அல்லாஹ்வின் உதவிப்படை
அர்ரஹ்மானைத் தவிர உங்களுக்கு (உதவிப்) படையாக இருந்து உங்களுக்கு உதவி செய்கின்றவர் யார்?
அல்குர்ஆன் 67:20
“ஸுரத்துல் முல்க்” என்ற அத்தியாயம் இறைவனது ஆட்சியின் வல்லமையை விவரிக்கிறது. ஓர் உருதுக் கவிஞன் நான் இவ்வுலகை வலம் வந்தேன். இவ்வுலகம் அழகானது. அருமையானது. நேர்த்தியானது. ஆனாலும் கவலையற்ற ஒரு மனிதனையும் நான் காணவில்லை என்று கூறுகிறான். வயிற்றுக்குச் சோறில்லை. கூழுக்கு உப்பில்லை என வறுமையில் வாடுபவரும் மூக்கு முட்ட சாப்பிட்டதால் வயிற்றுக்குச் சரியில்லை, பாலுக்குச் சர்க்கரை இல்லை என வருந்துவோரும் உலகத்தில் இல்லாமலில்லை. பெருந் துன்பங்கள் இழப்புகள் சோதனைகள் ஏற்படும்போது மனிதன் துவண்டு விடுவதுண்டு. தன்னிலை இழந்து தவிப்பதுமுண்டு. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. இறைவன் தாங்க முடியாத சுமையை மனிதன் மீது சுமத்துவதில்லை. மாறாக அவனை முழுமையாக நம்பும் நல்லடியாருக்கு அவன் பல வழிகளில் உதவி செய்கிறான் என்பதை உணர்ந்து கொண்டு தன்னம்பிக்கையோடு செயல்பட்டு, விடாது தொடர் முயற்சி மேற்கொள்ளும் போது அவன் உதவியாக இருந்து வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்கிறான் என்பதே இவ்வசனத்தின் உட்கருத்தாகும்.
வானம் பூமி அனைத்தையும் படைத்து மனிதனுக்கு வசமாக்கிக் கொடுத்தவன் யார்? புசிக்க ஆகாரம், அருந்த நீர், சுவாசிக்க காற்று, மிகுந்த ஞானம் இவற்றை அளித்தவன் யார்? மனிதன்பால் மிக்க அருளும் அன்பும் கொண்ட அல்லாஹுத்தஆலா அன்றோ? மனிதனின் வேதனையின் போதும் சோதனையின் போதும் உதவுபவனாக அவனின்றி யாருளர்? என ஆணித்தரமாக வினாக்கள் எழுப்பி அவற்றிற்கு விடையளிக்கும் வகையில் இவ்வசனத்தை இறக்கியருளினான். அல்லாஹ்வின் உதவிப்படைகளைப் பெற நம்மை நாம் தகுதியாக்கிக் கொள்வது நம் கடமை.
நன்றி : நர்கிஸ் ( டிசம்பர் 2008 )
No comments:
Post a Comment