அரிய ஆமை....
உள் ஒன்று வைத்து
புறம் ஒன்று பேசத் தெரியாது – அதனால்
புறம் மட்டும் பேசுவோம்!
ஒன்றுக் கூடி நிற்போம் என்று
குழு குழுவாகக்
குரல் கொடுப்போம்
தனித் தனியாக!
கட்டி அணைப்போம்
மாற்றாரை;
எட்டி உதைப்போம்
உறுப்பின் ஒரு பகுதி சதையை!
துள்ளி எழுந்தோம்
கிள்ளி எறிய அறியாமையை;
ஒற்றுமை என்றால்
ஒய்யாரமாய் நடக்கும்;
நாங்களெல்லாம் அரிய ஆமை!!
மறுமை என்பதை
மறந்துவிட்டு
மணிக்கணக்கில் பேசுவோம்
மேடைப் போட்டு;
ஒற்றுமை என்றுச் சொல்லி
தோளைத் தொட்டுச் சொன்னால் நடக்கும்
எங்களுக்குள் ஜல்லிக்கட்டு!!
வரிக்கு வரி பதில் சொல்லுவோம்
குர்-ஆன் சுன்னா வழிமுறையில்;
எதிர்த்துக் குரல் கொடுத்தால்
குரல்வலையை நெரிப்போம் வலி முறையில்!!
வேண்டாம் இந்த விதிமுறை;
என்னாவாகும் நம் தலைமுறை!
கிடப்பில் போடுவோம் தற்புகழ்ச்சியை;
வெறுப்பால் காட்ட வேண்டாம் காழ்ப்புணர்ச்சியை!!
ஆளுக்கொரு மூலையிலே அமைப்பாக;
சொல்லிச் சொல்லி
சுருண்டுவிட்டோம் களைப்பாக!!
வேண்டிக் கேட்பதெல்லாம்
நமக்குள் ஒற்றுமையை;
வேரருத்துவிடுவோம் நம் வேற்றுமையை!!
கரத்தோடு கரம் கோர்த்து
மனதோடு மார்க்கம் நுழைத்து
சொத்தான சுவர்க்கம் செல்ல
சத்தான அன்பைத்தருவோம்;
ஆதரவுத்தருவோம்!!!!
-யாசர் அரஃபாத்
No comments:
Post a Comment