Tuesday, January 6, 2009

கல்லூரி பேராசிரியர் பணிக்கு பி.எச்டி. பட்டம் கட்டாயம்

கல்லூரி பேராசிரியர் பணிக்கு பி.எச்டி. பட்டம் கட்டாயம்
மத்திய அரசு புதிய உத்தரவு


சென்னை, ஜன.6-

கல்லூரிகளில் பேராசிரியர் பணிக்கு பி.எச்டி. பட்டத்தை கட்டாயமாக்கும் வகையில் மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

கல்லூரி ஆசிரியர்

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர், உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர், துறைத்தலைவர் ஆகிய பல்வேறு நிலைகளில் ஆசிரியர் பணி இடங்கள் உள்ளன. விரிவுரையாளர்களும், உதவி பேராசிரியர்களும் நேரடியாக தேர்வு செய்யப்படுகிறார்கள். பின்னர் அவர்கள் இணை பேராசிரியர், பேராசிரியர், துறைத்தலைவர் என்று பதவி உயர்வு பெறுவார்கள்.

தற்போது விரிவுரையாளர் பணிக்கு எம்.பில். அல்லது ஸ்லெட், நெட் தேர்ச்சி தகுதியாக வைக்கப்பட்டுள்ளது. பி.எச்டி. முடித்திருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. முடித்திருந்தால் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

யு.ஜி.சி. பரிந்துரை

இந்த நிலையில், கல்லூரி ஆசிரியர் ஊதிய நிர்ணயம் தொடர்பாக அமைக்கப்பட்ட பேராசிரியர் ஜி.கே.சதா கமிட்டியின் பல பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. இதைத்தொடர்ந்து கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை விட கூடுதல் சம்பளம் வழங்கப்பட இருக்கிறது.

இனிமேல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர் என்று 3 வகையான ஆசிரியர் பணி இடங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், பேராசிரியர் பணிக்கு பி.எச்டி. பட்டத்தை கட்டாயமாக்க வேண்டும் என்றும் சதா கமிட்டி பரிந்துரை செய்திருந்தது. இந்த நிலையில், சதா கமிட்டியின் இந்த பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்திருந்தது.

பி.எச்டி. கட்டாயம்

இந்த நிலையில், யு.ஜி.சி. பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும், மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறது. அதில், இனிமேல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர் என்ற அடிப்படையில்தான் ஆசிரியர் பணி இடங்கள் இருக்க வேண்டும். இதுவரை இருந்து வந்த விரிவுரையாளர் பதவி நீக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் பணிக்கு கண்டிப்பாக பி.எச்டி. தேவை என்று கூறப்பட்டுள்ளது.

நேரடியாக பேராசிரியர் பணியில் சேருவதற்கும், இணை பேராசிரியர் பணியிலிருந்து பேராசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கும் பி.எச்டி. பட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. புதிய நியமனங்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: