அச்சப்பட வேண்டாம்... ஐ.டி.படிக்கலாம்!
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடித்துவிட்டு ரிசல்ட்டுக்காகக் காத்துக்கொண்டிருக்கும் அநேக மாணவர்கள் சந்திக்கும் கேள்வி, 'அடுத்து என்ன படிக்கப்போகிறாய்...?' என்பதுதான். கடந்த ஆண்டுவரையில் இந்தக் கேள்வியை எதிர்கொண்டவர்கள் தெளிந்த முகத்தோடு, 'ஐ.டி. தான்!' என்றார்கள். ஆனால், இந்த ஆண்டு, அந்த வார்த்தைகள் சிறு தயக்கத்துக்குப் பிறகு வருகிறது, அல்லது 'தெரியலை...' என்பதாக இருக்கிறது. சமீபத்தில் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியால் ஐ.டி. துறைக்கு ஏற்பட்ட பாதிப்பு மாணவர்களைக் கொஞ்சம் திகைக்க வைத்திருக்கிறது. 'எதுக்கு ரிஸ்க் எடுக்கணும்... மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் மாதிரி ஏதாவது மாறிடலாமா..?' என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள் மாணவர்கள் பலரும்.
''எல்லாத் துறையிலும் ஆள் குறைப்பு, வேலை வாய்ப்பு இல்லாத நிலை எல்லாம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், கிளாமர் துறையான ஐ.டி-யில் ஆள்குறைப்பு நடந்தாலோ, வேலையிழப்பு ஏற்பட்டாலோ உடனே பெரிய நியூஸ் ஆகிடுது! உலகத்தில் எத்தனையோ பேர் டைவர்ஸ் பண்றாங்க... அதுபற்றி யாரும் விவாதம் செய்வதில்லை. சினிமாக்காரர்கள் டைவர்ஸ் பண்ணினா, உடனே உலகம் முழுக்கத் தெரியற மாதிரி நடந்திருக்கும் விஷயம் இது'' என்று இன்றைய சூழல் பற்றிப் பேச ஆரம்பித்தார் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மன்னர் ஜவஹர்.
''பொருளாதார மந்தநிலையால் அனைத்து நாடுகளுமே பாதிப்படைந்துள்ளன. ஆனால், மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியாவும் சீனாவும் அடைந்த பாதிப்பு குறைவுதான். அதோடு, இந்த பாதிப்பு ஒரு தற்காலிகமான சூழல்தான். 1999-2000-ல் டாட் காம் பிரச்னை வந்தபோது ஐ.டி. துறை பெரும் சரிவைக் கண்டது. ஆனால், விழுந்த வேகத்திலேயே எழுந்து 2003-ம் ஆண்டுக்குப் பிறகு உற்சாகமாக மேல்நோக்கிச் செல்லத் தொடங்கியது. அதிலும் 2005, 2006-ம் ஆண்டுகளில் அதன் உச்சத்தை அடைந்தது. இதேபோல, மீண்டும் எழுச்சி ஏற்படத்தான் செய்யும். இந்தச் சுழற்சி நடந்துகொண்டுதான் இருக்கும். இந்த ஆண்டு ஐ.டி-யில் சேரலாமா என்ற குழப்பம் மாணவர் மத்தியில் இருப்பதாகச் சொல்கிறீர்கள். ஆனால், கடந்த ஆண்டில் சுமார் 35 மாணவர்கள் மருத்துவம் படிக்கக் கிடைத்த வாய்ப்பை மறுத்துவிட்டு பொறியியல் படிக்க வந்தார்கள். அந்த அளவுக்கு பொறியியல் மீது மாணவர்களுக்கு ஆர்வம் இருந்தது.
இப்போது உயர்கல்வியைத் தேடும் மாணவர்கள் முதலில், நம்முடைய இலக்கு என்ன... நமக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அடுத்து எந்தக் கல்லூரியில் படிக்க வேண்டும், அங்கே லேப் போன்ற அடிப்படை வசதிகள் இருக்கின்றனவா, கேம்பஸ் மூலம் தேர்வாகும் வாய்ப்பு இருக்கிறதா என்பதையெல்லாம் பார்க்கவேண்டும். அதற்குப் பிறகுதான் நீங்கள் என்ன பிரிவை எடுத்துப் படிக்கப் போகிறீர்கள் என்பதைப் பார்க்கவேண்டும்...'' என்று சொல்லி முடித்தார்.
கிட்டத்தட்ட மன்னர் ஜவஹரை வழிமொழியும் விதமாகப் பேசினார் வேலைவாய்ப்புகளைக் கண்டறிந்து சொல்லும் 'மாஃபா கன்சல்டன்ஸி' நிறுவனத்தின் சி.இ.ஓ-வான பாலாஜி.
''படிக்கச் செல்லும்போதே என்ன வேலை கிடைக்கும் என்ற மனநிலையில் இருக்காதீர்கள். வேலைக்காகப் படிப்பது என்பது செருப்புக்காக காலை வெட்டுவது மாதிரி. எப்போதுமே படிப்பும் வேலைவாய்ப்பும் ஒரே திசையில் செல்லக் கூடியதில்லை. அதை மாணவர்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். வேலைக்கான இன்டர்வியூவில், '100-ம் பக்கம் 2-வது கேள்விக்கு என்ன பதில்' என்று ஒருபோதும் கேட்பதில்லை. மாறாக குழுவாகச் செயல்படுகிறார்களா என்றுதான் ஆய்வு செய்கின்றனர். எனவே கல்வியைத் தாண்டியும் நாம் திறமைகளை வளர்த்துக்கொள்ளவேண்டும். ஒரு நிறுவனத்துக்கு பல நாடுகளில் கிளைகள் இருக்கலாம். எனவே, தேவைகளும் விதவிதமாக இருக்கும். அதை ஈடுசெய்யும் ஊழியர்கள்தான் நிறுவனத்துக்குத் தேவை. அதனால் ஆங்கிலம் அவசியமாகிறது. நான் கிராமப்புறத்தைச் சேர்ந்தவன் என்றெல்லாம் சமாதானம் சொல்லாமல் நம்மை நாமே தகுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்'' என்றார்.
மாணவர்களின் எதிர்காலம் குறித்து பல கருத்தரங்குகளை நடத்துபவரான விஸ்வநாதன் சொல்லும் கருத்துகள் நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது. இவர் 'டி.ஆர்.எம். இமேஜிக்விட்டி' (TRM Imagequity) என்ற நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இருக்கிறார்.
''என்னைப் பொறுத்தவரையில் பொருளாதாரத்தில் இந்தியாவுக்குப் பின்னடைவு என்பது வரப்போவதேயில்லை. பின்னடைவு என்று சொல்லக்கூடிய இந்தக் காலத்திலும் புதிய வேலைகள் உருவாகிக்கொண்டேதான் இருக்கின்றன. செல்போன் புழக்கத்துக்கு வரும் காலத்துக்கு முன்பு இந்தப் பிரிவில் இத்தனை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப் போகிறது என்று யாராவது நினைத்துப் பார்த்திருப்போமா... ஒருவேளை செல்போன் என்ற கருவி வராமல் இருந்திருந்தால் இத்தனை பேரும் சும்மாவா இருந்திருப்பார்கள்? அதனால், வேலை குறித்த பயம் எப்போதும் யாருக்கும் இருக்கத் தேவையில்லை.
மாணவர்கள் அடிப்படையாக சில விஷயங்களைக் கற்றுக்கொள்ளவேண்டும். தங்களிடம் உள்ள தலைமைப் பண்புகளை பள்ளிக்கூட காலத்திலேயே வளர்த்துக்கொள்ளவேண்டும். அந்தக் குணம்தான் நம்மை உயரத்துக்கு அழைத்துச்செல்லும். மேலும் மாணவர்கள் எப்போதும் ஒரு மாற்றுத் திட்டதை (alternative idea) கையில் வைத்துகொள்ளவேண்டும். அதுதான் நம்மைச் சோர்வடையாமல் அடுத்தடுத்த படிகளுக்குச் ஏற்றிச் செல்ல உதவியாக இருக்கும். நல்ல கல்லூரியில் இன்ஜினீயரிங் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அதற்காகக் கவலைப்படத் தேவையில்லை. பி.எஸ்ஸி. அல்லது ஏதேனும் ஒரு கலைப் படிப்பு படிக்கலாம். அதை முடித்துவிட்டு எம்.பி.ஏ. படிக்கலாம். இன்ஜினீயரிங் முடித்தால் என்ன வேலையும் சம்பளமும் மரியாதையும் கிடைக்குமோ, அதை எம்.பி.ஏ. மூலம் பெற்றுவிடலாம். இப்படிப்பட்ட மாற்றுத் திட்டம் மனதில் இருந்தால் நல்லது. இதைப் படித்தால் வேலை நிச்சயமாகக் கிடைக்கும் என்று சொல்லக்கூடிய படிப்பு இருக்கவே முடியாது. எந்தப் படிப்பாக இருந்தாலும் அது அறிவை வளர்க்க உதவுவதாகத்தான் இருக்கமுடியும். வேலையைப் பெற்றுத் தருவது படிப்போடு சேர்ந்த வேறு சில விஷயங்கள்தான்... எனவே, எப்போதும் உன்னிப்பான கவனிப்போடு இருங்கள்... எல்லாம் உங்கள் வசப்படும்!'' என்றார்.
இப்போது அச்சமெல்லாம் தீர்ந்து ஐடியா கிடைத்திருக்குமே!
Courtesy : Vikatan
No comments:
Post a Comment