ராமநாதபுரம் தமிழ்ச் சங்க முப்பெரும் விழா
ராமநாதபுரம், மே 31: ராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் தின விழா, மாவட்ட நூற்றாண்டு துவக்க விழா, நகராட்சி பொன்விழா ஆண்டு நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் ஆர். வாசுகி தலைமை வகித்து தமிழ்ச் சங்க நூலகத்தின் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்துப் பேசினார்.
ராமநாதபுரம் நகர்மன்றத் தலைவர் ஆர். லலிதகலா ரெத்தினம் முன்னிலை வகித்தார். சங்கச் செயலர் சந்திரசேகரன் வரவேற்றார்.
தமிழ்ச் சங்க நிறுவனர் எஸ்.எம். கமாலின் உருவப் படத்தை தொழிலதிபர் எம். காதர் மைதீன் திறந்து வைத்தார்.
நிறுவனரின் நினைவுகள் குறித்து கவிஞர் நா. வேலுச்சாமி துரை, எம்.எம்.எஸ். செய்யது இப்ராஹிம், இல. நடராஜன் ஆகியோர் பேசினார்கள்.
நூறாண்டுகள் கண்ட மாவட்டம் என்ற தலைப்பில் தமிழ்ச் சங்க துணைத் தலைவர் எம்.எஸ்.கருணாநிதி, மூத்த பத்திரிகையாளர் எம்.எஸ். அல்லாபாக்ஸ், பொன் விழா கண்ட நகராட்சி என்ற தலைப்பில் அ. அன்வர்தீன் ஆகியோர் பேசினர்.
விழாவில் தமிழ்ச் சங்க வளர்ச்சிக்கு நக்கீரன் கோபால் ரூ. 25,000 நன்கொடையாக வழங்கியதுடன் குற்றம் குற்றமே என்ற தலைப்பில் பேசினார்.
இலக்கிய இன்பம் என்ற தலைப்பில் கவிஞர் தெய்வச்சிலை பேசினார். விழா ஏற்பாடுகளை சங்கத் தலைவர் அப்துல்சலாம், துணைத் தலைவர் விவேகானந்தன், செயலர் சந்திரசேகரன், பொருளாளர் சுந்தர மூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.
விழாவில் தலைமை ஆசிரியை காளீஸ்வரி, விபத்து மீட்புச் சங்க தலைவர் தேவசேனாதிபதி, சங்க துணைத் தலைவர் கு. விவேகானந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment