Wednesday, March 18, 2009

அண்ணல்நபிகள் நடந்த பாதையில்...! ( 5 )

அண்ணல்நபிகள் நடந்த பாதையில்...! ( 5 )
"உங்களுடைய தேவைக்குப் போக மீதமுள்ளவற்றை தருமமாக செலவு செய்யுங்கள்" - எம்பெருமானார் நபிகள் நாயகம்.
சிக்கனமாயிரு... கருமியாயிராதே....!
நபிகள் நாயகத்தின் போதனைகளில் இதுவும் ஒன்று.
ஒரு சமயம்...
எம்பெருமானார், நபிகள் நாயகம் அவர்களைத் தேடிக்கொண்டு ஒரு பெரியவர் வந்தார். வந்த பெரியவரை அமரவைத்து என்ன காரியமாக வந்தீர்கள் என்று கேட்கிறார்.
"எங்கள் ஊரில் பள்ளிவாசல் கிடையாது... தொழுகைக்குப் பக்கத்து ஊருக்குப் போக வேண்டிய நிலையில் நாங்கள் இருக்கின்ற நிலையை மாற்ற வேண்டும். எல்லோருமாகச் சேர்ந்து கொஞ்சம் வரி மாதிரிப் போட்டு பணம் வசூல் செய்து பள்ளி வாசல் வேலையைத் துவக்கிவிட்டோம்.

ஆனால், போதிய பணம் இல்லாமல் பாதியோடு வேலை அப்படியே நிற்கிறது. அதை எப்படியும் கட்டியாகணும். நீங்கதான் அதற்கு ஒரு வழி சொல்ல வேண்டும்", என்று கேட்டுக்கொண்டார்.

அதற்கு நபிகள் நாயகம் அந்தப் பெரியவரைப் பார்த்துச் சொன்னார்,
"
அருகிலுள்ள ஊரில் ஒரு செல்வந்தர் இருக்கிறார்... அவருடைய பெயர், விபரம் எல்லாம் தருகிறேன். நீங்கள்அவரிடம் போய் பள்ளிவாசல் கட்டுவதற்கு உதவவேண்டும் என்று கேளுங்கள்; உங்கள் வேலை சுலபமாகவே முடிந்துவிடும், " என்று சொன்னார்கள் எம்பெருமானார்.
எம்பெருமானார் சொன்னதைக் கேட்ட பின்னும் சற்றுத் தயக்கமாக நின்றார், அந்தப் பெரியவர். அவரது தயக்கத்தைப் பார்த்த எம்பெருமானார் அவர்கள், "உங்கள் தயக்கம் எனக்குப் புரிகிறது நீங்கள் அவரிடம் போய்க் கேளுங்கள், அவர் நிச்சயம் கொடுப்பார் " என்றார்.
அதற்குப் பிறகு பெரியவர், எம்பெருமானார் அவர்கள் குறிப்பிட்ட அந்தப் பணக்காரர் வசிக்கின்ற ஊரைத் தேடிப் போனார்.

அந்தப் பணக்காரரையும் பார்த்தார்.

பணக்காரரைப் பார்த்ததும் பெரியவருக்கு மிகப் பெரிய அதிர்ச்சி!

பெரியவர் அதிர்ச்சிக்குக் காரணம் இல்லாமல் இல்லை.

தாம் பார்க்கப் போகின்ற பணக்காரர் பெரிய கருமி என்றும் எச்சில் கையால் காக்கையைக்கூட விரட்டாதவர் என்ற அளவில் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தார். அப்படிக் கேள்விப்பட்டது எவ்வளவு உண்மை என்பதைத்தான் அந்தப் பணக்காரரைப் பார்த்தபோது தெரிந்து கொண்டார்.

பார்த்த மாத்திரத்தில் எப்படி அப்படி ஒரு முடிவுக்கு வந்தார்?
பெரியவர் பணக்காரரைப் பார்க்கப்போன நேரத்தில், அந்தப் பணக்காரர், ஒருத்தரை தூணில் கட்டிவைத்து அடித்துக் கொண்டிருந்தார்.

அதைப்பார்த்த பெரியவர், அங்கே நின்றுகொண்டிருந்தவர்களில் ஒருவரிடம், "எதுக்காக அந்த மனிதரை அப்படி அடிக்கிறார்?" என்று கேட்டார்.
அதற்கு அங்கிருந்தவர் சொன்னார், "அய்யா அவங்க, அந்த ஆளைக் கடைக்கு அனுப்பிப் பருப்பு வாங்கி வரச் சொல்லியிருக்கின்றார். அந்த ஆள் பருப்பு வாங்கிவரும்போது பத்துப் பருப்பு கீழே சிந்திச் சிதறவிட்டுவிட்டாராம். அதுக்காக பத்து அடி அடிக்கிறார்," என்று விளக்கம் சொல்லியிருக்கிறார்.
ஒரு பருப்புக்கு, ஒரு அடி வீதம் பத்து அடி என்று கணக்குப் பார்த்து அடிக்கின்ற இந்தக் கஞ்சப் பேர்வழி எங்கே பள்ளிவாசல் கட்டப் பணம் தரப்போகின்றார்? இந்த நேரம் போய் நாம் பணம் கேட்டால் நமக்கு என்ன நடக்குமோ என்று அங்கிருந்து தலை தப்பினால் போதும் என்று நடையைக் கட்டிவிட்டார்.
அங்கே எடுத்த ஓட்டம் நேரே நபிகள் முன்னால் வந்து நின்றார், பெரியவர். அவரைப்பார்த்து நபிகள் அவர்கள் கேட்கிறார்கள்,"பணக்காரர் என்ன கொடுத்தார்?"
"கொடுத்தார், கொடுத்தார் நல்லாவே கொடுத்தார்...அடி, உதை என்று ஆரம்பித்து நடந்ததை விபரமாகச் சொல்லி அப்படிப்பட்டவரிடம் என்னை அனுப்பினீர்களே?!", என்று சொல்லி நிறுத்தினார்.
எம்பெருமானார் அமைதியாகச் சொன்னார், "மறுபடியும் அந்தப் பணக்காரரைப் போய் பார்த்துக் கேளுங்கள், " என்று சொல்கிறார்.
பெரியவருக்கு எம்பெருமானார் சொல்லைத் தட்டயியலாம,
மீண்டும் அந்தப் பணக்காரரைப் போய் பார்க்கக் கிளம்பிச் சென்றார்.

இந்த முறை பெரியவர் பணக்காரரைப் போய் பார்த்தபோது மேலும் அதிர்ந்து போனார். அவருக்கு எம்பெருமானார் மீதே கோபம் வந்தது. அப்படிக் கோபம் வர என்ன காரணம் என்கிறீர்களா?

இந்த முறையும் அந்தப் பணக்காரர் ஒரு ஆளை ஒரு மரத்தில் கட்டி வைத்து சாட்டையால் அடித்துக்கொண்டிருந்தார். அங்கிருந்தவரிடம் பெரியவர், "ஏன் இப்படி மாட்டை அடிக்கிற மாதிரி அடிக்கின்றார்? காரணம் என்ன?" என்று கேட்டார்.
"அந்த ஆளைக் கடையில் போய் எண்ணெய் வாங்கிவரச் சொல்லியிருக்கின்றார், அந்த ஆள் எண்ணெய் வாங்கி வரும்போது பத்துச் சொட்டு எண்ணெயை கீழே சிந்தி விட்டாராம், அதனால் பத்து சவுக்கடி கொடுத்துக் கொண்டிருக்கிறார், " என்றார் அங்கிருந்தவர்.
பள்ளிவாசல் கட்டப் பணம் கேட்க வந்த நம்ம பெரியவருக்கு நபிகள் பேச்சைக் கேட்டு வந்தது தப்பாப்போச்சு; இந்தக் கருமியிடம் பணம் கேட்டு பள்ளிவாசல் கட்டுவதைவிட பள்ளிவாசல் கட்டுகின்ற எண்ணத்தையே விட்டுவிடுவது நல்லது என்ற முடிவுக்கு கிட்டத்தட்ட வந்து விட்டார்.
இந்தக் கருமியிடம் பணம் கேட்டு அவரும் பத்துரூபாய் நன்கொடை என்று கொடுத்துவிட்டு பள்ளிவாசலை சரியாக் கட்டவில்லை என்று ரூபாய்க்கு ஒரு அடியோ உதை என்று கொடுத்தால் அதை வாங்குவது நாம்தான் என்றெண்ணிய பெரியவர், கருமியிடம் பணம் கேட்பதை கைவிட்டுவிட்டு பேசாமல் நபிகள் முன்னால் வந்து நின்றார்.
"செல்வந்தர் என்ன கொடுத்தார்?" என்று எம்பெருமானார் கேட்கின்றார்கள்
"சவுக்கடிதான்.... ", என்று சொல்லி நடந்த விபரத்தையும் அந்தக் கருமியிடம் பணம் கேட்கவேண்டாம் என்று முடிவெடுத்துத் திரும்பியதாகச் சொல்கின்றார்.
இந்த முறை எம்பெருமானார் " மறுபடியும் நீங்கள் அவரிடம் போய்க் கேளுங்கள்! " என்று உத்தரவிடும் தொனியில் சொல்கின்றார்கள்.
எம்பெருமானாரின் கட்டளையை மீற முடியாத பெரியவர் மறுபடியும் அந்தப் பணக்காரரைப் பார்க்கப்போகின்றார்.

பெரியவர் பணக்காரர் வீட்டுக்குள் நுழையும்போது சிறிது நின்று யோசித்தார். சரி வருவது வரட்டும் என்று துணிச்சலை வரவழைத்துக் கொண்டு போனார்.
நல்லவேளையாக அங்கே யாரும் அடிபடவில்லை; ஆனால் அந்தப்பணக்காரர் வீட்டுக்குள் யாரிடமோ சத்தமாக திட்டிப் பேசிக்கொண்டிருந்தார். எம்பெருமானாரின் கட்டளை நினைவில் எழ, பெரியவர் துணிந்து அவரை அணுகி தாம் வந்த காரியத்தைப் பற்றிச் சொல்லி உங்களால் முடிந்ததை தந்து உதவ வேண்டுமென்று மிகப் பணிவாகக் கேட்டுக்கொண்டார், பெரியவர்.
"பள்ளி வாசலைக் கட்டிமுடிக்க எவ்வளவு செலவு செய்வதாக உத்தேசித்திருக்கின்றீர்கள்?" என்று அந்தச் செல்வந்தர் கேட்டார்.
"பள்ளிவாசல் கட்டி முடிக்க பத்தாயிரம் ரூபாய் தேவைப்படும். நீங்க உங்களால் முடிந்ததைக் கொடுத்தீர்களானால் மீதியை மத்தவங்களிடம் நன்கொடையா வாங்கி பள்ளி வேலையை முடித்திடுவோம்," என்றார் பெரியவர்.
அதுக்கு அந்தப் பணக்காரர் என்ன சொன்னார் தெரியுமா?


என்ன சொல்லீருப்பார்ன்னு நினைக்கிறீங்க? கொஞ்சம் யூகிச்சுப் பாருங்களேன்!


"இவ்வளவு காலம் உங்கள் ஊரில் பள்ளிவாயில் இல்லாமல் இருந்ததே தவறு. இதில் இன்னமும் பலபேர்களிடம் போய் நன்கொடை அது... இது என்று காலம் தள்ளுவது நல்லதல்ல; பள்ளிவாயில் கட்டத் தேவையான பத்தாயிரத்தையும் நானே தருகின்றேன். இந்த மாதிரி ஒரு நல்ல காரியத்திற்கு உதவாத பணம் என்னிடம் இருந்து என்ன ஆகப் போகின்றது?" என்று சொன்னவர் சற்றும் தாமதிக்காமல் உள்ளே சென்று பத்தாயிரம் ரூபாயை எடுத்து வந்து பெரியவரிடம் கொடுத்தார்.


பெரியவருக்கு நடப்பது கனவா? நனவா? என்று குழம்பிய நிலையில் எம்பெருமானார் முன் வந்து விபரத்தைச் சொல்கின்றார். விபரம் சொன்னதோடு நிற்காமல் நபி அவர்களிடம் கேட்கின்றார்.

"பத்துப் பருப்பு சிந்தியதற்கும், பத்துச் சொட்டு எண்ணெய் சிந்தியவருக்கும் அடியும் உதையும் கொடுத்தார்; அப்படிப்பட்டவர் பள்ளிவாசல் கட்ட எதாவது கொடுங்கள் என்றால் பத்தாயிரத்தை சுளையாகத் தூக்கிக் கொடுக்கின்றாரே இவரை கருமி என்பதா? கொடைவள்ளல் என்று சொல்வதா?" என்று தன் ஆச்சரியம் விலகாமல் கேட்கின்றார் பெரியவர்.

பெரியவர் சுவற்றில் அடித்த பந்து போல திரும்பத் திரும்ப வந்து நின்ற போதெல்லாம் நபியவர்கள், 'போய் அவரிடம் கேளுங்கள்' என்றுதான் சொன்னாரேயொழிய வேறு எதுவும் சொல்லாவில்லை. ஆனால் இப்போது விளக்கம் சொல்கின்றார்.

"கருமித்தனம்ங்கறது வேற! சிக்கனம்ங்கறது வேற!! அந்த ஆள் கருமி கிடையாது. சிக்கனத்தைக் கையாளுபவர்; அவர் சிக்கனமாய் இருந்து சேர்த்து வைத்ததால்தான் அந்தப் பணம் பள்ளிவாசல் கட்டப் பயன்படுகிறது. எனவே சிக்கனமாக இருப்பவரை கருமி என்று எண்ணாதீர்கள்", என்று சொன்னார்கள்.

(நம்மாளுகள்ள பலபேர் இப்படித்தான் சிக்கனமா இருக்காங்களோ!!)
எம்பெருமானார் சொன்ன அந்த வைர வார்த்தைகள்தான் கருமித்தனத்துக்கும் சிக்கனத்துக்கும் உள்ள இடைவெளியை நமக்குப் புலப்படவைக்கின்றது.

இந்தச் செய்தியை நீங்கள் படித்துவிட்டு உங்கள் வீட்டம்மாவிடம் சொன்னாலும் சொல்லலாம்; அல்லது யார் மூலமாவது இந்தச் செய்தி காற்று வாக்கில் பல குடும்பத் தலைவிகளின் காதிலும் விழுந்திருக்கலாம்!
குடும்பத் தலைவர்கள் மேல எனக்கு அனுதாபம் அதிகமா இருக்கிறதால ஒன்றைச் சொல்ல வேண்டியது அவசியம்ன்னு நெனைக்கேன்....
இனிமேலும் நீங்கள் கடைக்குப் போய் பருப்போ இல்லை எண்ணெய்யோ வாங்கி வருகின்ற சந்தர்ப்பம் ஏற்படலாம்!?

அப்படி வாங்கி வர்ற‌ வழியில் எதாவது தப்பித் தவறி சிந்திட்டா
இவ்வளவு சிந்திப் போய்ட்டதுன்னு வெகுளித்தனமாக வீட்டில் சொல்லிக்கொண்டிருக்காதீர்கள். ஏன்னா ஒரு நேரம் போல் ஒரு நேரம் இருக்காது....!??????

No comments: