Tuesday, June 23, 2009

பெற்றோர்கள் சிந்தனைக்கு … சில துளிகள் !

பெற்றோர்கள் சிந்தனைக்கு … சில துளிகள் !

வழக்கறிஞர் உதுமான் மைதீன்

கல்வி

கல்வியின் முக்கியத்துவம் பற்றி அறியாதவர்கள் அகிலத்தில் மிக அரிது. பொதுவாக அனைத்து நாடுகளிலும் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இஸ்லாமும் கல்வி கற்பது ஆண் – பெண் ஆகிய இருபாலருக்கும் கட்டாயக் கடமை என்கிறது. தற்போது கல்வியைக் காசு கொடுத்து வாங்கக் கூடிய அளவில் ஒவ்வொரு கல்விக்குமென தனித் தனியான மதிப்பீடுகளை அரசாங்கமும் நிர்ணயித்துள்ளது. அது போன்றே காசுக்காக பட்டங்கள் வழங்கவும் பல்வேறு பல்கலைக்கழகங்களும் தோன்றியுள்ளன. இவ்வாறு அரசும், தனியார் நிறுவனங்களும் கல்வியைத் தாராளமயமாக்கி விட்டதால் கற்றவர்களின் எண்ணிக்கையும் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கின்றன.

யார் மீது குற்றம்?

கல்லாதவர்களைக் காட்டுமிராண்டிகள் என்றும், கல்வி மனிதனை மேம்படுத்தும் என்றும் காலம்காலமாய்ச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் கற்றவர்கள் நிரம்பி விட்ட இக்காலத்தில் கற்காலத்தை விடவும் தீமைகள் பெருகிக் கொண்டல்லவா இருக்கின்றன.
மது – போதை போன்றவை அதிகரித்து, இலஞ்சம், வழிப்பறி, வன்முறை, கலப்படம், கொலை – கொள்ளை- ஆபாசம் ஆகிய கொடுமைகள் அதிகரித்துக் கொண்டல்லவா இருக்கின்றன. அதிலும் இது போன்ற செயல்களில் கற்றவர்களும் அதிகமாக ஈடுபடுகிறார்கள் என்பதுதான் உச்சக்கட்ட வேதனை. கல்வி ஏன் மனிதனை நல்வழிப்படுத்தவில்லை என்ற எண்ணமும் நம் நெஞ்சங்களில் எழுகின்றது.

இது கல்வியின் மேலுள்ள குற்றமா?

கல்வி கற்றவர்கள் மேலுள்ள குற்றமா?

கற்பித்தவர்கள் மீதுள்ள குற்றமா?

என்பது பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாய காலகட்டத்தில் உள்ளோம்.



அக்கால கல்விமுறை

நமது நாட்டை எடுத்துக் கொண்டால் அக்கால குருகுலக் கல்விமுறை உயர்குல மக்களை மட்டுமாவது நல்வழிப் படுத்த உதவியது எனலாம். ஒரு குருவை – ஆசிரியரைத் தங்களது வழிகாட்டியாக எடுத்துக் கொண்டு அவரிடம் கல்வி கற்கும் மாணவர்கள் அனைவரும் குருவையே தங்கள் முன் மாதிரியாக கொள்வார்கள். படிப்புடன் பல்வேறு கலைகளையும் – வாழ்க்கை நுணுக்கங்களையும் கற்றார்கள். அடுத்து முகலாய ஆட்சியின் போது ‘மத்ரஸா’ கல்விமுறை பின்பற்றப்பட்டது. இதில் எல்லா மாணவர்களும் கல்வி கற்க முடிந்தது. இதிலும் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் – (உஸ்தாது) நன்னெறி மிக்கவராகவே இருப்பதால் அவரிடம் கல்வி கற்கும் மாணவர்களும் அவரையே தங்கள் முன்மாதிரியாகக் கொண்டு தங்கள் பழக்கவழக்கங்களையும் அமைத்துக் கொண்டார்கள். மத்ரஸாக்களில் கணிதம், விஞ்ஞானம், மருத்துவம், புவியியல், வானவியல் மற்றும் தர்க்கவியல் போன்ற பாடங்களும் கற்பிக்கப்பட்டு வந்தன.

மெக்காலேயின் கல்வி

மேற்சொன்ன இரு காலகட்டங்களிலும் கற்றவர்களில் மிகப் பெரும்பான்மையோர் நன்னெறி மிக்கவர்களாகவே இருந்தனர். ஆனால் ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்ட போது அடிமைகளுக்கென ஒரு கல்வித்திட்டம் அப்போதைய லார்ட் மெக்காலேயால் உருவாக்கப்பட்டது. ஆனால் நம்நாடு சுதந்திரம் பெற்ற பின்னரும் அக்கால – மெக்காலேயின் கல்வித்திட்டத்தைத்தான் நாமும் பின்பற்றினோம். இந்தக் கல்வித்திட்டத்தில் மனித நன்னெறிகளுக்கான எத்தகைய வழிகாட்டல்களும் இல்லை. மனிதன் யார்? அவன் எதற்காகப் படைக்கப்பட்டுள்ளான்? அவன் மரணத்திற்குப் பின் எங்கு செல்வான்? இவ்வுலகில் மனிதன் செய்ய வேண்டிய நற்கருமங்கள் என்னென்ன? போன்ற எந்த நல் வழிகாட்டல்களும் இல்லை. மனித வளத்தின் மேம்பாடு பற்றி சிந்திக்கவேயில்லை. வெறும் கல்வியுடன் மட்டும் தனது கடமையை அந்தக் கல்வித்திட்டம் நிறுத்திக் கொண்டதால் மாணவர்களின் குணநல மாண்புகள் படிப் படியாக தரம் இறங்கி ஒருகால கட்டத்தில் ’கண்டதே காட்சி கொண்டதே கோலம்’ என்ற அளவில் தங்கள் மனம் போன போக்கில் மாணவர்கள் நடக்க முற்பட்டு விட்டனர். மேற்கத்திய பண்பாட்டுச் சீரழிவுகளிலும் சிக்க ஆரம்பித்து விட்டனர். ஒரு நாட்டின் மிகச்சிறந்த மனித வளமாக முதுகெலும்பாக இருக்க வேண்டிய இளைய சமுதாயம் எவ்வித நெறிமுறைகளுக்கும் மதபோதனைகளுக்கும் கட்டுப் படாமல் தன்னிச்சையாக மனம் போன போக்கில் வரம்பற்ற சுதந்திரமாகத் திரிய ஆரம்பித்து விட்டதன் விளைவுகளைத் தான் தற்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். கல்வி அவர்களுக்குத் தேவையான நேரத்தில் கடிவாளமிட்டு அவர்களை நேர்வழியில் செலுத்தத் தவறியதால் தறிகெட்டுப் பாயும் காளைகளைப் போல் இளைய சமுதாயம் சீர்கேடு களில் சிக்கித் தவிக்க ஆரம்பித்து விட்டது.


நெறிகெட்ட கல்வியின் விளைவுகள்

இதன் விளைவாகத்தான் நம் நாட்டிலும் டிஸ்கோத்தே, காபரே கிளப்புகள், சூதாட்ட விடுதிகள், ஆபாச அரங்குகள், வன்முறை, மனிதநேயமற்ற செயல்முறைகள், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் முறைகள், கந்து வட்டிக் கடைகள், மது அடிமைகளை உருவாக்கும் மதுபான பார்கள், கஞ்சா – அபின் – ஹெராயின் போன்ற போதை வகைகள், கொலை செய்யும் கூலிப்படைகள், திருடர்கள், கொள்ளையர் களின் சாம்ராஜ்யங்கள், கள்ள நோட்டுக் கும்பல்கள், வெடிகுண்டு கலாச்சாரங்கள் ஆகியன படிப்படியாகப் பெருக ஆரம்பித்தன. இவற்றை பெரிய திரைகளிலும், சின்னத்திரை களிலும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி பட்டி – தொட்டி களிலுள்ள பாமர மக்களுக்கும் இந்தத் தீமைகளைக் கொண்டு சேர்ந்த பெருமை நிச்சயமாக திரைப் படங்களையும் தொலைக்காட்சிகளையும் தான் சேரும்


இளைய சமுதாயம்

தீமைகளை மட்டும் சொல்லி விட்டு தீர்வைச் சொல்லா விட்டால் பயனேதும் இல்லை. இவற்றிலிருந்து மீள்வதற்கான தீர்வுதான் என்ன? சென்று விட்ட சமுதாயத்தைப் பற்றி சிந்தித்துப் பயன் இல்லை. இப்போது இருக்கின்ற சமுதாயத்தை நெறிமுறைப்படுத்த நாட்கள் பல ஆகலாம். அல்லது நாம் நினைப்பது போல் நடக்காமலும் போகலாம். ஆனால் இனி வரும் இளைய சமுதாயத்தை – வருங்கால சமுதாயத்தை வார்த்தெடுக்கின்ற பணிகளை நாம் மேற்கொண்டால் நிச்சயமாக அதுவே நமக்கு மிகவும் நன்மை பயப்பதாக அமையும்.

தீர்வு என்ன?

தற்போது நம்மில் பலரும் நமது குழந்தைகளின் எதிர்காலம் பற்றி சிந்திக்கும் போது அவர்களை என்ன படிக்க வைக்கலாம்? அதற்கென எந்தக் கல்வி நிலையத்தைத் தேர்வு செய்யலாம்? என்பதை மட்டும்தான் எண்ணுகிறோம். ஆனால் எந்தக்கல்வி நிலையம் என்பதைத் தேர்ந்தெடுப்பது தான் மிகவும் முக்கியமானது. பலமாடிக் கட்டிடங்களையும் நுனிநாக்கு ஆங்கிலத்தையும் அதிகமான கல்விக் கட்டணத்தையும் மட்டுமே நல்ல கல்விக் கூடத்துக்கான அளவு கோல்கள் என்று எடுத்துக் கொண்டால் அதுவே நாம் செய்யும் மிகப் பெரிய தவறாகவும் அமைந்து விடலாம். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் நம்மில் பலர், குழந்தைகளுக்கான நேர்த்தியான உடைகள், பெல்ட், டை, ஷூ- ஷாக்ஸ், புத்தகப்பை – டிபன் பாக்ஸ் போன்றவற்றைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள கவனத்தைக்கூட தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை ஒப்படைக்கும் கல்வி நிலையத்தைத் தேர்வு செய்வதில் எடுப்பதில்லை என்றுதான் கூற வேண்டும். கல்வியை மட்டுமே கருத்தில் கொள்ளும் போது வாழ்க்கை நெறிமுறைகள், பண்பாடுகள், கண்ணியம் போன்ற பலவும் காணாமல் போய் விடுகின்றன. பின்னர் பல பட்டங்களுடன் கூடிய தனது வாரிசுகள் குடிகாரனாகவோ, வன்முறையாளனாகவோ மாறும் போதுதான் பெற்றோர்கள் மனம் பதைபதைக்கிறது. உள்ளம் உதிரத்தைக் கொட்டுகிறது. குதிரை ஓடிய பிறகு லாயத்தை மூடி என்ன பயன்? அது போல்தான் இவர்களது கதையும் எல்லாம் முடிந்தபின் என்ன செய்ய முடியும்? பல மெத்தப்படித்த மேதாவிப் பெற்றோர்களின் நிலையும் இதுதான்.

நெறிசார்ந்த கல்வி

எனவே இன்றைய தேவை நெறிசார்ந்த கல்வியாகும்.(value Based Education) ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை கல்வி நிலையங்களில் சேர்க்கும் போது அவர்களது எதிர்காலத்தையும் அங்கு அடைக்கலப் பொருளாகக் கொடுக்கிறார்கள். எனவே கல்வி நிலையத்தைத் தேர்வு செய்யும்போது கீழ்க்கண்டவற்றை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.
கல்வி தரமானதாக இருக்க வேண்டும். கல்வியுடன் குழந்தைகளுக்கு நன்னெறி போதனைகளையும் நல்ல பண்புள்ள பழக்கவழக்கங்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும். அந்தக் கல்வி நிலையங்கள் காசு ஒன்றினை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பிஞ்சுக் குழந்தைகளின் உள்ளங்கள் நஞ்சுகள் கலந்து விடாமல் பாதுகாத்து அவர்களை நல்லவர் களாக்குவதற்கான தார்மிகப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். இன்று மாணவர்களுக்கான முன்மாதிரி அரிதாக இருக்கிறது. அதனால் ஆசிரியர்களே தியாக உணர்வுடன் நேர்மையாகச் செயல்பட்டு மாணவர்களுக்கு மாடல்களாக விளங்க வேண்டும். அத்தகைய அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களை அதிக ஊதியம் கொடுத்தேனும் கல்வி நிலைய நிர்வாகிகள் பணியில் அமர்த்த வேண்டும். அது போன்ற கல்வி நிலையங்களால் மட்டுமே மாணவர்களுக்குத் தரமான கல்வி கற்பிப்பதுடன் நற்போதனை வகுப்புகளையும் நடத்தி தீமைகளிலிருந்து அவர்களைத் தடுத்து நல்லவர் களாக நாட்டின் நற்குடிமக்களாக பெற்றோரைப் பேணுபவர் களாக சுற்றத்தாரை மதிப்பவர்களாக அண்டை அயலாருடன் அன்புடன் பழகுபவர்களாக உருவாக்க முடியும்.

இஸ்லாமிய மாதிரிப் பள்ளி

மேற்சொன்ன கருத்துகள் வெறும் பேச்சுகள் அல்லது ஆலோசனைகள் மட்டும் அல்ல. செயல்வடிவங்கள். இது போன்ற எண்ணங்கள் ஏக்கங்களுடன் 1993 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் – திருவிதாங்கோடு எனும் ஊரில் இஸ்லாமிய மாதிரிப் பள்ளி (Islamic Model School) எனும் மெட்ரிக்குலேஷன் பள்ளியை ஒரு சோதனைக்காக ஆரம்பித்தோம். இன்று இறைவன் அருளால் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ – மாணவியருடன் சுமார் 60 ஆசிரியை களையும் கொண்ட ஒரு சிறந்த பள்ளியாக அது திகழ்கிறது. மாணவ – மாணவிகளுக்கு சிறப்பானதொரு அடித்தளத்தினை பாலர் பள்ளி முதல் பத்தாம் வகுப்பு வரை அமைத்துக் கொடுத்ததால் கல்வித் தரத்தில் சிறந்தவர்களாக கல்வி மாவட்டத்தின் 1வது 2வது மற்றும் 3வது இடங்களையும் அரசு மெட்ரிக் தேர்வில் ஒருங்கே பெற்று வரலாற்றுச் சாதனை படைத்தனர். வெறும் மதிப்பெண்களுடன் மட்டும் நின்று விடாது கலை, விளையாட்டுப்போட்டிகள், பேச்சு, கட்டுரை, கவிதை, வினாடி – வினா போன்ற திறனாய்வுப் போட்டிகளிலும் மாவட்ட அளவில் பல்வேறு பரிசுகளையும் மாநில அளவில் பரிசுகளையும் பெற்றனர். இவற்றைப் பெருமையாக பறைசாற்றவில்லை. ஏன் என்றால் இன்னும் பல பள்ளிகளும் இதுபோன்ற சாதனைகளை நிகழ்த்தி யிருக்கலாம். ஆனால் இங்கு 10 ஆம் வகுப்பு படித்து விட்டு வெளியே சென்ற மாணவர்களில் சிலர் பட்டங்கள் பெற்று பதவிகளில் உள்ளார்கள். இன்னும் பலர் பல்வேறு கல்லூரி களில் உயர்கல்வி கற்று வருகிறார்கள். ஆனால் எல்லா இடங்களிலும் நல்ல மாணவர்கள் என்று பலராலும் பாராட்டப்படுகிறார்கள். அதற்குக் காரணம் இந்தப் பள்ளியில் அவர்கள் நல்ல மாணவர்களாக வளர்க்கப்பட்டதுதான். மாணவ – மாணவிகள் அனைவருமே மது – போதை, வட்டி – வரதட்சணை, லஞ்சம், ஏமாற்று, திருட்டு போன்ற எந்த தீமைகளின் பக்கமும் செல்லாதவர்களாகவும், வன்முறை, பொதுச் சொத்துக்களுக்குத் தீங்கிழைத்தல் போன்றவற்றில் ஈடுபடாத பண்பாளர்களாகவும் விளங்கு கிறார்கள்.

இவர்களைப் போன்ற மாணவர்களை எல்லா பள்ளிக் கூடங்களுமே உருவாக்கி விட்டால் நிச்சயமாக இன்னும் குறுகிய காலத்தில் மகத்தானதொரு மறுமலர்ச்சியை எதிர் பார்க்கலாம். எங்கள் மாதிரிப்பள்ளியைப் பின்தொடர்ந்து குமரி மாவட்டத்தில் இன்னும் மூன்று பள்ளிகளும் தமிழக மெங்கும் பல இடங்களிலும் இதுபோன்ற பள்ளிகள் உருவாக்கப்பட்டு நல்ல மாணவர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். தற்போது சிவகங்கை மாவட்டம் – இளையான்குடியில் 5 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இக்ரா மெட்ரிக்குலேஷன் பள்ளியும் நன்மக்களை உருவாக்கிடும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வெற்றியும் பெற்று வருகிறது.

இன்றைய உங்கள் குழந்தைகள்

நாளைய நமது சமுதாயம்

அவர்களை நன்மக்களாக வளர்க்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு என்பதை நினைவில் கொண்டு நல்ல கல்வி நிலையத்தில் அவர்களை சேர்ப்பதைக் கடமை யாகக் கொள்ளுங்கள்.

(மாதிரிப் பள்ளிகள் அமைக்க அல்லது இருக்கின்ற பள்ளிகளை இது போன்ற நன்னெறி மிக்க சமுதாயத்தை உருவாக்கும் பள்ளியாக மாற்ற ஆலோசனைகள் பெற விரும்புபவர்கள் கட்டுரையாளருடன் தொடர்பு கொள்ளலாம். அலைப்பேசி: 94431 17984)

நன்றி : சமரசம் மாதமிருமுறை ( 16 – 31 ஜுன் 2009 )

No comments: