ஊமையாய் நான்.......
உள்ளம் என்னும்
பள்ளத்தில்
உறவுகளையும்
உணர்வுகளையும்
அடக்கம் செய்துவிட்டு
அடக்கமாய்
அரபுலகத்திற்கு
அடைக்கலமாகிவிட்டேன்!!
கனவுகள் பொய்த்துப்போய்
கனத்த இதயத்துடன்;
கண்முன்னே நின்ற
கடமைக்குக் கட்டுப்பட்டு
கண்காணாத் தேசத்தில் இப்படி நான்!!!
வறண்டத் தொண்டையுடன்
நனைந்தக் கண்களுடன்
குலுங்கிக் குலுங்கி அழும் உன்
குரலுக்கு முன்
ஊமையாய் எத்தனையோ முறை நான்!!
இங்கே
பல் துலக்குவதிலிருந்து
இரவு
படுக்கைக்குச் செல்லும் வரை
நிமிடம் தவறாத நேரம்தான்;
தனித்த நேரத்திலும்
துளிர்த்த உன் நினைவுகள் பாரம்தான்!!!
மனம் பிடித்து
மணம் முடித்தோம் நாம்;
இப்போது
பணம் எடுக்க
பாலைவனத்தில் நான்!!
அழுக்கு ஆடைகள் போட்டாலும்
புத்தம் புதிதாய் என் இதயத்தில் நீ மட்டும்தான்!!!
சுட்டெரிக்கும் வெயிலும்
சுகமாய்தான் இருக்கும் உன்
கடிதம் என் கையில் இருக்கும் வரை.....
மணம் முடித்தும்
மணக்காத நம் வாழ்க்கை;
இன்னும் எத்தனை காலத்திற்கு
வாழாவெட்டியாய்
நான் இங்கே
நீ அங்கே!!!
- யாசர் அரஃபாத்
No comments:
Post a Comment