பிளஸ் 2-க்கு பிறகு 5 வருட முதுகலைப் பட்டப்படிப்பு : சென்னைப் பல்கலை. அறிமுகம்
பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த 5 வருட முதுகலைப் பட்டப்படிப்பு தொடங்கப்படவுள்ளது.
இந்த ஐந்து ஆண்டுகளுக்கு இடையில் படிப்பை நிறுத்தினால், அதற்கேற்ப சான்றிதழ் வழங்கப்படும் என்பது சிறப்பம்சம்.
ஒருங்கிணைந்த 5 வருட முதுகலைப் பட்டப்படிப்பு குறித்து சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.ராமச்சந்திரன் கூறியது:
"பிளஸ்-2 முடித்த மாணவர்கள் நலன் கருதி சென்னை பல்கலைக்கழகத்தில் 5 வருட ஒருங்கிணைந்த முதுகலை பட்டப்படிப்பு இந்த வருடம் தொடங்கப்படவுள்ளது. எம்.ஏ. மானுடவியல், எம்.ஏ. நவீன மேம்பாட்டு (போஸ்ட் மாடர்ன் டெவலப்மென்ட் அட்மினிஸ்ட்ரேசன்) நிர்வாகம், எம்.ஏ. பிரெஞ்சு ஆகியவையும் எம்.எஸ்சி. வாழ்க்கை அறிவியல் படிப்பும் தொடங்கப்படவுள்ளன. இவற்றில் தலா 20 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். அதிகமானோர் விண்ணப்பித்தால் நுழைவுத்தேர்வு நடத்தப்படும்.
இந்த படிப்புகளில் மாணவர்கள் ஒரு வருடத்தில் நின்றால் சான்றிதழ், 2 வருடத்தில் நின்றால் டிப்ளமோ, 3 வருடத்தில் நின்றால் பட்டம், 4 வருடத்தில் நின்றால் முதுகலை டிப்ளமோ, 5 வருடம் படித்து தேர்ச்சி பெற்றால் முதுகலை பட்டம் வழங்கப்படும்.
இவற்றில் எம்.எஸ்சி. படிப்புக்கு மட்டும் அவ்வாறு சான்றிதழ் கிடையாது. 3 வருடம் படித்தால்தான் பட்டமும், 5 வருடம் முடித்தால் முதுகலைப்பட்டமும் கிடைக்கும். இதற்கு கட்டணம் ஆண்டுக்கு ரூ.4, 500 மட்டுமே," என்றார் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.ராமச்சந்திரன்.
மேலும், "இந்தப் படிப்புகள் தவிர எம்.எஸ்சி. கடல் சார் அறிவியல் தொழில்நுட்பம் படிப்பும், எம்.எஸ்சி. சுற்றுச்சூழல் அறிவியல் படிப்பும் தொடங்கப்படவுள்ளது.
சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் அங்கீகார கல்லூரிகளில் 250 படிப்புகள் உள்ளன. மாணவர்கள் அவர்களின் திறனுக்கு ஏற்ப சரியான பாடங்களை தேர்ந்து எடுத்து நன்றாக படித்தால் வேலைவாய்ப்பு உறுதி.
மாணவர்கள் நலன் கருதி கல்விக் கண்காட்சி சென்னை பல்கலைக்கழகத்தில் 23 மற்றும் 24 தேதிகளில் நடத்தப்படவுள்ளன," என்று அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment