Saturday, January 2, 2010

எது கவிதை?

எது கவிதை?

கைத்தட்ட(ல்) வேண்டுவதா கவிதை? - எண்ணம்
கருத்தனையத் தூண்டுவதே கவிதை.-மின்னும்
பொய்யூற்றிப் புலம்புவதா கவிதை? - நன்கு
புனைந்தாலும் பேருண்மை கவிதை. - கண்ணில்
மைதீட்டும் செயற்பாடா கவிதை? - மண்ணில்
மெய் தேடும் சமன்பாடே கவிதை. - இன்னும்
வையத்தில் வானவில்லா கவிதை? - உண்மை
உள்ளத்தில் மலர்த்துவதே கவிதை ஐயா!
சந்தமதன் வசந்தத்தை செவிகள் கேட்க
சாரமது போதுமென்று சிலபேர் சொல்ல
முந்தையதே கவிதையாகும் மற்ற யாவும்
முறையற்றுப் போனதென்ற முறையீ டுண்டு
பிந்தையதே கவிதையாகும்; பொருளே தேடல்
பொருட்டில்லை மரபென்ற பேச்சும் உண்டு.
எந்தவிதம் கவிதையாகும் என்னைக் கேட்டால்
இதயத்தில் பதிவதையே கவிதை என்பேன்.
கந்தகத்தைக் கொண்டிருக்கும் கவிதைப் பேனா
கொடுமைகளை எரிப்பதிலே நெருப்புக் குச்சி
விந்தைகளை வியப்பதுவே விருப்பம் என்று
உயர்மொழியில் பூச்சூடும் வனிதைப் பாக்கள்
சொந்தகதை சோகத்தைச் சொல்லும் சொற்கள்
சுகங்காண இலக்கியத்தை செய்யும் கைகள்
இந்தவிதம் கவிவகைகள் எண்ணி மாளா
இருந்தாலும் கவிதைக்கோர் கருத்தைச் சொல்வேன்.
சிந்தையிலே பூபூக்கும் கவிதை வந்து
சிகரத்தை கால்களுக்குச் சொல்லிப் போகும்
சந்தையிலே கிடைப்பதல்ல; கவிதை தன்னை
சூல்கொண்டு பிரசவிக்க தாய்மை வேண்டும்
மந்தையிலே ஒன்றில்லை; கவிதை என்றால்
மலையுச்சி தீபம்போல் வெளிச்சம் பேசும்
பந்தயங்கள் கவிக்கில்லை; பாரில் யாரும்
பெருவானில் ஓடுதளம் அமைப்ப தில்லை.


--
H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953
www.ezuthovian.blogspot.com
www.mypno.com
fakhrudeen.h@gmail.com


இறைவா!
என் நிலையையும்
நினைப்பையும் சமப்படுத்துவாயாக.
நீ நாடியிருந்தால்
நிலையை உயர்த்து.
ஒரு போதும்
நினைப்பை உயர்த்தி விடாதே!
__._,_.___

1 comment:

தமிழ் said...

அருமையாக எழுதியுள்ளீர்கள்

அன்புடன்
திகழ்