Tuesday, June 22, 2010

”மாநாடு சிறக்கும் ; செம்மொழி சிறக்குமா?”

”மாநாடு சிறக்கும் ; செம்மொழி சிறக்குமா?”

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் ஜூன் 23 முதல் 27 வரை நடைபெற இருக்கிறது. தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் சீரிய தலைமையில், துணை முதல்வர் ஸ்டாலினின் மேற்பார்வையில் சிறப்புடன் நடைபெற இருக்கும் இந்த மாநாடு எல்லா வகையிலும் வெற்றி பெறும்; வெற்றி பெற வேண்டும் என்று மனமார வாழ்த்து கிறோம். ‘உலகெலாம் தமிழ் முழக்கம் கேட்கச் செய்ய’ இந்த மாநாடு பேருதவியாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

ஆனால் செம்மொழி மாநாடு நடைபெறும் இத்தருணத்தில் தமிழ் நாட்டில் தமிழின் நிலை என்ன?

தமிழ் ஆர்வலர்களும் தமிழ்ச் சான்றோர்களும் தமிழ்ப் புலவர்களும் ‘தமிழ்நாட்டில் தமிழ் இல்லையே’ என்று புலம்பத் தொடங்கிச் சற்றொப்பக் கால் நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இன்று வரை அவர்களின் கவலை தீரவில்லை; கண்ணீர் வற்றவில்லை.

தில்லியைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று தமிழகத்தின் பள்ளிகளில் ஓர் ஆய்வை நடத்தியது. கிராமப்புறங்களில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் ஏறத்தாழ 65
விழுக்காட்டினர்க்குத் தமிழ்வழி இரண்டாம் வகுப்புப் பாட நூலைப் படிக்கக்கூட முடியவில்லை என்று அது கண்டறிந்துள்ளது.

தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடங்களில் தமிழ் இல்லை.

தமிழகத்தின் கடைத்தெருக்களில், அங்காடி வீதிகளில் தமிழ் இல்லை.

அரசு அலுவலகங்களில் தமிழ் இல்லை.

நீதிமன்றங்களில் தமிழ் இல்லை.

தமிழ்க் கல்லூரிகள் எல்லாம் கலைக் கல்லூரிகளாக மாறிவிட்டன.

தமிழ்ப் படித்தவர்களுக்கு வேலை இல்லை.

தொலைக்காட்சிகளிலும் (கலைஞர் தொலைக்காட்சி உட்பட) திரைப் படங்களிலும் தமிழும் இல்லை; தமிழ்ப்பண்பாடும் இல்லை; தமிழ் வாழ்வும் இல்லை.

நாளிதழ்களிலும் பருவ இதழ்களிலும் நடத்தப்படும் தமிழ்க் கொலைக்கு அளவே இல்லை. (பேராசிரியர் நன்னன் அவர்கள் இதைக் குறித்து அன்றாடம் கலங்குகிறார்; கதறுகிறார்; குமுறுகிறார். ஆனால் அவருடைய கதறல் யாருடைய காதிலும் விழுந்ததாகத் தெரியவில்லை)

தமிழர்கள் பலரும் ‘தமிங்கிலர்’ ஆகிவிட்டனர். ஆங்கிலம் கலக்காமல் யாருக்கும் ஒரு சொற்றொடர் கூட பேசவோ எழுதவோ இயலவில்லை.

கன்னித் தழிழ் இன்றைக்குப் ‘பண்ணித் தமிழ்’ ஆகிவிட்டது. (இதோ, ஓர் உரையாடல்: ‘நீ காலையில டிபன் பண்ணி டென் ஓ க்ளாக் மேல ஆபிசுக்கு போன் பண்ணிப் பேசு. அவன் ஈவினிங் வெயிட் பண்ணி உன்னை வீட்ல டிராப் பண்ணிடுவான். போன் பண்ண மிஸ் பண்ணிடாதே.’)

தமிழ்நாட்டில் தமிழின் அவல நிலையைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஒரே ஒரு வினா உள்ளத்தைத் துளைத்துக் கொண்டே இருக்கிறது :

”மாநாடு சிறக்கும் ; செம்மொழி சிறக்குமா?”

-சிராஜுல்ஹஸன்

நன்றி : சமரசம் ( 16 – 30 ஜுன் 2010 )


Sheikh Sintha Mathar Masoud
dateTue, Jun 22, 2010 at 6:17 PM
subjectமாநாடு, செம்மொழி .........


மாநாடு சிறக்கும்; செம்மொழி சிறக்குமா?
மாநாடு சிறக்கும்; செம்மொழி இறக்கும் ……

ஷேக் சிந்தா மதார்

No comments: