Monday, June 7, 2010

என் பெயர் நூர்ஜஹான்

என் பெயர் நூர்ஜஹான்

என் பெயர் நூர்ஜஹான்
என் வயது இருபத்து எட்டு.

எங்கள் வீடு இன்றைக்கு
பரபரப்பாக இயங்கியது
அந்த பரபரப்புக்கு
நான்தான் காரணம்
என்றாலும் குஉட
எனக்கு மட்டும் ஏனோ
எந்த பரபரப்பும் இல்லை.
எனக்கு இயல்பாகவே
இவையெல்லாம் இருந்தன.

இது எத்தனையாவது முறை?
உனக்க ஞாபகம் இல்லை
ஒன்று இரண்டு முறையென்றால்
ஒரு வேளை ஞாபகமிருக்கும்

என்னைப் பெண் பார்க்க வருவதை
என் அம்மா யாரிடமோ
சொல்லிக் கொண்டிருந்தாள்
‘சென்ற முறை வந்தவர்கள்
என்ன சொன்னார்கள்?’
எதிர்த்தரப்பிலிருந்து இளக்காரமாய்
கேள்வி பிறந்தது
‘பெண்ணென்றால் ஆயிரம் பேர்
பார்த்து விட்டு செல்வது
இவ்வுலகில் நடப்பதுதானே…
யாருக்கு யார் என்று
இறைவன் எழுதி வைத்துள்ளானோ
அப்படித்தானே எல்லாம் நடக்கும்’
எதிர்கேள்விக்கு பதில் சொல்லி
என் அம்மா சமாளித்துப் பேசுவாள்
ஆம்…
இப்படிப் பேசியே என் அம்மா
சுமாதானம் கொள்வாள்.

வாசலில் ஆட்டோ சப்தம்
அவர்கள் வந்து விட்டார்கள்.
காத்திருந்த தந்தையார்
ஓடிப்போய் வரவேற்று
அழைத்து வந்தார்.
இப்படி எத்தனை முறை
என் தந்தை ஓடியிருப்பார்?
ஏன் அவருக்கு மட்டும்
இன்னும் சலிப்பே இல்லை?
எனக்கு ஆச்சரியமாய் இருக்கும்.
அதுதான் பெற்றவரின் கடமையா?

என்னைச் சுற்றியும் மாப்பிள்ளை வீட்டார்
என்ன படித்திருக்கின்றாய்?
என்ன ஓதியருக்கின்றாய்?
இப்படியான கேள்விகளுக்கெல்லாம்
படபடவென்று பண்புடனே
பதில் உரைப்பேன்ஃ
‘நல்ல புத்திசாலி பொண்ணு’
வியப்புடன் மாப்பிள்ளை வீட்டார்
விழிகளை உயர்த்துவார்கள்.
இப்படியான கேள்விகள்
எனக்கொன்றும் புதிதல்லவே.
இந்தக் கேள்விகளுக்கான பதில்கள்
எனக்குள் பதிந்து போனவைதானே….
எத்தனை முறை
இப்படி பதிலுரைத்திருப்பேன்…
எனக்கல்லவா தெரியும்.

‘எங்களுக்குப் பெண் பிடித்து விட்டது.
இருபது பவுன் நகையும்
இருபது ஆயிரம் பணமும்
எங்களுக்குக் கொடுத்து விடுங்கள்!’

என் பொண்ணுக்குச் செய்ய
எனக்கும் ஆசையிருக்கு.
ஆனால் அவ்வளவு முடியாதுங்களே…’
என் தந்தையின் தழுதழுத்த குரல்
எனக்கு அழுகையை வரவழைத்தது.
பெண்கள் மட்டும் என்ன
ஏலச்சந்தையில் விடப்படும்
ஏலப்பொருட்களா?

என் வயதொத்த தோழிகள்
இடுப்பில் குழந்தையுடன்
செல்லுகின்ற போதெல்லாம்
எனக்கும் இப்படி ஆசை பிறக்கும்
‘இறைவா… எனக்கும்
திருமண பாக்கியம் கொடுப்பாயாக’
இறைவனிடம் இறைஞ்சுவேன்.

கண்ணாடியில் முகம் பார்த்தேன்
என் தலையில் ஒன்றிரண்டு வெள்ளை முடிகள்.
‘உனக்குன்னு ஒருத்தன்
பிறக்காமலா போயிருப்பான்?’
அடிக்கடி என் பாட்டி
அன்புடனே சொல்லிக் கொண்டிருப்பாள்.
‘எனக்குன்னு ஒருத்தன்
பொறக்காமலா போயிருப்பான்?’
எனக்கும் நம்பிக்கை ஆசைகள்
அப்போதெல்லாம் பிறக்கும்.

என் பெயர் நூர்ஜஹான்
என் வயது இருபத்து ஒன்பது!

மு. அய்யூப் கான்(கவிஞரை தொடர்பு கொள்ள 97887 81404)

No comments: