ஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மை மக்களும் – ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்
எம்.ஏ.எம். மன்ஸூர்
(தலைவர் – இஸ்லாமிய ஆய்வுகளுக்கான மிஷ்காத் நிறுவனம்)
தேர்தலை எதிர்கொண்டு நிற்கிறோம். அதி முக்கிய வரலாற்றுப் பின்னணி கொண்ட தேர்தல் இது. சில போது சிறுபான்மையினரின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தலாகக் கூட இது இருக்கலாம். யுத்தம் முடிந்து சிறுபான்மை பற்றிய எந்த உறுதியான முடிவும் இல்லாத நிலையில் நடக்கும் தேர்தல் இது என்பதாலும் தேர்தலையே அதற்கான ஒரு சிறு துரும்பாகச் சிறுபான்மையினர் பிடிக்க முனைவதாலுமே அப்படிச் சொல்லத் தோன்றியது. இந்த வகையில் முஸ்லிம், தமிழ் அரசியல் தலைமைகளும் தனி நபர்களும் கூட மிகக் கவனமாக முடிவெடுக்க வேண்டிய தேர்தல் இது என்பது தெளிவு.
இங்கே எக்கட்சி சார்பாகவும் நான் எழுதவில்லை. அச் சார்பு வாடை கூட அடிக்கக் கூடாது என்பதால் மிகவும் அவதானமாக எழுதுகிறேன். எங்காவது எப்பக்கமாவது வாடை அடிப்பதாக நீங்கள் கண்டால் அது என் கருத்து அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
முதலில் நான் இஸ்லாமியப் பார்வை கொண்டவன் என்பதால் அது தொடர்புபட்ட சில உண்மைகளைத் தர விரும்புறேன்.
சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் இத்தகைய தேர்தலுக்கும் என்ன தொடர்பு? என்ற வினாவின் போது நவீன இஸ்லாமிய அறிஞர்களின் பதில் இரு விதமாக அமைகின்றது. இங்கு நாம் ஆதாரங்களையெல்லாம் விரிவாக எழுதவில்லை. கருத்துக்களை மட்டுமே தருகின்றோம். இப் பிரச்சினையோடு சம்பந்தப்பட்ட விடயங்கள் அதிகமானவை என்பதே அதற்குக் காரணம். அவர்கள் தரும் இரு விதப் பதில்களும் கீழ்வருமாறு.
1. தார் அல் ஹர்ப், தார் அல் இஸ்லாம் என உலகைப் பிரித்து நோக்கியமையில் வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட காலப் பிரிவு,சூழ்நிலை மிகுந்த செல்வாக்கு செலுத்தியது. எனினும் அது அல்குர்ஆன் சுன்னாவின் பின்னணியில் பெறப்பட்ட முடிவு என்பதை மறுக்க முடியாது. அத்தோடு அது இஜ்மாவின் முடிவுமல்ல. அதற்கு மாற்றமாக கருத்துச் சொன்ன சட்ட அறிஞர்களும் இருந்து வந்துள்ளார்கள். அவர்களில் இமாம் பக்ருத்தீன் ராஸி, தார் அல் தஃவா(பிரச்சார அகிலம்), தார் அல் இஜாபா (இறை தூதை ஏற்ற அகிலம்) என உலகை இரண்டாக நோக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறார். இஸ்லாமிய வணக்கங்களை நிறைவேற்ற அனுமதியும் இஸ்லாமிய நடைமுறைகளைப் பேண பொது அனுமதியும் இருக்குமாயின், பெரும்பான்மை அந்நியர்களைக் கொண்டதாக இருப்பினும் அந் நாட்டை தாருல் இஸ்லாமாகக் கொள்ளலாம் என இமாம் மாவர்தி சொல்வதாக இப்னு ஹஜர் அஸ்கலானி, பத்ஹுல் பாரியில் குறிப்பிடுகிறார்.
2. நவீன கால சூழ்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரகடனம்,போர்,சமாதானம் பற்றிய பிரகடனங்களை வைத்து நோக்கும்போது தார் அல் அஹ்த்(ஒப்பந்தம் சார் அகிலம்), தார் அல் ஹர்ப்(யுத்தம் சார் அகிலம்) எனப் பிரிப்பதே பொருத்தம். எனினும் தார் அல் ஹர்ப் என்று கொள்ளக் கூடியது இஸ்ரேல் மட்டுமே.
இப்பின்னணியில் இலங்கையை தார் அல் ஹர்ப் சிந்தனையின் கீழ் பார்த்து இது எமது நாடல்ல என அந்நியப்பட்டு நோக்காது தார் அல் தஃ வா (பிரச்சார அகிலம் சார் நாடு அல்லது ஒப்பந்தம் சார் நாடு) எனப் பார்த்து இது எமது தாய் நாடு, பல நூற்றாண்டு காலமாக இஸ்லாத்தைப் பகிரங்கமாக நாம் நடைமுறைப்படுத்துகிறோம், எல்லாப் பிரதான நகரங்களிலும் பாங்கொலிக்கிறது, மத்ரஸாக்களை நடத்துகிறோம் , தனியார் சட்ட ஒழுங்கைப் பெற்றுள்ளோம், தனியான அமைச்சு எமக்குள்ளது என இப்படி உடன்பாடாகப் பார்த்தலே மிகச் சரியான சிந்தனை ஒழுங்காகும்.
ஓர் இஸ்லாமியன் எதிர்நோக்கும் இன்னொரு பிரச்சினை சட்டம் இயற்றும் அதிகாரம் அல்லாஹ்வுக்குரியது என்பதாகும். இந்நிலையில் பிற சட்டமியற்றும் அதிகாரத்தைக் கொண்டுள்ள பாராளுமன்ற அமைப்பை ஏற்றுக் கொள்ளல் குப்ராக அமையும். எனவே அரசியலில் பங்கெடுக்கவோ தேர்தலில் வாக்களிக்கவோ சாத்தியமில்லை என்பதாகும்.
உண்மையில் சட்டமியற்றும் அதிகாரம் அல்லாஹ்வுக்குரியது என்ற சிந்தனையை உரிமைகளைப் பெறப் போராடும் அரசியற்போராட்டத்தின் மீது பிரயோகிப்பது தவறு. இன்னொரு சிந்தனையை ஏற்றல், அதனை நடைமுறைப்படுத்தப் போராடல், அதனை நடைமுறைப்படுத்தலை ஆதரித்து வாக்களித்தல் என்ற நிலைமை மீதே அச்சிந்தனையை பிரயோகிக்க வேண்டும். எமது இஸ்லாமிய பண்பைக் காத்துக் கொள்ளவும் உரிமைகளைப் பெறவும் போராடல் இதனை விட முற்றிலும் வித்தியாசமானது என்பதை உணர வேண்டும். சிலை ஒன்றை வணங்கல்,கபுறு வணக்கத்தில் ஈடுபடல் போன்றதல்ல இப்பிரச்சினை. அங்கே வணக்கம் ஒரே வடிவத்தைக் கொண்டது. இங்கு இரு வகையான வடிவங்களே உள்ளன. அவையே நாம் ஏற்கனவே விவரித்த இன்னொரு சிந்தனையை ஏற்றல், ஆதரித்தல் என்பதுவும் எமது உரிமைகளைப் பெறவும் இஸ்லாமியத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும் இன்னொரு சிந்தனையோடு அரசியல் ரீதியாகப் போராடல் என்பதுவுமாகும். முதலாவது குப்ர், இரண்டாவது ஒரு போராட்ட வழிமுறை. அத்தோடு இப் போராட்டம் ஒரு தஃ வாவாகக் கூட மாற இடமுண்டு.
இப்பின்னணியில் அரசியற் போராட்டம், வாக்களித்தல் என்பவற்றை அனுமதிப்பதாகவும் வலியுறுத்துவதாகவும் கீழ்வரும் சட்ட விதிகள் காணப்படுகின்றன என கலாநிதி யூசுப் அல் கர்ளாவி அத்தீன் வஅஸ் ஸியாஸா என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
1. “”ஒரு கடமையை நிறைவேற்றல் இன்னொன்றில் தங்கியிருக்குமாயின் அந்த இன்னொன்றும் கடமையாகும்.” இது ஒரு சட்ட விதி. இந்த வகையில் முஸ்லிம்கள் தமது மார்க்க, கலாசார, சமூக உரிமைகளைப் பெறும் அரசியற் போராட்டம், தேர்தலில் கலந்து கொள்ளலில் தங்கியிருக்குமாயின் அவ்வாறு செய்தல் அவர்கள் மீது கடமையாகும்.
2. “”விடயங்கள் அதற்கான நோக்கங்களை வைத்தே தீர்மானிக்கப்படும்”. இது சட்ட அறிஞர்களுக்கு மத்தியில் ஏகோபித்து ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்ட விதியாகும். இதன்படி முஸ்லிம்களின் உரிமையைப் பெறல், மார்க்க சுதந்திரத்தைப் பெறல், கலாசார தனித்துவத்தை, அடையாளத்தைக் காத்தல் என்ற எண்ணத்தோடும் நோக்கத்தோடும் ஒரு முஸ்லிம் அரசியலில் கலந்து கொண்டால் அவன் அல்லாஹ்விடம் கூலி பெறுகிறான்.
3. “தீமைகளுக்கு இட்டுச் செல்லும் வழிகளை அடைத்தல்’ என்ற விதி. அரசியலில் பங்குகொள்ளாது ஒதுங்கல் மார்க்க சமூகக் கூட்டிருப்புக்கு அபாயமாக அமையும், முஸ்லிம்கள் ஒதுக்கப்பட்ட நிலைக்கு உள்ளாவர், நிறைய நன்மைகளை இழக்கச் செய்யும், பல சீர்கேடுகளும் தீமைகளும் உருவாகவும் இடமுண்டு. இவ்வாறு பல தீமைகளுக்கு இட்டுச் செல்லுமாயின் அத் தீமைகளை அடைக்கும் வகையில் அரசியலில் கலந்து கொள்ளல் கடமையாகும்.
4. “அத்தியாவசிய நிலைகள் தடுக்கப்பட்டவற்றையும் ஆகுமாக்கும், தேவையும் அது தனிப்பட்டதாயினும் பொதுத் தேவையாயினும் அத்தியவசிய நிலையின் தரத்தைப் பெறலாம்’ என்ற சட்டவிதி.
சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைக் காக்க வேண்டிய அத்தியாவசிய நிலை அல்லது தேவை காணப்படுகின்றது. இதற்கு அரசியல் போராட்டம் தவிர்க்க முடியாதது. இந்நிலையில் சில தீமைகளையும் இழைக்க வேண்டிய நிர்ப்பந்த நிலை உருவாகுகிறது. (உம்) ஷரீஆவுக்கு மாற்றமான சில விடயங்களைக் கொண்டுள்ள யாப்பை ஏற்று சத்தியப் பிரமாணம் செய்தல் இந்நிலையில் அத்தியவசிய சந்தர்ப்பத்தால் இத் தீமை இல்லாமலாகிறது.
அந்தவகையில் மேற்குறிப்பிட்ட நிலைகள் காணப்படுமாயின் அரசியல் போராட்டத்தில் ஈடுபடலும் வாக்களிப்பில் கலந்து கொள்ளலும் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் கடமையாகிறது. ஆனால் இங்கு கவனத்திற்கொள்ள வேண்டிய ஒன்றுதான் அரசியலில் கலந்து கொள்ளும்போது, வாக்களிக்கும் போது தன் சொந்த நலனை முற்படுத்தக் கூடாது. அரசியலை சம்பாதிக்கும் வழியாகக் கொள்ளக் கூடாது. குறிப்பிட்டதொரு கட்சி அது சரியோ பிழையோ நான் அதரிப்பேன் என்ற கட்சி வெறி, பற்று காணப்படக் கூடாது.
இஸ்லாமிய ரீதியாக அரசியலில் கலந்து கொள்ளல் வாக்களித்தல் என்ற நிலையைப் பேணிக் கொள்ள வேண்டும். கீழ் வரும் விடயங்களைப் பேணிக் கொள்ள வேண்டும்.
1. வாக்களித்தல் என்பது ஒரு சாட்சியம்(ஷஹாதத்): இந்தக் குறிப்பிட்ட நபர் தகுதியானவர் எனச் சொல்வதாகும். இது பொய்ச் சாட்சியமாக அமைந்து விடக் கூடாது. பொய்ச் சாட்சியம் பெரும் பாவங்களில் ஒன்றாகும்.
2. கள்ள ஓட்டுப் போடல் : பிற ஒருவரின் உரிமையைப் பறித்தல் என்ற களவு அத்தோடு பொய். பொய்யும் களவும் பெருங் குற்றங்கள். அது சமூக ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் போது பாரிய தன்மை இன்னும் கூட வேண்டும். குறிப்பிட்ட நபர் வருவது சமூகத்திற்கு நன்மையளிக்கிறது. எனவே அந்த நல்லெண்ணத்தால் இவ்வாறு செய்கிறேன் என்று கூறக்கூடாது. இது பிரசாரத்திலுள்ள பலவீனம், நிர்வகிக்கும் திறனின்மை என்பவற்றால் ஏற்பட்ட விளைவாகும். அதுமட்டுமல்ல, தீமையை ஒழிக்க பொறுமையும் நீண்ட கால போராட்டமும் வேண்டும். அவசரப்பட்டுத் தீமையை ஒழிக்க நாமும் தீமையான வழிகளில் புகுவது தீமையை ஒழிக்காது மேலும் தீமையை வளர்க்கவே உதவும்.
3. வன்முறை : பயமுறுத்தல் சொத்துக்கும் உடலுக்கும் உயிருக்கும் சேதம் விளைவித்தல் என்பது பயங்கரப் பாவமாகும். இது இரு வகைப் பாவமாகிறது. ஒன்று அடுத்த மனிதனின் கருத்துச் சுதந்திரத்தைத் தட்டிப் பறித்தல், இரண்டாவது மேற்குறிப்பிட்ட பாதிப்புக்களை விளைவித்தல்.
வெற்றி பெற்றதன் பின்னரும் இத்தகைய வன்முறைகளில் வெற்றி பெற்றோர் ஈடுபடுவதுண்டு. இது இன்னொரு வகையில் இஸ்லாமிய சிந்தனைக்கு முரணாகிறது. வெற்றி பெற்றோன் தான் வந்த பாதையில் நிகழ்ந்து விட்ட தவறுகளை நினைத்து அவற்றுக்காகப் பாவ மன்னிப்புக் கேட்டலே இஸ்லாமியப் பண்பாடு. வெற்றிக்காக விழாக் கொண்டாட்டம் என்ற பெயரால் தோல்வியடைந்தோர் மனதைப் புண்படுத்தலும் அவர்கள் மீது வன்முறையைப் பிரயோகித்தலும் ஒருபோதும் இஸ்லாமியப் பண்பாடாகாது.
இனி நாம் எதிர்கொண்டுள்ள ஜனாதிபதி தேர்தலோடு சம்பந்தப்பட்ட சில உண்மைகளைப் பார்ப்போம். முதலில் சில பொதுவான உண்மைகளைக் குறிப்பிடுகிறோம்.
1. எந்த வகையிலும் சிறுபான்மையினர் அவர்கள் முஸ்லிம்களாயினும் தமிழர்களாயினும் “இது எமது தாய் நாடு’ என்ற உணர்வை ஒருபோதும் விட்டுவிடக் கூடாது. அந்த வøகயில் இந்த நாட்டின் மீது அன்பும் ஆதரவும் பற்றும் கொண்டவர்களாக இருக்க வேண்டும். பெரிய பெரிய விடயங்களிலிருந்து சிறிய அற்ப விடயங்கள் வரை எல்லா நடவடிக்கைகளின்போதும் அது அவர்களிடம் வெளிப்பட வேண்டும். அது கிரிக்கட் போட்டி போன்ற விளையாட்டாக இருந்தபோதும் கூட.
பெரும்பான்மை இரண்டாந்தரப் பிரஜையாக எம்மை நோக்குகிறது, எமக்கு அநியாயம் இழைக்கிறது, எம்மை வந்தேறுகுடிகளாகப் பார்க்கிறது, எம் உரிமைகளைப் பறிக்கிறது என்ற இப்படியான பல்வேறு தடைகள் (சொந்த நாடாகப் பார்ப்பதற்கு) இருப்பினும் சிறுபான்மை இந்த உண்மையை விட்டுக் கொடுத்துவிடக் கூடாது. இது அரசியல் தந்திரோபாயமன்று. ஓர் உண்மை. யதார்த்தம். இந்த உண்மை சிறுபான்மை சமூகத்தினுள் ஊடுருவி வேரூன்றினால் மட்டுமே சரியான அரசியற் போராட்டத்தை கட்டியெழுப்ப முடியும். அப்படியின்றி தன்னையும் தன் சமூகத்தையும் இந்நாட்டுக்கு அந்நியமாக்கிக் கொண்டு “இது சிங்கள நாடு’ (முஸ்லிம் பிரயோகத்தில் காபிர் நாடு) என்ற மன உணர்வு கொண்டால் அது சார்ந்த இறுக்கமான, நெகிழும் தன்மையற்ற, நாட்டுப் பொது நலனில் அக்கறையற்ற சுற்றி மதிலெழுப்பி பார்க்கக் கூடிய அரசியல் அல்லது ஆயுதப் போராட்டம் ஒன்றையே கட்டியெழுப்ப பயன்படும்.
இது நாட்டுக்கும் சிறுபான்மை சமூகங்களுக்குமே பாதகமாக முடியும் என்பதில் சந்தேகமில்லை.
2. ஒவ்வொரு இனமும் தன் சமூகத்தின் மீது பற்றும் அன்பும் வைத்தல் மிகவும் இயல்பானது. அந்த அன்பும் பற்றும் வெறியாகவும் அடுத்த இனங்கள் மீது துவேஷமாகவும் மாறுவதே தவறு. துவேஷமாக மாறும்போதுதான் அநியாயங்களும் உரிமைகள் பறிக்கப்படலும் இறுதியாக இனச் சுத்திகரிப்பு என்ற பயங்கர அநியாயமும் நிகழ்கிறது. இந்த நிலையில் சிறுபான்மையினர் சிந்தனையில் கொள்ள வேண்டிய சில யதார்த்தபூர்வமான உண்மைகள் உள்ளன.
(அ) எந்த நாட்டைப் பொறுத்தவரையிலும் பெரும்பான்மை இனம் அதிகாரத்தில் இருப்பது இயல்பு. நாட்டு வளங்களில் விகிதாசாரப்படி அதற்கு அதிகமாகப் போவதும் இயல்பு. நாட்டின் வளத்திலும் அதிகாரப் பகிர்விலும் இந்த உண்மை யதார்த்தத்தை வைத்துப் பங்கு கேட்கவே சிறுபான்மை முயல வேண்டும். சிறுபான்மையினர் நாட்டு வளத்தில் பெரும்பகுதியை வைத்துள்ளார்கள். தாம் விரும்பியவாறு அதிகாரத்தை ஆட்டிப் படைக்க முயல்கிறார்கள் என்ற நிலைமை சற்றேனும் உருவாகுமானால் பெரும்பான்மையின் துவேஷம், இன வெறி போன்றன கூர்மைப்படும் என்பதில் சந்தேகமில்லை. அத்தகையதொரு நிலைமையை யதார்த்தமாகவோ அல்லது கற்பித மாயைகளாலோ இலங்கைப் பெரும்பான்மை அடைந்தது என்பது வரலாற்று உண்மை. இந்நிலையில் பெரும்பான்மைக்கும் சிறுபான்மைக்குமிடையே ஒரு பாரிய விரிசல், ஒரு பெரும் உடைவு தொடர்ந்து வந்துள்ளது. இந்த விரிசலை, உடைவை இல்லாமலாக்கல் சிறுபான்மையின் கையிலும் உள்ளது. அதற்கான செயற்றிட்டம் கண்டிப்பாக சிறுபான்மைப் புத்திஜீவிகள், அரசியல் தலைமைகளிடம் காணப்பட வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் யுத்தம் முடிந்துவிட்டாலும் இனங்களுக்கிடையிலான பனிப்போர் தொடர்வதைத் தவிர்க்க முடியாது. அரசியல் தந்திரோபாயங்களும் சூழ்ச்சிகளும் இரகசியக் குத்து வெட்டுக்களுமே தொடரும். வட்ட மேசைகளில் அமர்ந்தாலும் போலிப் புன்முறுவலும் ஒட்டாத கைகுலுக்கல்களும் மட்டுமே மிஞ்சும். நம்பிக்கை, நாணயம், உடன்பாட்டை நிறைவேற்றல், பரஸ்பரப் புரிந்துணர்வு எதுவும் அங்கிருக்காது. எனவே வெற்று வட்டத்தில் சுற்றுவதாகவே இப்போக்கு அமைந்துவிடும்.
(ஆ) இப் பினன்ணியில் இன்னொரு உண்மை பிறக்கிறது. அதாவது சிறுபான்மை, பெரும்பான்மையோடு உறவாடும்போது அல்லது அரசியல் போராட்டத்தில் இறங்கும்போது பங்கு கொள்ளல், நாட்டைக் கூட்டாகக் கட்டியெழுப்பல் என்ற கொள்கை மீது உறவாடல், போராடல், உறவுகளை வைத்துக் கொள்ளல் என்பன முக்கியம். பெரும்பான்மையுடன் பலப்பரீட்சையில் இறங்குவது அங்கு காணப்படக் கூடாது. இக் கொள்கைப்போக்கு காணப்பட முடியுமானால் பெரும்பான்மை சமூகத்தின் புத்திஜீவிகளில் ஒருதொகையினர் எந்த சங்கடமுமின்றி சிறுபான்மையினருடன் ஒத்துழைப்பர். சிறுபான்மையினர் அமைக்கும் தனிக்கட்சிகளில் கூட அங்கத்துவம் வகிக்கத் தயங்கமாட்டர். பலப்பரீட்சையல்லபங்குகொள்ளல், கூட்டுழைப்பு என்ற இந்தக் கொள்கையின் நடைமுறை இவ்வாறு என்றெல்லாம் விளக்கின் இப்பகுதி விரிந்து விடும். எனவே இதனைவிட்டு அடுத்த பகுதிக்கு வருவோம். இங்கு பெரும்பான்மையுடனான ‘பலப்பரீட்சையில் இறங்குதல் ‘ என்ற அரசியல் போக்கு நல்ல பயனைக் கொடுக்காது. அது இறுதியில் ஆயுதத்தில் தஞ்சமடைய வைக்கும். அல்லது சூழ்ச்சி, தந்திரோபாயம், நம்பிக்கையின்மை என்ற நிலைகளை ஒட்டிய வெறும் முடிவில்லாப் பேச்சுவார்த்தைகளாகவே அமையும் என்ற யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளல் போதுமானது.
இனி ஜனாதிபதி தேர்தலுக்கு வருவோம். முதலில் ஜனாதிபதித் தேர்தல் மிகவும் முக்கியமானது என்பதை சிறுபான்மை சமூகங்கள் ஆழ்ந்து கவனத்திற் கொள்ள வேண்டும். குறிப்பாக நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் அது மிகக் கூடிய முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில் ஜனாதிபதியின் கையில் குவிந்திருக்கும் அளவுமீறிய அதிகாரம் பாராளுமன்றத்தை மிகவும் பலவீனப்படுத்தியுள்ளது. ஜனாதிபதியின் நிலைப்பாட்டைப் பொறுத்தே நாடும் ஓடுகிறது. சிறுபான்மையினரின் நலன்களும் தீர்மானிக்கப்படுகின்றன. எனவே இத் தேர்தலில் ஒவ்வொரு சிறுபான்மை மனிதனின் வாக்கும் சிறுபான்மைக் கட்சிகளின் நிலைப்பாடுகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகின்றன.
சிறுபான்மையினர் சிந்திக்க வேண்டிய முறை கீழ்வருமாறு அமைய வேண்டும் என அபிப்பிராயப்படுகின்றோம்.
1. நாட்டு நலன் சிறுபான்மையின் சொந்தநலன் மட்டுமன்றி நாட்டு நலனும் அதிமுக்கியமாகிறது. நாட்டை எதிர்த்து சொந்த நலனைக் காப்பாற்றிக் கொள்ளல் என்பது சாத்தியமில்லை. நாடு அதளபாதாளத்தில் போனால் நாமும் அங்கேயே இருப்போம். எனவே நாட்டின் அடிப்படையாக அமையும் ஜனநாயக விழுமியங்கள் பாதுகாக்கப்படல், கல்வி, பொருளாதார சீர்நிலை எதிர்காலத்தில் சிறக்க இத் தேர்தலை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதுவும் சிறுபான்மைக் கட்சிகளின் கருத்துப் பரிமாறலில் முக்கிய இடத்தைப் பெற வேண்டும். நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை பற்றி மிகக் கடுமையான விமர்சனங்கள் உள்ளன. நாடே கொள்ளை போவதற்கு இம் முறை பிரதான காரணி என்பது விமர்சகர்களின் கருத்து. சிறுபான்மைக்கு இம் முறை சாதகமானது என்று கூறுவது நாடு எக்கேடு கெட்டுப் போனாலும் எமது நலன் காக்கப்படல் வேண்டும் என்று சொல்வது போல் அமையாதா? என்று சிந்திக்க வேண்டும். அது மாத்திரமன்றி ஒரு தனி மனிதனில் மட்டும் தங்கி நின்று நலன்காப்பது எவ்வளவு தூரம் சாத்தியம்? ஜே.ஆரிலிருந்து இன்றுவரை வந்த நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளால் சிறுபான்மை பெற்ற அனுபவமென்ன என்பதுவும் கவனமாக ஆராயப்பட வேண்டும்.
2. பேச்சுவார்த்தையின்போது பேச்சுவார்த்தை மேசை மீது சிறுபான்மையின் பலமான பொருளொன்று இருக்க வேண்டும். விரல்களையே வெட்டிக்கொண்டுபோய் மேசையில் உட்கார்ந்தால் பல சந்தர்ப்பங்களில் விட்டுக் கொடுத்தலே கூடுதலாக இருக்கும். இப்போது சிறுபான்மையிடம் இருக்கும் ஒரே பொருள் வாக்கு வங்கி மட்டுமே. அதுவும் கடுமையாகத் துண்டாடப்பட்டுள்ளது.
முஸ்லிம்தமிழர் என்ற இரு சிறுபான்மையும் ஒன்றிணைய முடியுமானால் அது ஒரு பெரும் சக்தி. துரதிஷ்டவசமாக சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து இன்று வரை அவற்றால் ஒன்றிணைய முடியவில்லை. பெரும்பான்மை சமூகத்தின் எதிரும் புதிருமான கட்சிகள் கூட ஒன்றிணைந்திருக்கின்றன. ஜே.வி.பி.யும் ஐ.தே.க.வும் ஒன்றிணைவது என்பது எவ்வளவு வித்தியாசமான கூட்டு? ஆனால் இணைவதற்கான பல காரணிகள் இருந்தும் தமிழ் முஸ்லிம் கட்சிகளால் இணைய முடியவில்லை. அவர்களது இணைப்பு அவர்களையும் பலப்படுத்தும். மிகவும் தூரநோக்கத்துடன் பயன்படுத்தினால் இந்த நாட்டையே கட்டியெழுப்ப அது பெரிதும் பயன்படும். இந்த உண்மை பற்றி தமிழ்முஸ்லிம் தலைமைகள் புத்திஜீவிகள் சிந்திக்கமாட்டார்களா? இப்பின்னணியில் விடுதலைப் புலிகளும் வீழ்ந்ததன் பிறகு பாரிய பின்னடைவுக்குட்பட்டு சமூகத்தை மீண்டும் திருப்பிக் கட்டியெழுப்ப வேண்டிய நிலையிருக்கும் போது…
முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் அரசியல் ரீதியாக தனிக்கட்சிகள் பிளவுபட்டு பெரும்பான்மைக் கட்சிகளிலும் சிதறுண்டு நிற்கும் நிலை ஒருபக்கம், இன்னொரு பக்கத்தில் அகதிகளாக வாழும் ஒரு தொகையினரின் துயரங்கள்…. வேறொரு புறத்தில் வடக்கிலும் கிழக்கிலும் தம் சொந்த நிலங்களை, வீடுகளை, சொத்துக்களை இழந்து நிற்கும் கையறு நிலை. போதாமைக்கு அரசியல் ரீதியாக முஸ்லிம் சமூகத்தைக் கவனமாகக் கட்டியெழுப்ப வேண்டிய பெரும் பொறுப்பு…
இந்நிலையில் அதிகாரத்தில் பங்கு கேட்கும் போராட்டத்திற்கு அழுத்தங்கொடுப்பதா? அல்லது மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெற்றுக் கொடுத்து அவர்களை பலமிக்க சமூகமாகக் கட்டியெழுப்புவதற்கு அழுத்தம் கொடுப்பதா?
பொஸ்னியாவின் யுத்தம் முடிவுற்றதும் அதன் பெருந் தலைவர் அலி இஸ்ஸத் பிகோபிச் ஒரு பேட்டியின் போது சொன்ன கருத்துக்கள் என் நினைவில் வருகின்றன:
பொஸ்னியா ஒரு பாரிய விபத்தில் அகப்பட்டு பயங்கரக் காயங்களுடன் படுக்கையில் விழுந்துவிட்ட ஒரு மனிதனை ஒத்துள்ளது. படுக்கையில் விழுந்துவிட்டவனுக்கு என்ன எதிர்காலம்? முடிவுக்கு வழிதோன்றா நிகழ்காலத்திலேயே அவன் நிற்கிறான். பொஸ்னியா முடிவு காண முடியாத நிகழ்காலத்தில் அது நிற்கிறது. இதுபற்றி கவலைப்படுவதில் அங்கலாய்ப்பதில் அர்த்தமில்லை.
இப்÷பாது நாம் எழுப்ப வேண்டிய கேள்வி இதுதான். சரியாகத்தான் நாம் எமது நோயைப் பரிசோதித்துள்ளோமா அல்லது அதில் தவறு விட்டுள்ளோமா? நோயாளி குணப்பட வழிதெரிகிறதா? எப்படி? யுத்தத்தின் பின்னர் தமிழ் சமூகத்தின் நிலையும் இதுவா? இது ஒரு கருத்து மட்டுமே. தமிழ் சகோதரர்களுக்கே இதனை விடுகின்றோம். சிலவேளை இவ்வசனங்கள் முஸ்லிம் சமூகத்திற்கு ஓரளவே பொருந்துமெனக் கருத முடியும்.
உண்மையில் முஸ்லிம் சமூகத்தில் காணப்படுவது யுத்தத்தால் ஏற்பட்ட பௌதீகப் பாதிப்புகளோடு அரசியல் ரீதியில் பயங்கரத் தேக்க நிலையும் காணப்படுகின்றது. அதனைக் கீழ்வருமாறு மிக சுருக்கமாகத் தரலாம்.
கலாநிதி பதியுதீன் மஹ்மூத், ஏ.சி.எஸ் ஹமீத் போன்ற சிலர் கடந்து வந்து சாதித்த அரசியல் பாதையொன்றுள்ளது. அப்போது வடக்கு கிழக்கின் அரசியல் தலைமைகளும் அவர்களுக்குப் பின்னாலேயே நின்றது.
பின்னர் அஷ்ரப் இப்பாதையை புரட்சிகரமாக மாற்றினார் எனலாம். எனினும் அவரின் இறுதிக் காலப்பிரிவில் பழைய பாதைக்கே திரும்புவது போன்றும் தோன்றியது
அஷ்ரபின் பின்னர் அவர் அமைத்த கட்சி சிதறி சின்னாபின்னமாகிப் போயிற்று. அஷ்ரப் கடந்துவந்த பாதையின் அடையாளமே மாறிப் போய்விட்டது போல் இப்போது தெரிகிறது.
விளைவாக இப்போது முஸ்லிம்கள் அரசியல் வழிகாட்டல்கள் இல்லாதுபோன அநாதைகள். பெருத்ததொரு தடுமாற்ற நிலையிலேயே அவர்கள் நிற்கின்றனர். இந்நிலையில் முஸ்லிம் அரசியல் நோய்ப் படுக்கையில் முடிவு காண வழி தெரியா நிகழ் காலத்தில் வாழ்கிறார்கள் என எண்ணத் தோன்றுகிறது. முஸ்லிம் சமூகத்தின் புத்திஜீவிகள் இதுபற்றிய பிரக்ஞையில் இருக்கிறார்களா என்பது கூட பெருத்த சந்தேகமான விடயமாகவே உள்ளது.
அந்தவகையில் ஜனாதிபதித் தேர்தலை இப் பின்னணியிலிருந்து பார்த்து நமக்கொரு அரசியல் முறைமையை உருவாக்கிக் கொள்ளும் சந்தர்ப்பமாக முஸ்லிம் அரசியல் தலைமைகள் பயன்படுத்திக் கொள்ளுமா?
ஏன் இவ்வாறு முஸ்லிம் மற்றும் தமிழ்த் தரப்பினரைப் பார்த்துச் சொல்கிறோம்?
தமிழ்முஸ்லிம் சமூகப் பிரச்சினைகளுக்கு அதிகாரப் பகிர்வு அடிப்படையிலான தீர்வொன்றை பெறுவதை அழுத்திய பேச்சுவார்த்தைகளும் போராட்டங்களும் மிகப் பெரும்பாலும் ஏமாற்றத்திலேயே முடியும். அதனை நோக்கிச் செல்ல இன்னொரு முறை நன்கு பின்வாங்கியே செல்ல வேண்டும். அப் பின்வாங்கலை எவ்வாறு வெற்றிகரமாகவும் மிகப் பயனுள்ளதாகவும் அமைத்துக் கொள்ளலாம் என்பதுவே இப்போதுள்ள மிக முக்கியமான அடிப்படையான அரசியல் தெரிவாகும் என்பது எனது அபிப்பிராயம். இறுதியாக சிங்களப் பெரும்பான்மை சகோதரர்களுக்கு இரண்டு வார்த்தைகள்.
சிறுபான்மையினரை நாங்கள் இந்நாட்டு பிரஜைகள், இது எம் தாய் நாடு என்று சிந்திக்கும் சூழலை ஏற்படுத்திக் கொடுங்கள். அடுத்தது சிறுபான்மைக்கும் தலைமை வகிக்கத்தக்க ஒரு தலைவரை ஜனாதிபதித் தேர்தல் மூலம் தெரிவு செய்ய முடியுமா எனப் பாருங்கள்.
No comments:
Post a Comment