இஸ்லாமும் நானும் - சுப.வீரபாண்டியன்
இன இழிவைப் போக்க இஸ்லாமே நன்மருந்து’ என்று தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டி, என்னை இஸ்லாம் மதத்தைத் தழுவுமாறு அன்போடு அழைப்பு விடுத்துள்ளீர்கள். உங்கள் அழைப்புக்கும், நீங்கள் என்னிடம் காட்டும் அன்புக்கும் நன்றி. எனினும் நான் என் நிலையை இம்மாமன்றத்தில் தெளிவாக்கி விட வேண்டும் என்று கருதுகின்றேன்.
மதம் அல்லது மார்க்கம் எதுவானாலும், அது கடவுளை நம்புவது ஆகும். கடவுள் நம்பிக்கையோடு, இம்மண்ணில் வாழும் வாழ்க்கை நெறியை வகைப்படுத்துவதே சமயம் என்று கூறுவர். ஏக இறை வணக்கம் என்பதும்; பல்தெய்வ வழிபாடு என்பதும் இஸ்லாம், இந்து மதங்களுக்கிடையேயான பெரும் வேறுபாடுகளில் ஒன்று என்பதை நான் அறிவேன்.
என்னைப் பொறுத்தளவு, நான் அறவே கடவுள் நம்பிக்கை இல்லாதவன். அதனால் ‘எம்மதமும் சம்மதமில்லை’ என்ற நிலைப்பாட்டைக் கொண்டவன். ‘நான் இந்து’ என்பது கூட இந்திய அரசமைப்புச் சட்டம் என் மீது ஏற்றி வைத்திருக்கும் இழிவுதான்; நான் மதமற்றவன் என்பதே உண்மை. எனவே, இஸ்லாம் உட்பட எந்த ஒரு மதத்தையும் தழுவுவதில் எனக்கு உடன்பாடில்லை. சட்டப்படியும் மதமற்றவனாக என்னை அறிவித்துக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமே என் விருப்பம். சட்டம் அதற்கு இடந்தரவில்லையெனினும், அதனை நோக்கியே என் முயற்சிகள் அமையும்.
ஜனநாயக, சமூக நீதிப் போராட்டங்களில் எப்போதும் நான் உங்கள் தோழனாய் இருப்பேன். ஆனால் வாழ்நாள் முழுவதும், எந்த மதத்தையும் சாராமல், பெரியாரியக் கோட்பாடுகளைப் பரப்பும் தொண்டனாக மட்டுமே இருப்பேன்.
-01.01.2009 அன்று குவைத் நாட்டில், TMMK & இஸ்லாமிய வழிகாட்டுப் பேரவை நடத்திய சமூக நீதிக் கருத்தரங்கில் சுப.வீரபாண்டியன்.
No comments:
Post a Comment