சிரிப்பு
"சிரிப்பு" என்பது சிநேகத்திற்கான முதல் தூது. இறுக்கமான சூழ்நிலையை இணக்கமாக்க உதவுவது. மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பகிரங்க அடையாளமே சிரிப்பு. சிரிக்கத் தெரிந்த ஒரே இனம் மனித இனம் தான். ஆரோக்கியத்திற்கான பல்வேறு சுவைகளில் "நகைச்சுவை"யும் ஒன்று. "நிச்சயமாக அவனே (மனிதனை) சிரிக்க வைக்கிறான்". (அல்-குர்ஆன் 53:43).
நோய் நிவாரணி
சிரித்து மகிழ்வோடு இருப்பதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைகிறது என்பது ஜப்பான் பல்கலைக்கழக சமீபத்திய ஆய்வு. மேலும் இது இரத்த அழுத்தத்தை குறைத்து நரம்பு மண்டலத்திற்கு புத்துயிர் அளித்து தசை பிடிப்புகளை தளர்த்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் இருதயத்தையும் பலப்படுத்துகிறது என்பது நிபுணர்களின் கூற்று.
சிரிப்பும் அதற்கான வாய்ப்பும்
ஒரு மனிதன் தனியாக இருப்பதை விட பலருடன் கலந்து இருக்கும் போது வாய் விட்டு சிரிப்பதற்கு முப்பது மடங்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு குழந்தை ஒரு நாளில் சராசரியாக 300 முறை சிரிக்கிறதாம். (இனி மேல் வாழ்வில் சிரிக்கவே முடியாது என்பதனாலோ என்னவோ?) வளர்ந்த மனிதனும் கூட ஒரு நாளில் சராசரியாக 17 முறை சிரிப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
நகைப்பென்னும் உடற்பயிற்சி
100 முறை சிரித்தால் அது 15 நிமிடங்கள் வேகமாக சைக்கிள் ஓட்டுவதற்கு சமம் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். (நன்றி: தினமணிக்கதிர் 20.7.2003).
புண்படுத்துவதும் பண்படுத்துவதும்
பிறரைப் புண்படுத்திச் சிரித்து மகிழும் போக்கை (Caustic Humour) இஸ்லாம் முழுமையாக தடை செய்யும் அதே நேரம் எவர் மனதையும் நோகடிக்காத பண்பான ஆரோக்கியமான நகைச்சுவையை (Compassionate Humour) இஸ்லாம் வரவேற்கிறது.
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் ஏறிச்செல்ல ஒரு வாகனம் கேட்டார். அதற்கு நபியவர்கள் உம்மை ஒட்டகத்தின் குட்டியின் மீது ஏற்றிவிடுகிறேன் என்றார்கள். அதற்கு அம்மனிதர் இறைதூதர் அவர்களே! ஒட்டகக்குட்டியை வைத்து நான் என்ன செய்வது? என்று கேட்டதற்க்கு எந்த ஒட்டகமும் தாய் ஒட்டகத்தின் குட்டித்தானே என்றார்கள் (புன்னகை பூக்க).
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: அபூதாவூத், திர்மிதி).
மார்க்கம் தரும் வரப்பிரசாதம்
உனது சகோதரனை மலர்ந்த முகத்துடன் நீ சந்திப்பதும் தர்மமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் (ரலி), ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (திர்மிதி 2022, 2037).
இவ்வாறு கூறும் உன்னத மார்க்கம் உலகில் இஸ்லாத்தை தவிர வேறெதுவும் இல்லை.
கண்ணியப் பார்வை
சிரிக்க காசு கேட்கும் சிடுமூஞ்சியாகவும் இல்லாமல், எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும் இளிச்சவாயனாகவும் இல்லாமல் நடுநிலையோடு சிரிப்பதையே (புன்னகை) மார்க்கம் வலியுறுத்துகிறது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு போதும் ஒரேயடியாக தமது உள் நாக்குத் தெரியும் அளவுக்கு சிரிக்க நான் கண்டதில்லை. அவர்கள் (பெரும்பாலும்) புன்னகை புரிபவர்களாகவே இருந்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி
புன்னகையாய் எதிர்கொள்ளல்
பிரச்சனைகளை ஏன் போர்க்களத்தை கூட புன் சிரிப்புடன் தான் எதிர்கொள்வார்கள் நபி (ஸல்) அவர்கள் (ஆதாரம்: புகாரி)
அறிஞர்கள் தரப்புச் சிரிப்பு
அழகின் சிரிப்பு என்றான் பாரதிதாசன்.
துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... என்றான் வள்ளுவநேசன்.
சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே... என்றான் கண்ணதாசன்.
சிரிப்பு பாதி அழுகை பாதி சேர்ந்ததல்லவா மனித ஜாதி... என்றான் பொதுவுடைமை கவிஞன்.
வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போச்சு... என்றான் தமிழ் மூதறிஞன்.
இறைவனின் சிரிப்பு
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபு ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: அல்லாஹ் இரண்டு மனிதர்களைப் பார்த்து சிரிக்கிறான். அவ்விருவரில் ஒருவர் மற்றொருவரைக் கொன்றுவிடுகின்றார். இருவருமே சொர்க்கத்தில் நுழைகின்றார்கள் (எப்படி) முதலாமவர் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு கொல்லப்படுகின்றார். பிறகு (அவரைக்) கொன்றவர் பாவமன்னிப்புக் கோர அதை ஏற்று அவரை அல்லாஹ் மன்னித்து விடுகின்றான். பிறகு அவரும் அறப்போரில் (கொல்லப்பட்டு) உயிர் தியாகியாகி விடுகின்றார். (ஆதாரம்: புகாரி எண் 2826).
உஹது போரில் ஸயீத் பின் ஆஸ் (ரலி) அவர்களின் மகன் அஃபான் என்பார் எதிரிகளின் அணியில் இருந்தார். போரில் நுஃபான் பின் கவ்கல் (ரலி) என்ற முஸ்லிமை அவர் கொலை செய்து விட்டார். இவர் பிறகு இஸ்லாத்தில் இணைந்தார். பின்பு அறப்போரில் கொல்லப்பட்டு உயிர்த் தியாகியாகி விட்டார்.
No comments:
Post a Comment