”ஓட்டு” களுக்காக இறையருளை இழக்க வேண்டாம் !
தமுமுகவினருக்கு கீழை ஜஹாங்கீர் அரூஸி வேண்டுகோள்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பொது செயலாளர் மற்றும் தொண்டர்களுக்கு மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி சலாத்துடன் எழுதிக் கொள்வது. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இம்மடல் காணும் உங்கள் அனைவரின் மீதும் சமாதானம் நிலவிட துஆ செய்கிறேன்.கடந்த 16 ஆண்டுகளாக தங்கள் இயக்கத்தின் சார்பில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் மருத்துவ முகாம், இரத்ததான முகாம், ஆம்புலன்ஸ் சேவை போன்ற பொது சேவைகளை சாதி, மதம் வேறுபாடு இல்லாமல் செய்து வருவதை எல்லோரும் நன்கறிவோம். இச்சேவைகளுக்கான நற்கூலி நாளை மறுமையில் கிடைக்கும். என்ற நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புடனும் தான் தாங்கள் செய்திருப்பீர்கள் என திடமாக நம்பிக் கொண்டிருக்கிறோம். இது தான் உண்மையென்றால் அனைவருக்கும் சந்தோஷமே! மனிதன் செய்யும் ஒவ்வொரு அமல்களுக்கும் நிச்சயமாக கூலி வழங்குபவன் அல்லாஹ் ஒருவனே! அதற்குரிய நற்கூலியை நாளை மறுமையில் வழங்கப்படும் போது நல் அமல்களில் ஈடுபட்ட மனிதர்களின் முகத்தில் ஏற்படும் சந்தோஷத்திற்கு அளவே இருக்காது ! இதையெல்லாம் உணர்ந்து தான் தாங்கள் பகிரங்கமாகவே அரசியலுக்கு வர மாட்டோம் இது அல்லாஹ்வின் மீது சத்தியம் ! என்று பிரகடனம் செய்தீர்கள். ஒருவேளை மனம் மாறி அரசியலுக்கு வந்து விட்டால் இதற்காகத்தான் தமுமுகவினர் இரத்ததான முகாம், ஆம்புலன்ஸ் போன்ற சேவைகளை செய்திருக்கின்றனர். என்ற எண்ணம் பொது மக்களிடம் ஏற்பட்டு நாளை மறுமையில் இறைவனின் அருள் கிடைக்காமல் போய் விடலாம் என்ற அச்சத்தின் விளைவாகத் தானே நீங்கள் ஆயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் அறிவித்த அரசியலுக்கு வர மாட்டோம் இது அல்லாஹ் மீதாணை என்ற சத்தியம். அந்த நேரத்தில் உங்களது குரலில் இருந்த வீரியத்தை வர்ணிக்க வார்த்தை கிடையாது ! ஆனால் இன்றோ, அந்த சத்தியம் என்னாயிற்று? ஏன் சத்தியத்தை முறித்தீர்கள்? ஒரு முஸ்லிம் சத்தியத்தை முறிக்க நினைத்தால் அதற்கான பரிகாரத்தை நிறைவேற்றிய பின்னரே சத்தியத்தை முறித்ததற்கான காரண காரியங்களில் ஈடுபட வேண்டும் என்ற அல்குர்ஆனின் வசனத்தை படித்துப் பாருங்கள். குர்ஆனின் அடிப்படையில் வாழ வேண்டிய நீங்கள் உங்களது சத்திய முறிவுக்கான பரிகாரத்தை நிறைவேற்றினீர்களா? இதை நீங்கள் மட்டுமல்ல உங்கள் சத்திய பிரகடனத்தை ஏற்றுக் கொண்ட ஒவ்வொரு தொண்டரும் பரிகாரத்தை நிறைவேற்ற வேண்டும். சத்தியத்தை முறிப்பது பாவம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் முறித்த சத்தியத்திற்கான பரிகாரத்தை செய்யாமல் இருப்பது மிகப்பெரிய பாவம் என்பதும் உங்களுக்கு தெரியாமல் இருக்காது ! உங்களின் சத்திய முறிவுக்கான பரிகாரத்தை இதோ அல்குர்ஆன் கூறுகிறது பாருங்கள்! ஏதாவதொன்றை உறுதிபடுத்து வதற்காகச் செய்யும் சத்தியத்திற்காக (அவற்றில் தவறினால்) அல்லாஹ் உங்களை பிடிப்பான். எனவே (சத்தியத்தை முறித்தால்) அதனுடைய பரிகாரமாவது உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் உணவில் நடுத்தரமானதிலிருந்து பத்து ஏழைகளுக்கு உணவளிப்பதாக இருக்கும். அல்லது பத்து ஏழைகளுக்கு உடுத்த உடை கொடுப்பதாயிருக்கும். அல்லது ஓர் அடிமையை உரிமை விடுவதாயிருக்கும். ஆனால் எவர் இம்மூன்றில் எதனையும் செய்ய சக்தி பெற்றுக் கொள்ளவில்லையோ? அப்போது மூன்று நாட்கள் நோன்பு (வைப்பது பரிகாரம் ஆகும்) இது தான் உங்களுடைய சத்தியங்களுக்கு அவற்றை நீங்கள் முறித்தால் பரிகாரமாகும். ஆகவே உங்களுடைய சத்தியங்களைப் பேணி காத்துக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 5:89) இவ்வளவு பெரிய விஷயத்தை சடாரென உதறிவிட்டு நாளை மறுமையின் விளைவுகளை பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் இவ்வுலக அரசியல் பதவிகளுக்காக ஆசைப்பட்டு இறையருளை இழக்க துணிந்திருப்பது எவ்வகையில் நியாயம்? இதை உங்களில் ஒருவன் என்ற சகோதர உரிமையோடு கேட்கிறேன். அரசியல் என்னும் சாக்கடைக்குள் மூழ்கியதும் உங்களின் அணுகுமுறைகளை கொஞ்சம் யோசித்து பார்த்தீர்களா? உங்களது 16 வருட பொது சேவைக்குரிய நற்கூலி வெறும் ஒரேயொரு சீட் ஒதுக்கீடு மட்டுமே! இப்போது அதற்கும் வழி இல்லாமல் போய் விட்டது. நான் கூறுவது நீங்கள் எடுத்த திமுகவுடனான கூட்டணி பேச்சு வார்த்தையைப் பற்றி! உங்களின் கண்ணியத்தையும், செல்வாக்கையும் திரைப்பட நடிகர் சரத்குமாரிடம் நீங்கள் நடத்திய கூட்டணி பேச்சு வார்த்தையின் போதே தமிழக முஸ்லிம் சமுதாயம் நன்கு தெரிந்து கொண்டது! உங்கள் கட்சியின் வலிமையை தெரிந்து கொண்ட சரத்குமார் உங்களுடன் கூட்டணியே வேண்டாமென்று தலை தெறிக்க ஓடியதையும் மக்கள் நன்கறிவர். இவ்வளவு அவமானங்களும் உங்களுக்கு ஏன் எதனால் ஏற்பட்டது? இறைவன் மீது செய்த சத்தியத்தை கேவலம் அரசியலுக்காக முறித்துக் கொண்டதால் வந்த வினையால் தான்! தமுமுகவினரின் பொது சேவைக்குரிய நற்கூலியை அரசியல் மூலம் பெறுவதைவிட நாளை மறுமையில் இறைவனிடம் பெறுவதுதான் உயர்வு! இப்போதும் கெட்டு விடவில்லை உடனடியாக உங்கள் கட்சியை கலைத்து விட்டு நீங்கள் செய்த சத்தியத்திற்கு உயிர் கொடுக்கும் வகையில் தேர்தலில் இருந்து விலகி கொள்ளுங்கள். மீண்டும் தமுமுகவின் மூலமே பொது சேவைகளுக்கு முன்னுரிமை கொடுப்போம் என்ற லட்சியப் பயணத்தை தொடருங்கள். அரசியல் எனும் சாக்கடைக்காக இறையருளை இழக்க வேண்டாம் என மிகவும் அன்புடனும் அக்கறையுடனும் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி
துபை
No comments:
Post a Comment