள்ர்த் (நவ்வரல்லாஹு மர்கதஹு ரஹ்மத்துல்லாஹி அலைஹி ) அவர்களிடம் இருந்த ஈமான் உறுதியும்,இஹ்லாஸ் எனும்
மனத்தூய்மையுமே ஆகும்.
வாழ்க்கையில் பெரும் வசதிகள் என எதையும் பெற்றிருக்காத எங்கள் அருமை தந்தையார் அவர்கள் செய்த துஆக்களும்தான் இன்று குர் ஆனின் குரல் ஆசியாவின் குறைந்த விலையில் அதிக பக்கங்களை கொண்ட நம்பர் 1 இதழாக பரிணமித்துக் கொண்டிருக்கிறது.
நிரந்தரமாக 164 பக்கங்களுடன் இன்று வெளிவந்து கொண்டிருக்கும் உங்கள் குர் ஆனின் குரல் இன்ஷா அல்லாஹ்!வாசகப் பெருமக்களின் வளமார்ந்த துஆக்களின் காரணமாக இனியும் தன் இஹ்லாஸான இனிய சேவையை தடைகளை உடைத்தெறிந்து தொடர்ந்து நிலை நாட்டும் என்பதில் அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை கொண்டவர்களாக குரல் வாசகர் வட்டத்தின் முன் பணிவோடு எடுத்துரைப்பதில் பெருமிதம் கொள்கின்றோம்.
எங்களுக்கு பின் பலமாக,அல்லாஹ்வின் அற்புதமான பேரருளும்,அருமை வாசகர் வட்டத்தின் தூய இஹ்லாஸான துஆக்களும் என்றும் நின்று நிலைத்திருக்கும் என்பதில்
அணுவளவும் ஐயமின்றி நம்பிக்கையுடன் எப்போதுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
கடந்த ஓராண்டு காலமாக அல்லாஹ்வின் அளப்பெரும் பேரருளால் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து,நாங்கள் துவக்கிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற்றிருக்கிறது.
குரலின் எளிய இந்த ஊழியர்களின் சின்னஞ்சிறு முயற்சிகளின் காரணமாய் கடந்த ஐம்பத்தியோராண்டு காலத்தில் ஹிதாயத் எனும் நேர்வழிச் சுடரை பெற்றோர் ஆயிரமாயிரம்
குடும்பங்கள்.
அந்த நேர்வழிச் சுடரின் காரணமாய், தமிழ் அறிந்த முஸ்லிம்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்ச்சி குறித்து நாங்கள் தம்பட்டம் அடித்துக் கொள்ள எப்போதும் விரும்பவில்லை. எங்களின் இந்த முயற்சிகளுக்குரிய கூலியை அல்லாஹ்விடம் மட்டுமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம்.
பட்டம் பதவிகளில் எங்களுக்கு என்றும் ஆசை ஏற்பட்ட தில்லை. பணத்திற்காகவும், புகழுக்காகவும் இந்த ஏழை ஊழியர்கள் என்றும் அடிமை யானதும் இல்லை.
எங்களின் சேவைகளை விளம்பரப்படுத்தி,வெளிச்சம் போட்டு காட்டி அதன் விளைவால் காசு கறக்கும் ஆசையும் எங்களிடம் என்றும் இருந்தது இல்லை இந்த சமுதாயத்தின் பேரை அடகு வைத்து கோடி கோடியாய் சுருட்டக் கூடியவர்கள் அல்ல இந்த சாமானியர்கள்.
இலட்சங்களை செலவிட்டு எங்களின் இலட்சிய பாதையில் இன்றுவரை எவரும் குறுக்கிட முடியவில்லை.
அல்லாஹ்வுக்கும் அவனது ரஸூலுக்கும் பொருத்தமில்லாத எச்செயலிலும் இன்று வரை இந்த ஏழை ஊழியர்கள் ஈடுபட்டதும் இல்லை.
அல்லாஹ் ரஸூலுக்கு விருப்பமில்லாத செயல்களில் ஈடுபட்டவர்களின் முகத்திரையை அல்லாஹ்வுக்காகவும், அவனது அருமை ரஸூலுக்காகவும் கிழித்தெறிந்தவர்கள்தான் இந்த எழை ஊழியர்கள்.
கடந்த ஆண்டு ஜனவரி இதழில் நாம் குறிப்பிட்டிருந்ததை போல அல்லாஹ்வின் உதவியும், இன்னும் அவனது அருளுக்குரிய வெற்றியும் எங்களுக்கு மிக அருகில்தான் நிச்சயம் உள்ளது என்பதை உளமார நம்பியே இன்றுவரை செயல் பட்டுக் கொண்டிருக்கிறோம்.
ஒவ்வொரு மாத இதழிலும் குறைந்தது 40 பக்கங்களாவது விளம்பரங்கள் இருந்தால் மட்டுமே இந்த குர் ஆனின் குரலை 164 பக்கங்களுடன் தொடர்ந்து வெளியிட முடியும் என்பது எங்கள் அருமை வாசகர்களுக்கு தெரியாத செய்தி அல்ல.
ஆயினும், எங்களின் அந்த குறிக்கோளை 40 பக்கங்கள் விளம்பரங்கள் என்பதை இன்று வரை நாங்கள் அடைய முடியவில்லை. அதற்காக நாங்கள் மனம் தளர்ந்திடவும் இல்லை.
இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய மாதங்களிலாவது இந்த குறிக்கோளை நாங்கள் அடைவதற்கு எங்கள் மீது பற்றும் பாசமும் கொண்டுள்ள வாசகர் வட்டம் இன்க்ஷா அல்லாஹ் நிச்சயம் துணை செய்யும் என்பதன் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை கொண்டவர்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
குரலின் அருமை வாசகர் வட்டத்தால் அந்த நம்பிக்கை இன்ஷா அல்லாஹ் செயல்படுத்தப்படும்போது குரல் அதற்கு நன்றிக்கடனாய் அடுத்தும் தனது சேவைச் சிறகுகளை விரிக்குமே தவிர படுத்துறங்கும் பண்பாடு நிச்சயம் எங்களிடம் வந்துவிடாது என்பது மட்டும் உறுதி.
எனவே, இந்த ஏழை ஊழியர்களின்பால் நம்பிக்கை வைத்து இந்த ஐம்பத்தி இரண்டாம் ஆண்டு இறுதிக்குள் இல்லங்கள் தவறாமல் உங்கள் குர் ஆனின் குரல் இடம் பெறுவதற்கும் ,
அந்த குர் ஆனின் குரல் மென்மேலும் பொழிவோடும் ,எழிலோடும் வெளி வருவதற்கு துணையாக உங்களால் முடிந்த விளம்பரங்களை அளித்து உதவவும் முன்வருமாறு இந்த ஐம்பத்தி இரண்டாவது ஆண்டு துவக்க நேரத்தில் மிக்க அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
அருமை வாசகப் பெருமக்களே !
வளர்ச்சி நிதி தாருங்கள் !என நாங்கள் என்றும் கேட்கவில்லை.
குரலின் வளர்ச்சிக்கு உதவுங்கள் என்றுதான் கேட்கிறோம்.
வாருங்கள் !எங்கள் அருமை வாசக பெருமக்களே !
குரலின் வளர்ச்சிப்பணியில் உங்களையும் இணைத்துக் கொள்ள இப்போதே
முன் வாருங்கள் !
இஸ்லாமிய இல்லங்கள் தோறும் இந்த ஆண்டு இறுதிக்குள் குர் ஆனின் குரல் இருக்க வேண்டுமெனும் இஹ்லாஸான உறுதியான நோக்கத்தோடு உங்களின் கடும் உழைப்பை தாருங்களேன்.
இன்னும் ஒருபடி தாண்டி ,இன்ஷா அல்லாஹ் உங்களால் முடியுமானால் குரலுக்கென ஷரிஅத்தின் கட்டுப்பாடுகளுக்குட்பட்ட விளம்பரங்களை பெற்றுத் தாருங்களேன்
இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு குர் ஆனின் குரலின் வளர்ச்சிக்காக ,அதன் கபூலியத்திற்காக ,அந்த குரலின் ஏழை ஊழியர்களின் எழிலான எண்ணங்கள் அனைத்தும் என்றும் நிறைவேறுவதற்காக தூய உங்களது துஆக்களையும் தாருங்களேன்.
குறிப்பாக துஆக்கள் கபூலாகும் நேரங்களில் அனைத்தும் ,அந்த துஆக்கள் கபூலாகும் இடங்களில் அனைத்தும் குர் ஆனின் குரலுக்காக ,அதன் ஏழை ஊழியர்களுக்காக ,அதன் நிறுவனறும்,எங்கள் அருமை தந்தையாருமாகிய அல்லாமா மர்ஹூம் அ .மு. அப்துல் ஜப்பார் பாகவி ஹள்ரத் நவ்வரல்லாஹு மர்கதஹு அவர்களுக்காகவும் ,அவர்களோடு ஒன்றிணைந்து மெழுகு வர்த்தியாய் தம்மை மாற்றிக்கொண்டு ,அன்னாருக்கு தூணாகவும் ,துணையாகவும் நின்று செயல்பட்ட எங்கள் அருமை அன்னையார் மர்ஹுமா அல்ஹாஜ்ஜா ஹவ்வா பீவீ அம்மாள் நவ்வரல்லாஹு மர்கதஹா அவர்களுக்கும் மற்றும் இந்த குர் ஆனின் குரலின் வளர்ச்சிக்காகவும் ,அதன் மேன்மைக்காகவும் பாடுபட்டு அல்லாஹ்வின் சமூகம் சேர்ந்து விட்ட எங்களின் நன்றிக்குரிய ஆயிரம் ஆயிரம் நல்லடியார்களுக்காகவும் ,இரு கரமேந்தி துஆச் செய்ய மிக்க அன்போடு வேண்டுகிறோம் .
அத்தோடு ...
குர் ஆனின் குரலின்பால் பேரன்பு கொண்டு இன்றுவரை இரவும் பகலும் துஆச் செய்யக்கூடிய அகிலம் முழுவதும் வாழும் நல்லவர்களுக்காகவும் ,
குரலை பரப்பும் பணியில் அல்லும் பகலும் தங்கள் உடல் சுகங்களை பாராமல் உழைக்கக்கூடிய. முகவர்களுக்காகவும் ,
அதன் எழுத்தாள பெருமக்களுக்காகவும் ,
விளம்பரங்களை தந்து உதவி இந்த ஏழை ஊழியர்களை ஏகமாய் ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்காகவும்,
குரல் அலுவலகத்தை கண்ணிமையென காத்து வரும், குரலுக்காகவே தங்களை அர்ப்பணித்துள்ள ஊழியர்களுக்காகவும்,
மற்றும் தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் எங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வண்ணம், ஒவ்வொரு நிமிடமும் எங்களை குறித்த சிந்தனையோடு செயல்பட்டுக் கொண்டிருக்க க் கூடிய ஸாலிஹீன்களுக்காகவும்,
தங்களின் சந்தாக்களை எந்த பந்தாவும் இல்லாமல் எங்களுக்கு நாங்கள் கேட்டோ, கேட்காமலோ அனுப்பி வைத்துக் கொண்டிருக்க கூடிய எங்களுக்கு அடையாளம் தெரியாத அந்த அருமை சகோதர ர்களுக்காகவும்,
குரலின் சந்தாக்களுக்கென நாங்கள் நாடிச் செல்லும் காலத்தில் எங்களை வாழ்த்தி வரவேற்று, அந்த சந்தாக்களை தலைமுறை தலைமுறையாய் அளித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும்,
இந்த நல்ல நேரத்தில் வாசகப் பெருமக்களே !
நல் உள்ளம் கொண்டோர்களே !
எங்களோடு இணைந்து நீங்களும் இருகரமேந்தி துஆச் செய்ய வேண்டுமென மெத்தப் பணிவோடு வேண்டிக் கொள்கிறோம்.
அகிலம் படைத்தாளும் அல்லாஹ் த ஆலா நம் அனைவரின் இஹ்லாஸான தூய து ஆக்களையும் இன்றும், என்றும், இனியும், எப்போதும் இன்ஷா அல்லாஹ் கபூலாக்கி வைப்பானாக !
அன்புள்ள ஊழியன் மிஸ்கீன்
அ. முஹம்மது அஷ்ரஃப் அலீ
குர் ஆனின் குரல்
தபால் பெட்டி எண் 250
மதுரை 625 001
அலைபேசி : 94420 56547 / 94867 29191 / 94867 29192
ஃபேக்ஸ் : 0452 2322672
மின்னஞ்சல் : quraaninkural@sancharnet.in
இணையத்தளம் : www.quraaninkural.com
மின்னஞ்சல்களை தமிழில் அனுப்புவர்கள் பிடிஎஃப் ஃபைலாகவோ அல்லது போட்டோ ஃபார்மேட் ஃபைலாகவோ அனுப்பவும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment