இராமன் வரமாட்டான் ......!
நெல்லை ஆ. கணபதி
இராமர் கோயில் அவசியமா ?
நாட்டின் அமைதி அவசியமா ?
பாபர் மசூதி இடித்த பாவமும்
பழியும் நீங்கிட வேண்டாமா ?
கல்விதான் கற்க இளமையிலும்
கைகேயிவரத்தால் வளமையிலும்
பல்வேறு ஆண்டுகள் காடுகளில்
பழகியே வாழ்ந்தவன் இராமபிரான் !
கானில் படகோட்டி குகன் தனையே
கண்டதும் சோதரர் ஐவர் என
மானிடன் ஆன்வன் பிற இனத்தை
மதிப்பதே பெருமை என்றுரைத்தான்
அயோத்தியில் வாழ்ந்த அரண்மனையும்
ஆரண்ய வாழ்வும் சமம் என்றான்
வயோதிகன் தசரதன் தந்தையினால்
வன்வாசம் சென்றவன் புண்ணியவான் !
மன்னவன் இராமன் பிறர் உணர்வை
மதிப்பதே பண்பு என வாழ்ந்தான் !
என்னவோ கோயில் கட்டுகிறோம்
இங்கு இரு என்றால் இருப்பனோ ?
இராமர் இருக்கும் இடம் அயோத்தி
எல்லோரும் அறிந்த உண்மை இது !
பாபர் மசூதி கோயிலையே
படைப்பினும் இராமன் வரமாட்டான்
அடுத்தவர் மனைவியை அபகரித்த
அதைக் கண்டு கொதித்தவன் இராமபிரான்
அடுத்தவர் மசூதியை அபகரித்தே
அமைத்திடும் கோயிலில் புகமாட்டான் !
நெற்றியில் நாமம் போடுவதும்
நெஞ்சினில் ராமனைத் தேடுவதும்
கற்றவர் போடும் திருக்கோயில்
கற்கோயில் நமது நெஞ்சமதே !
பாபர் மசூதியும் தாஜ்மகாலும்
பழம்புகழ் போற்றும் பொக்கிஷமே !
யாவரும் அறிந்த உண்மை இது !
இதனை மறப்பது சரிதானோ ?
நன்றி : சமரசம் டிசம்பர் 16 31, 2009
No comments:
Post a Comment