Saturday, January 30, 2010

பாசம்

பாசம்

மணியாடர் தாளில் கையெழுத்திட முடியாமல் விரல்கள் நடுங்கின. ‘பார்வதி அம்மாள்’ என்று பெரிது பெரிதாய் எழுத்துக்கள்.தடுமாறி தடுமாறி எழுதி முடித்தாள் அந்த வயதான பாட்டி...

“என்னம்மா...ஃபாரம் முழுக்கவே உங்க கையெழுத்துப் போடறீங்க” என்று கிண்டலடித்தார் தபால்காரர்.

நோட்டுகளை எண்ணிக் கொடுத்தார்.

“வேற கடுதாசி எதுவும் இல்லியா?”

“நாளைக்கு வருதா பார்க்கலாம்...”என்றார், இன்றைக்கு இல்லை என்ற குறிப்புடன்.

பக்கத்து வீட்டு பொன்னி எட்டிப் பார்த்தாள். “என்ன பாட்டி...பேரன் அனுப்பிட்டானா?...”
பார்வதியின் அருகில் வந்தாள். “எப்ப வரானாம்...”
“வருவான். அவனுக்கு எப்ப வசதியோ...”

கிழவி உள்ளே போய்விட, பொன்னி நொடித்துக் கொண்டாள். “பாரேன் கிழத்துக்கு எவ்வளவு திமிரு. பேரன் மாசா மாசம் சுளையா பணம் அனுப்பி வச்சிடறான். கிழவிக்கு அப்புறமும் பேராசை. இந்த மாதிரி மனுசங்களுக்குத்தான் பணம் தேடி வருது...”

பின்னாலேயே உள்ளே போனாள். “ஆத்தா, .பாலு வேணும்...அதுக்காகத்தான் வந்தேன்”
“எவ்வளவு?” பால் செம்புடன் கிழவி வந்தாள்.
“இருநூறு. புள்ளைக்குக் காய்ச்சல். சோறு வேணாம்னு...”

கிழவி பாலை அளந்து ஊற்றினாள். பொன்னி கொடுத்த காசை வாங்கிப் புடவைத் தலைப்பில் முடிந்து கொண்டாள்.
‘பாரேன் புள்ளைக்குக் காய்ச்சல்னு சொல்றேன். அப்ப கூட காசுல கண்ணு. ஒரு பசு மாட்டைக் கட்டி வச்சுக்கிட்டு... வரட்டியைக் கூட காசு பண்ணிருது கிழவி.’ பொன்னி முனகிக் கொண்டே வெளியே போனாள்.

உண்மையிலேயே கிழவி மீது பக்கத்து, எதிர் வீட்டுக்காரர்களுக்கு எரிச்சல்தான். கிழவி ஒரு பைசா கூட விடுவதில்லை.
”பேரன் அனுப்புற காசை என்னதான் செய்யறாளோ...”

கிழவிக்கு வயசு எழுபதைத் தாண்டி விட்டது. சுகுமார், கிழவியின் மகள் வயிற்றுப் பேரன். கிழவிக்கு ஒரே மகள். அவள் துரதிர்ஷ்டம், மகள் போன வருடமே தவறிப் போனாள். சுகுமார் இந்தப் பக்கம் வருவதேயில்லை. கிழவியும் கிராமத்தை விட்டு நகருவதாயில்லை.

திடீரென கிழவி உடம்பு சரியில்லை என்று படுத்து விட்டாள். தபால்காரரை விட்டு சுகுமார் விலாசத்திற்குத் தந்தி அடிக்கச் சொன்னாள்.

‘ஒரு வாரத்தில் கிளம்பி வருவதாக’க் கடிதம் மட்டும் வந்தது அவனிடமிருந்து.
வந்த கார்டை அத்தனை உடம்பு நோவிலும் தூக்கிப் பிடித்து உன்னிப்பாய்ப் பார்த்தாள்.

தபால்காரர் கூடக் கிண்டலடித்துவிட்டுத்தான் போனார். “பேரன் கடுதாசியைப் பார்த்திட்டீல்ல... இனிப் பொழைச்சுக்குவே”
ஆனால் கிழவிக்குப் போறாத காலந்தான். திடீரென மிகவும் முடியாமல் போய், தூக்கத்திலேயே மூச்சுப் பிரிந்து விட்டது.
பேரன் வந்து சேர்ந்தான்.
காரியங்கள் முடிந்தபின் தபால்காரர் அவன் எதிரில் வந்தார். “இதைக் கிழவி உன் கையிலே கொடுக்கச் சொல்லிச்சு” என்றார்.
தபால் அலுவலக சேமிப்புக் கணக்குப் புத்தகம்.
“நீ அனுப்பின பணம் எல்லாம் இதுலதான் போட்டு வச்சுது.”
சுகுமார் திகைப்புடன் பார்த்தான்.

“மணியார்டர் பாரத்துல ஒத்தை வரி இல்லியேன்னு ரொம்பவும் ஏங்கிப் போச்சு. அந்தக் கார்டைப் பார்த்த பிறகுதான் அதுக்கு மனசு சமாதானமாச்சு. அந்தக் கார்டையே வச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கும்”.
சுகுமார் தலைகுனிந்தான்.
“கடைசி வரை தன் உழைப்பிலேயே வாழ்ந்துட்டுப் போயிட்டா. அதுக்குத் தேவைப்பட்டதெல்லாம் பாசம்தான்... பாவம்... கடைசி வரை கொடுப்பினை இல்லை.
தபால்காரர் நகர்ந்து போனார்.
சுகுமார், மாடத்தில் மடித்துப் பத்திரமாய் வைக்கப்பட்டிருந்த கார்டையே வெறித்தான், கண்ணீருடன்.
அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌ வாழ்த்துக்க‌ளோடு,


A. Mohammad Alavudeen | Cash Control | Finance & Risk Management | Emirates Group
(: +9714-7083176 | 6: +9714-2864132 | *: mohammad.alavudeen@emirates.com

No comments: