Friday, April 3, 2009

சென்னை நகர்புற சேரி முஸ்லிம்கள் : கள ஆய்வியல் வரைபடம்

சென்னை நகர்புற சேரி முஸ்லிம்கள் : கள ஆய்வியல் வரைபடம்
ஹெச்.ஜி.ரசூல்
mylanchirazool@yahoo.co.in

கவிஞர் சோதுகுடியானின் ஏழைமுஸ்லிம்கள் களப்பணி ஆய்வுத் தொகுப்பு குறுநூல் தமிழகத்து அடித்தள முஸ்லிம்கள் குறித்த தரவுகளின் முக்கியதொரு ஆவணமாக விளங்குகிறது.
நகர்புற சேரிகளில் வசிக்கும் முஸ்லிம்கள் பற்றிய அறியப்படாத உலகம் வாசகனை அதிர்ச்சியடையச் செய்கிறது.
ஆய்வின் முன்குறிப்பில் கவிஞர் சோதுகுடியான் சேரிமுஸ்லிம்கள் என தலைப்பிடுவதாக இருந்தபோது சில இஸ்லாமிய அறிவுஜீவிகளின் எதிர்ப்பால் ஏழை முஸ்லிம்கள் என தலைபிட்டுள்ளதாக குறிப்பிடுகிறார்.இது முஸ்லிம் அறிவுஜீவிகளின் போதாமையையும்,திறந்த உரையாடலுக்கான சாத்தியங்களை மறுப்பதாகவும் அமைந்துவிடுகிறது.
முஸ்லிம்களின் வலியும் துயரமும் மிகுந்த வாழ்க்கையை கண்டுணர்ந்து சொல்வதற்கும் முஸ்லிம்முரசு மாத இதழில் தொடராக எழுதவும் துணிந்த சோதுகுடியான் அத் தொடரை தற்போது தொடராமல்நிறுத்தியிருப்பதுவருத்தத்திற்குரிய ஒன்றாகும்.


இன வரைவியல் ஆய்வுக்கு குறிப்பிட்ட பிரதேச மக்களின் அன்றாட சமூக நடத்தைகள்,வாழ்க்கைவட்டச் சடங்குகள்,முழுமையாக பதிவு செய்யப்படவேண்டும். எனவே ஏழைமுஸ்லிம்கள் நூலை ஒரு முஸ்லிம் இனவரைவியல் தொகுப்பாக கருதுவதைவிட நகர்புற சேரி முஸ்லிம்களின் தொழில் மற்றும் சமூக, பொருளாதார ,கல்விநிலை குறித்த விவரங்களை ஆவணப்படுத்துகிற கள ஆய்வியல் தொகுப்பு என மதிப்பிடலாம்.



நீதிபதி ராஜிந்தர் சச்சார் ஒடுக்கப்பட்ட இந்திய முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கு
ஆதாரமாக முஸ்லிம்களின் சமூக பொருளாதார நிலையையே மையப்படுத்தி விரிவான அறிக்கையை தாக்கல் செய்திருந்தார்.தமிழகத்தைப் பொறுத்தமட்டில் மரைக்காயர்,ராவுத்தர்,லெப்பை ,ஒசாக்கள் என அறியப்பட்ட முஸ்லிம்கள் தவிர்த்த இன்னொரு பரிமாணத்தை கவிஞர் சோதுகுடியான் வெளிப்படுத்துகிறார். முஸ்லிம் சமூகத்தின் வர்க்க உள்முரண்களை பேசிவிட்டார் என்று கூட சில அறிவுஜீவிகள் விமர்சிக்ககூடும்.. இஸ்லாத்தின் சமத்துவ பொருளியல் கோட்பாடு குறித்த அக்கறை இருக்கின்ற காரணத்தாலும் அடித்தள முஸ்லிம்களின் மேம்பாட்டிற்கும் ,ஒடுக்குமுறைக்கு எதிரான விடுதலைக்குமான ஆர்வத்தின் வெளிப்பாடாகவுமே கவிஞர் சோதுகுடியானின் விளிம்புநிலை முஸ்லிம்கள் குறித்த இந்த ஆவணத்தை குறிப்பிட வேண்டும்.


முஸ்லிம் பண்பாட்டு இயக்கங்கள் விரலாட்டுவதில் தொடங்கி மீடியாக்களில் ஊடக யுத்தம் செய்து கொண்டிருக்கும் துர்ப்பாக்கியமான சூழல் நம்முன் உள்ளது. முஸ்லிம் அரசியல் இயக்க்கங்கள் ஓட்டு அரசியல் அதிகாரத்தை பங்கிடுவதற்கு மட்டுமே அதிகபட்சம் முயல்கின்றன. இச் சூழலில் இந்த அதிகாரங்களும் வகாபிய மசாயில் ஆர்ப்பாட்டங்களும் முற்றிலும் விளிம்பு நிலை முஸ்லிம்களுக்கானதாக நிகழவே இல்லை என்பதை அப்பட்டமாக இத் தொகுப்பை வாசிப்பதின் மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது


தமிழக அறிவுஜீவிகள் சேரிமுஸ்லிம்கள் என்ற சொல்லை பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வேளையில் இந்திய நகர்புற சேரிகளில் வாழும் முஸ்லிம்கள் நிலைகுறித்து ஆய்வு நிறுவனங்களோ,அல்லது தனிநபர் கல்விப் புலம்சார்ந்தோ சில கள ஆய்வியல் விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. எம்.எச்.லக்டவாலா அடித்தள முஸ்லிம்கள் கடன் பெறும் நிதி நிறுவனங்கள் குறித்த ஆய்வில் சேரிவாழ் முஸ்லிம்கள் குறித்துப் பேசுகிறார்.இந்தியாவில் நகர்புற சேரிகளில் குடியிருப்போரில் மில்லியன் கணக்கீட்டில் மிக அதிகமாக மும்பையில் 5.8,டெல்லியில் 1.82,கல்கத்தாவில் 1.49 ,சென்னையில் 1.08 மில்லியன் மக்கள் வசிப்பதாகக் குறிப்பிடுகிறார்.இதனையே அவர் மொத்த சேரி மக்கள் தொகையில் சேரிகளில் வசிக்கும் முஸ்லிம்களை சதவிகிதப்படி விளக்கும் போது மும்பையில் 28.5,டெல்லியில் 18.8
சென்னையில் 18.3,கல்கத்தாவில் 12.7 சதவிகிதமாக உள்ளனர் என தெரிவிக்கின்றனர்.(த மில்லி கெசட்,16 - 30 செப் 2004)



ரிஸ்வி சையது ஹைதர் அப்பாஸ் உத்தரபிரதேசம் லக்னோவில் முஸ்லிம்சேரிகளில் வாழும் மக்களின் சமூக பொருளாதார வாழ்நிலை குறித்த ஆய்வொன்றை நிகழ்த்தியுள்ளார்.
உத்தரபிரதேசத்தின் மொத்த மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் அடையாளம் காணப்பட்ட 6734 நகர்புற சேரிகளில் வசிக்கிண்றனர்.இதில் லக்னோவில் மட்டும் 639 சேரிகள் உள்ளன. மொத்த சேரி மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 27.6சதவிகிதத்தினர் இங்கு வசிக்கின்றனர்.சேரிமுஸ்லிம்களின் வாழ்நிலை மூவாயிரம் ரூபாய்க்கும் குறைவான வருமானம் பெற்று வறுமை கோட்டுக்கு கீழுள்ள நிலையில் இருப்பதையும்,பாலின விகிதம் ஆண்களைவிட பெண்கள் அதிகமாக இருப்பதையும் இன்னும் பெண்சிசுமரணம்.ஆரம்பக் கல்விஉள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகள் அவற்றிற்கான மாற்று என இவ்வாய்வு முன்வைக்கப்படுகிறது.(த மில்லி கெசட் அக்டோபர் 2004)


ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் முஸ்லிம் சேரிவாழ் பெண்கள் குறித்து பி.வி.எல்.ரமணா கள ஆய்வொன்றை நிகழ்த்தி நூலாக வெளியிட்டுள்ளார்.சேரிகளில் உழைக்கும் முஸ்லிம் பெண்களின் கல்விநிலை,குழந்தைப் பேறு மற்றும் குடும்பக் கட்டுப்பாடு நடைமுறைகள்,சேரியில் வளரும் பெண்களின் நிலைபாடு உள்ளிட்ட பகுதிகள் சார்ந்து இந்த ஆய்வு இயங்குகிறது.சேரி வாழ்வின் பொருளாதார நிலை, பெளதீக அடிப்படைவசதிகளின் கட்டுமானம் என்பதான எல்லைகளைத் தாண்டி சேரிப்பெண்களின்மீதான பாலின பாகுபாடும் ஒடுக்குமுறையும் சேரிப் பெண்களிடத்தில் நிகழும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் இந்த ஆய்வு கவனப்படுத்துவது குறிப்பிடத்தக்கது


கவிஞர் சோதுகுடியான் நகர்புற சேரி முஸ்லிம் கள ஆய்வுக்கு தேர்வு செய்த சென்னை பெருநகர் பகுதிக்குள் அமைந்த திருவல்லிக்கேணி நீலம்பாதுஷாதர்கா, சிட்டிசென்டர் எதிரில் அமைந்த இஸ்மாயில் கிரவுண்டு,மயிலாப்பூர் பாஷாதோட்டம். ஐஸ்ஹவுஸ் அத்திக்குண்டா,வண்ணாரப் பேட்டை லாலாகுண்டா,புரசைவாக்கம் புளியந்தோப்பு,அருகம்பாக்கம் ஆசாத்நகர்,கிருஷ்ணாம்பேட்டை குத்ரத் அலி மக்கான், வியாசர்பாடி பி.வி.காலனி, என ஒன்பது பகுதிகளாகும்.மேலும் சென்னை புறநகர் காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை,பூந்தமல்லி பட்டூர்,விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம், ராமராஜபுரம் பேரூராட்சி பகுதிகளுமாகும்


ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட இச் சேரிகளில் வாழும் முஸ்லிம்களின் மக்கள்தொகை ஏறத்தாழ 48,000க்கும்மேல் உள்ளது. இரண்டாயிரமும் அதற்கு கீழிலான மக்கள்தொகையை நீலம்பாஷாதர்கா ,பாஷாதோட்டம், அத்திக்குண்டா ,கிருஷ்ணாம்பேட்டை,ராமராஜபுரம் பகுதிகளைக் கொண்டுள்ளன. அதிகபட்சமாக எட்டாயிரமும் அத்ற்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட பகுதிகளாக லாலாகுண்டா,புளியந்தொப்பு பகுதிகள் அமைந்துள்ளன.
.
பொதுவான இந்த சேரிகளின் அமைவிடம், முஸ்லிம்கள் உடல் அடக்கம் செய்வதற்கு பயன்பட்ட மையவாடிகளாகவே இருக்கின்றன. குறிப்பாக ஆற்காடு நவாபால் வழங்கப்பட்ட 44 கிரவுண்டு மனையில்தான் நீலம்பாதுஷா தர்கா சேரிப்பகுதி அமைந்துள்ளது.ஹாஜி இஸ்மாயில் வக்ப் செய்தது இஸ்மாயில் கிரவுண்டு பகுதி குடியிருப்பாகியுள்ளது.இவ்வாறு வக்ப் செய்யப்பட்ட நிலங்கள் அரசாலும் தனிநபர்களாலும் ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்ற தகவலையும் இத்தோடு கவனிக்க வேண்டியுள்ளது.இஸ்மாயில் கிரவுண்ட்டில் ஐந்தேகால் கிரவுண்டு நிலம் வீட்டுவசதிவாரியத்தால் பறிக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிடலாம். ஒரு கிரவுண்டு நிலம் ஒன்றரை கோடியிலிருந்து இரண்டரை கோடிவரை மதிப்பீடு கொண்டுள்ளதையும் ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.
முஸ்லிம்கள் வசிக்கும் வீடுகள் 100 - 400 சதுர அடியில் சிறு கட்டிட அமைப்பைக் கொண்ட ஆஸ்பெஸ்டாஸ் சீட்டு,தார்சீட்டு கவுத்திய வீடுகளாகவே பெருமளவில் உள்ளன. ஆய்வாளர் இவ் வீடுகளை ஓரிடத்தில் புறாகூண்டுகள் எனவும் மற்றொரு இடத்தில் எலிப்பொந்துகள் எனவும் குறிப்பிடும் போது அம்மக்களின் இருப்பிட நெருக்கடியை மிக எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது


கிருஷ்ணாம்பேட்டை குத்ரதலி மக்கான் முஸ்லிம் சேரியை சித்தரிக்கும்போது வேனிற்காலத்தில் ஆண்களும் பெண்களுமாக பக்கிர் எலப்பை பள்ளியின் முன்பாக வாசலில், பிளாட்பாரத்தில் படுக்கின்றனர் என்கிறார்.பிறிதொரு இடத்தில் ஒரு குறும் வீட்டிற்குள் படுக்கையறையும் சமையலறையும் எவ்வாறு மாறிமாறி அமைக்கப்படுகிறது என்பதை சமையலறை,இரவில் கட்டிலுக்கு அடியில் இருக்கும்,பகலில் கட்டில் மடித்து சுவற்றில் சாத்தப்பட்டிருக்கும் என அத்திகுண்டா பகுதி சேரிவீடுகளை அறிமுகப்படுத்தும்போது குறிப்பிடுகிறார்.


முஸ்லிம் என்ற ஒற்றை அடையாளம்தாண்டி மொழியடிப்படையில் உருதுமுஸ்லிம்,தமிழ்முஸ்லிம் என மாறுபட்ட அடையாளங்களைமுஸ்லிம்கள் கொண்டுள்ளனர்..நீலம்பாஷா தர்கா பகுதியில் எழுபத்தைந்து சதவிகிதம் உருது தக்னி முஸ்லிம்கள் சங்கராபுரத்திலும் இதுபோன்று உள்ளனர். அத்திகுண்டாபகுதியில் உருது,தமிழ் முஸ்லிம்கள் சரிசமமாகவும்,இதரபகுதிகளில் கலந்தும் வாழ்கின்றனர். பொருளாதார வாழ்நிலை,சமயநிலை ஏறத்தாழ சமமாக இருந்தபோதும் கூட உருதுகள் தமிழ்முஸ்லிம்களைப் பார்த்து லெப்பை என இளக்காரமாக சொல்வார்கள் என்ற வரிகளில் புதைந்து கிடக்கும் மேலாதிக்க மனோபாவத்தையும் ஆய்வாளர் கட்டுடைக்கத் தவறவில்லை.
நகர்புற சேரிகளில் வாழும் முஸ்லிம்களில் 98 சதவிகித்த்தினர் அடித்தள தொழில்களையே மேற்கொண்டு வருகின்றனர்


கேரள மலப்புறம் பகுதியிலிருந்து வரும் முஸ்லிம் ஆண்கள இங்குள்ள பிறமத பெண்களோடு குடித்தனம் நடத்திவிட்டு பிறகு ஓடிவிடுகின்றனர் அல்லது மரணத்தை எதிர் கொண்ட பிறகு இவ்வாறான குடும்பங்களின் வாரிசுகள் இத்தகைய பிரச்சினைகளை எதிர் கொள்கின்றன. சில குடும்பங்களின் வீடுகளில் மக்கா, மதிநா,நாகூர்பள்ளி,வேளாங்கண்ணி மாதா,இயேசு,பிள்ளையார்,சிவன் புகைப்படங்கள் இருப்பதை ஆய்வாளர் சுட்டிக்காட்டுகிறார்.இரு சமயங்களின் கலாச்சாரங்களிடையே அல்லல்பட்டு அடையாள நெருக்கடியை சந்திக்கும் குடும்பங்களாக இவை இருக்கின்றன.
தாடி, தொப்பி, ஜிப்பா என்பதான புற அடையாளங்கள் சார்ந்து ஒரு முஸ்லிம் கட்டமைக்கப்படுவதின் விளைவாகவே சங்கராபுரத்தைச் சார்ந்த ஒரு முஸ்லிமின் கூற்றுஇவ்வாறு வெளிப்படுகிறது.


சங்கராபுரம்சுற்றியுள்ளபாவளம்,மல்லாபுரம்,ஆலத்தூர்,பாலப்பட்டு,லெக்கநாயக்கன்பட்டி,உள்ளிட்ட 60 கிராமங்களில் பெயரைக் கேட்டுத்தான் முஸ்லிம் என கூற முடியும்.பார்வையிலும்,கலாசாரத்திலும் முஸ்லிம் இந்துக்கள் ஒரே இனம் போல்தான் காட்சி அளிப்பார்கள். அவர்களைவிட நாங்கள் மேல் என்பதாக இருக்கிறது


பிற இன ஆண்களோடு திருமணம் செய்து கொண்ட முஸ்லிம் பெண்கள், கணவனால் மூன்று,நான்கு குழந்தைகளோடு கைவிடப்பட்ட பெண்கள் என்பதைத் தவிர முஸ்லிம் பெண்கள் சந்திக்கும் மற்றுமொரு பிரச்சினை தலாக். மணமகன் செல்போனில் மணமகளை பிடிக்கவில்லை என்ற ஒற்றை வரியோடு ,முத்தலாக் சொல்வதும், மணமான மூன்று நாளில் கூட இது நிகழ்வதும், கைக்குழந்தையோடு தலாக் சொல்வதும் சகஜமான சம்பவங்களாக இருப்பதை ஆய்வாளர் குறிப்பிட்டு, தலாக்கில் குரானிய முறை எதுவும் பின்பற்றப்படாமல் கட்ட பஞ்சாயத்து முறையாக இச் சம்பவங்கள் நடைபெறுவதை விமர்சனம் செய்கிறார்.இன்னொருநிலையில் பெண்சார்ந்து மணவிடுதலை பிரச்சினை எழும்போது தலாக் கொடுக்காது இழுத்தடிப்பதும் சிரமப்பட்டு நஷ்ட ஈடாக எந்தப் பண்மும் பெறாமல் வெறும் தலாக்கே போதும் என்ற நிலையில் பெண்கள் தள்ளப்படுவது நிகழ்வதையும் சுட்டிக்காட்டுகிறார்


கள ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இப்பகுதிகளில் முஸ்லிம் குழந்தைகளின் படிப்பு பெரும்பாலும் ஆரம்பக் கல்வியோடு முடிந்து விடுகிறது. உயர்நிலை,மேல்நிலைப் படிப்பு மிக குறைந்த சதவிகிதமே காணப்படுகிறது. சமயக் கடமைகளை நிறைவேற்றுவதற்கான சிறிய அளவிலான பள்ளிவாசல்கள், தர்காக்கள் உள்ளன. சில பகுதிகளில் மட்டுமே இஸ்லாமிய அரசியல் மற்றும் பண்பாட்டு இயக்கங்களின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இவர்களது வாக்குவங்கியின் சார்பு நிலை குறித்த தகவல்கள் பெரும்பாலும் குறிப்பிடப்படவில்லை. எனினும் சங்கராபுரம் பகுதியை முன்வைத்து ஆய்வாளர் பேசும்போது,வகாபி அமைப்புகளின் தோற்றத்தால் நல்லிணக்கபாதிப்பு, அண்ணன்,தம்பி,மாமன்,மச்சான் என் அமைந்த இந்துக்கள், முஸ்லிம்கள் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்கள் ஒருங்கிணைக்கப்படுவதால் பிற இனமக்களும் திரட்சியுற்று பேரூராட்சி தலைவர் பஷீர்பாய் தோற்கடிக்கப்பட்ட விவரத்தை ஆய்வாளர் பதிவு செய்கிறார்


தமிழகத்தில் வாழும் முஸ்லிம்கள் அனைவருமே பங்களாவீடுகளில் வசிப்பவர்கள்,எப்போதும் பிரியாணி இறைச்சி சாப்பிடுபவர்கள் ,அரபுநாட்டு செல்வத்தில் சென்ட் வாசனையோடு திளைப்பவர்கள் வசதியாக வாழ்பவர்கள, தொழில்முதலாளிகள், அரசுப்பணி ஆசிரியப்பணியில் இருப்பவர்கள் துருக்கித் தொப்பி அணிந்த அரசியல்வாதிகள் என்பதான புனைவுகளை மட்டுமே பலர் பரப்பிவருகின்றனர்,வெகுஜன மக்களின் ம்னோபாவங்களிலும் இதுவே நிலைபெற்றுள்ளது. இதனை கட்டுடைப்பு செய்து அடித்தள முஸ்லிம்களின் வேதனைக்குரிய வாழ்வை கவிஞர் சோதுகுடியானின் இந்த கள ஆய்வியல் தொகுப்பு மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு வெளிப்படுத்துகிறது
.
முஸ்லிம்தனவந்தர்களிடம் கல்விச் செலவுக்கான பட்டியல் போட்டு ஏற்கச் சொல்வது, எழைமுஸ்லிம் பெண்களின் பிரச்சினை தீர பலதாரமணத்தை தீர்வாக வைப்பது உள்ளிட்ட சில் தீர்வுகளை நீக்கிவிட்டு அணுகிணால் அடித்தள் முஸ்லிம்களுக்கான கொள்கை உருவாக்கத்திற்கான ஒரு அடிப்படை ஆவணமாகக் கூட இதை கருதலாம்.


முஸ்லிம்களுக்கான கல்வி,வேலைவாய்ப்புபுக்கான இடஒதுக்கீட்டை நலிவடைந்த்த ஒடுக்கப்படுகிற அடித்தள முஸ்லிம்களின் சார்பாக திருப்புவதற்கு இந்த ஆவணத்தை ஒரு ஆயுதமாக நாம் பயன்படுத்தலாம்.

No comments: