Thursday, August 20, 2009

ஜின்னா-என்ன தான் சொல்கிறார் ஜஸ்வந்த்?

ஜின்னா-என்ன தான் சொல்கிறார் ஜஸ்வந்த்?

http://thatstamil.oneindia.in/news/2009/08/19/india-dont-regret-writing-book-on-jinnah-jaswanth.html


இந்தியாவும், இந்தியர்களும் முழுமையாகவே ஜின்னா குறித்து தவறான கருத்தை வைத்துக் கொண்டிருக்கிறோம். யாராவது ஒருவர் மீது பழியைப் போட வேண்டுமே என்பதற்காக ஜின்னாவை பழித்துக் கொண்டிருக்கிறோம். இது தவறானது என்று பாஜகவலிருந்து நீக்கப்பட்ட ஜஸ்வந்த் சிங் கூறியுள்ளார்.

நேற்று சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியில் கரன் தாப்பரின் 'டெவில்ஸ் அட்வகேட்' நிகழ்ச்சியில் ஜஸ்வந்த் சிங் அளித்துள்ள பேட்டியின் சில முக்கிய பகுதிகள்...

ஜின்னா சுதந்திர இந்தியாவுக்காக இங்கிலாந்து ஆட்சியாளர்களை எதிர்த்து தீவிரவமாக போராடியவர். அதேசமயம், இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் நலனுக்காகவும் போராடினார். அதற்காக இந்துக்களை ஜின்னா ஒருபோதும் வெறுத்ததில்லை.

அவர் ஒருபோதும் இந்துக்கள் மீது துவேஷம் கொள்ளவே இல்லை. காங்கிரஸ் கட்சியுடன் மட்டுமே அவருக்கு கருத்து வேறுபாடு இருந்தது. இதை தனது கடைசிக்காலத்தில் வெளியிட்ட அறிக்கைகளிலும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையிலும் அவர் தெளிவுபடத் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தியுடன்தான் அவருக்கு மிகப் பெரிய கருத்து வேறுபாடு இருந்தது. காந்தியை ஒரு அரசியல் சுயநலவாதி என்று அவர் விமர்சித்துள்ளார்.

ஜின்னா ஒரு மாபெரும் மனிதர் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் வலிமைக்கும், இங்கிலாந்து ஆட்சியாளர்களின் அசாதாரண பலத்தையும் தாண்டி அவர் உயர்ந்து நின்றார். உண்மையில் இவர்கள் இருவருமே ஜின்னாவை விரும்பாதவர்கள்.

ஜின்னாவிடம் பல விஷயங்கள் எனக்குப் பிடிக்கும். அவர் சுயமாக வளர்ந்தவர். எந்தவித பின்னணியும் இல்லாமல் கடுமையாக உழைத்து வளர்ந்தவர். ஆனால் காந்தி அப்படி அல்ல. அவர் ஒரு திவானின் மகன்.

அதேபோல நேரு மிகப் பெரிய கோடீஸ்வரரின் வாரிசு. அவர்கள் எல்லாம் பெரும் பணக்காரர்கள். ஆனால் ஜின்னா அப்படி அல்ல. தானே முயன்று, கடுமையாக உழைத்து தனக்கென ஒரு அரசியல் வரலாற்றை படைத்தவர் ஜின்னா.

அவ்வளவு பெரிய மும்பையில், பரம ஏழையாகத்தான் அவரும் வாழ்ந்தார். அங்கு அவர் தாக்குப்பிடிக்க காரணம் அவரது மன வைராக்கியம் மற்றும் கடுமையான முயற்சிகளே.

மும்பையில் அவர் வாட்சன்ஸ் ஹோட்டலின் மொட்டை மாடியில் தான் ஒரு அறையில்தான் தங்கியிருந்தார்.

ஜின்னா என்றில்லை, சுயமாக உயர்ந்த, கடுமையாக உழைக்கக் கூடிய யாரையும் நான் பாராட்டவே செய்வேன், அவர்களை மதிப்பேன்.

இந்தியாவும், இந்தியர்களும் முழுமையாகவே ஜின்னா குறித்து தவறான கருத்தை வைத்துக் கொண்டிருக்கிறோம். யாராவது ஒருவர் மீது பழியைப் போட வேண்டுமே என்பதற்காக ஜின்னாவை பழித்துக் கொண்டிருக்கிறோம். இது தவறானது.

1946ல் நடந்த தேர்தலில் ஜின்னாவின் முஸ்லீம் லீக் கட்சி அனைத்து முஸ்லீம் தொகுதிகளிலும் வென்றது. ஆனால் அவர்களால் ஆட்சியில் அமர முடியாத நிலை. காரணம், காங்கிரஸ் கட்சி ஒரு முஸ்லீம் வேட்பாளரைக் கூட நிறுத்தாமல் பெரும்பாலான இடங்களில் வென்றிருந்தது. எனவே முஸ்லீம் லீக்கால் ஆட்சியில் இடம் பிடிக்க முடியவில்லை. அப்போதுதான் அவர் தேர்தலில் நின்றால் மட்டும் போதாது என்பதை ஜின்னா உணர்ந்தார்.

முஸ்லீம்களுக்கும் ஆட்சியில் அதிகாரம் வேண்டும் என்பதை காங்கிரஸுக்கும் உணர்த்தினார். இதையடுத்தே இடஒதுக்கீடு உத்தரவாதம் தரப்பட்டது. முதலில் 25 சதவீதம் என்று அறிவிக்கப்பட்ட இட ஒதுக்கீடு பின்னர் 33 சதவீதமாக உயர்ந்தது. ஆனால் இது சரிவர கடைப்பிடிக்கப்படவில்லை. பாரபட்சம் காட்டப்பட்டது, இது தான் நாடு பிளவுபடக் காரணமானது.

நேருவுக்கும், ஜின்னாவுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. நேரு, அதிகாரம் அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்திருக்க வேண்டும் என்று கருதினார். ஆனால் ஜின்னா அதிகராபப் பரவல் நிறைந்த பெடரல் அரசியலை வலியுறுத்தினார்.

முஸ்லீம்களுக்கு அதிகாரம் வழங்க காந்தி ஒப்புக் கொண்டார். ஆனால் அதை நேரு விரும்பவில்லை. இந்தியா பிரியும் வரை தனது கருத்தில் நேரு உறுதியாகவும், பிடிவாதமாகவும் இருந்தார்.

இந்தத் தவறை பின்னால்தான் நேரு உணர்ந்தார், அதை ஒப்பும் கொண்டிருக்கிறார். இந்தியா இரண்டாகப் பிரிந்ததற்கு நேருவும், அதேபோல ஜின்னாவும்தான் முக்கிய காரணம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.

இதை நான் குற்றச்சாட்டாக கூறவில்லை. உண்மையைப் பதிவு செய்கிறேன். அந்த சமயத்தில் என்ன நடந்தது, எந்தச் சூழ்நிலை பிரிவினைக்கு இட்டுச் சென்றது என்பதைக் கூறுகிறேன்.

எனது கருத்து என்னவென்றால் ஜின்னா மட்டுமே பிரிவினைக்குக் காரணம் அல்ல. அப்படிப்பட்ட கருத்தை நாம் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே.

மேலும் ஜின்னா பாகிஸ்தான் என்ற வார்த்தையை நெடுங்காலத்திற்கு பயன்படுத்தவில்லை. முஸ்லீம்களுக்கு தனி இடம் வேண்டும் என்று மட்டுமே கோரினார். சில மாகாணங்களை முஸ்லீம்களுக்காக ஒதுக்க வேண்டும். அவை இஸ்லாமிய மாகாணங்களாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். மேலும், இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு முஸ்லீம்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றார்.

சிறுபான்மையினருக்கும் அதிகாரத்தில் பங்கெடுக்கும் வாய்ப்பு கிடைத்தால்தான் பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக, சமுதாயத்தில் கெளரவத்துடனும், அதிகாரத்துடனும் இருக்க முடியும் என அவர் நினைத்தார்.

அதுதான் அவரது முதன்மையான நோக்கமாக இருந்ததே தவிர பிரிவினை அவரது முதல் எண்ணமாக இல்லை. அதாவது இந்தியாவுக்குள் சுயாட்சி கொண்ட ஒரு பாகிஸ்தானையே அவர் விரும்பினார். அந்தக் கருத்து சாத்தியமானதுதான் என்றும் அவர் நினைத்தார். அவரது எண்ணத்திற்கு மதிப்பளித்திருந்தால் பிரிவினையே ஏற்பட்டிருக்காது.

இந்துக்களை அவர் ஒருபோதும் வெறுத்ததில்லை. காங்கிரஸ் மீதும், காங்கிரஸ் தலைமை மீதும்தான் அவரது கோபம் இருந்தது. இந்துக்களை நான் எதிரியாகவே நினைக்கவில்லை என்று அவர் தொடர்ந்து கூறி வந்திருக்கிறார் என்பதை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

முதன் முதலாக காந்தியிடம் ஜின்னாவை கோகலே அறிமுகப்படுத்தியபோது, காந்தி சொன்ன வார்த்தை இது- ''ஒரு முஸ்லீம் தலைவரை வரவேற்பதில் பெருமை அடைகிறேன்''. அங்கேயே பிரிவினை வந்து விட்டது.

ஜின்னாவை ஒரு முஸ்லீம் என்ற கோணத்தில்தான் காந்தியே பார்த்திருக்கிறார். ஆனால் தான் ஒரு முழுமையான இந்தியர் என்ற எண்ணத்துடன் இருந்தவர் ஜின்னா. தன்னை ஒரு முஸ்லீமாக பார்ப்பதை அவர் விரும்பாதவர்.

ஜின்னாவுக்கும், காந்திக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஜின்னா ஒரு சிறந்த பேச்சாளர், சிறந்த நாடாளுமன்றவாதி, நாடாளுமன்ற அரசியலில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்.

பிரிவினைவாதத்தை எந்த நிலையிலும் அவர் ஏற்காதவர். ஆனால் காந்தி, தனது கருத்துக்களைக் கூற மதத்தைத் துணைக்கு அழைத்தவர். ஆனால் ஜின்னா மதம் என்ற சொல்லை கடைசி நேரத்தில்தான் கையில் எடுத்தார். ஆனால் காந்திக்கோ, அவரது அரசியலின் ஆரம்பத்திலிருந்தே மதமும் கலந்தே இருந்தது.

ஆனால் ஜின்னா, அரசியலில் மதம் கலக்கக் கூடாது என்று உறுதியாக இருந்தவர்.

இந்திய, பாகிஸ்தான் பிரிவினையை நான் ஜின்னாவின் மாபெரும் வெற்றியாக கூற மாட்டேன். அதேபோல தான் நினைத்ததை ஜின்னாவும் சாதிக்கவில்லை. பாகிஸ்தான் உருவான சில காலத்திலேயே ஜின்னாவின் கொள்கைகள், நோக்கங்கள் அடிபட்டுப் போய் விட்டன. அந்த வகையில் காந்தியும் சரி, ஜின்னாவும் சரி தோல்வியடைந்தவர்கள் என்றே கூற வேண்டும் என்று கூறியுள்ளார்.

இப்போது கூட முஸ்லீம்களை நாம் சரியாக நடத்துகிறோமா என்றால்.. இல்லை. அவர்களை வெளிகிரகவாசிகள் போல நடத்துகிறோம். அப்படி நடத்தியதால் தான் பாகிஸ்தான் என்ற தனி நாடு உருவானது. இப்போதும் அவர்களை அப்படி நடத்தி நாட்டை பிளவுபடுத்த வேண்டுமா?.

இந்தியாவில் அனைவரும் சட்டத்துக்கு உட்பட்டு சம உரிமையோடு வாழ அனுமதி வேண்டும். அதைச் செய்யாத வரை பிரச்சனைகள் தீராது. முஸ்லீம்கள் குறித்த பாஜகவின் நிலை சரியல்ல என்று கூறியுள்ளார் ஜஸ்வந்த் சிங்.

அன்று அனுமன்.. இன்று ராவணணா?:

இந் நிலையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின் சிம்லாவில் இன்று நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

ஒரு புத்தகம் எழுதியதற்காக நீக்கியுள்ளார்கள். உண்மையில் என் புத்தகத்தை பாஜத தலைவர்கள் படித்துக் கூட பார்க்கவில்லை.

என்னை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக ராஜ்நாத் சிங் தொலைபேசியில் கூறினார். இதை அத்வானியும் ராஜ்நாத் சிங்கும் டெல்லியிலேயே நேரில் சொல்லியிருக்கலாம்.

சிம்லா கூட்டத்துக்கு வரச் சொலிவிட்டு, இங்கு வைத்து கட்சியை விட்டு நீ்க்குவதாக போனில் சொன்னது தான் வருத்தம்.

நான் இதுவரை பாஜகவின் அனுமனாக இருந்தேன். இப்போது என்னை பாஜக ராவணனாக கருதுகிறது.

நான் ராணுவத்திலிருந்து மக்கள் சேவைக்கு வந்தவன். நான் பென்ஷன் வாங்கும் ஆசாமியும் அல்ல. 30 வருடமாக பாஜகவில் அரசியலில் இருந்தேன். அதன் ஆரம்பகால உறுப்பினர் தான். கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளேன். அது இப்படி முடிவுக்கு வரும் என்று நினைத்ததில்லை.

என் புத்தகத்தை வைத்து காங்கிரஸ் பிரச்சனை செய்தால் அதைப் புரிந்து கொள்ளலாம். காரணம் நாடு பிளவுபட காரணம் என்று நான் காங்கிரஸ் தலைவர்களைத் தான் அதில் விமர்சித்துள்ளேன். ஆனால், பாஜக பிரச்சனை செய்தால் என்ன செய்வது?. எல்லாவற்றையும் அரசியலாக்குவது தவறு. குறிப்பாக ஒருவரின் சிந்தனைகளுக்கு தடை போடுவது பெரும் தவறு.

ஜின்னா குறித்தும், நாடு பிளவுபட்ட அந்த வலி மிகுந்த நாட்களையும் தான் நான் புத்தகமாக்கினேன். அந்தப் புத்தகம் 5 வருட கடும் உழைப்பில் உருவானது. புத்தகம் எழுதியதற்காக நான் வருதப்படவில்லை. அதை கவனமாகப் படித்துப் பாருங்கள்.

இந்து-முஸ்லீகள் ஒற்றுமையின் தூதராக இருந்த ஜின்னா ஏன் பாகிஸ்தானின் தந்தையாக மாறினார். ஏன் நாடு பிளவுபடக் காரணமானார்.. அவரில் ஏன் அந்த மாற்றம் ஏற்பட்டது.. என்பதை விளக்கும் நூல் தான் இது. இந்தப் புத்தகம் எழுதி நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை.

அத்வானி எதிர்க் கட்சித் தலைவராக நீடிக்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து அந்தக் கட்சி தான் முடிவு செய்ய வேண்டும்.

இளைய தலைமுறையிடம் பொறுப்பைத் தருமாறு பாஜகவுக்கு ஆர்எஸ்எஸ் அறிவுரை தந்துள்ளது குறித்து கேட்கிறீர்கள். அது குறித்து நான் ஏதும் கூற விரும்பவில்லை. நான் ஆரஎஸ்எஸ்சில் எந்தக் காலத்திலும் உறுப்பினராக இருந்ததில்லை. அவர்களது கருத்துக்களுக்கு நான் எப்படி பதில் சொல்வது என்ற ஜஸ்வந்த் சங் பரிவார் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

No comments: